வைஃபை ஆன் செய்ததும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் சந்தித்த படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்த வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்த தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, அதன் பின் செப்டம்பர் 3 ஆம் தேதி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
அமித் ஷாவை ஹெச்.ராஜா மரியாதை நிமித்தமாக சந்தித்த அதே நாளில் சில மணித் துளி இடைவெளியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசனும் அமித் ஷாவை சந்தித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். அவர் செல்லும் முன் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.
கூடவே திமுக, அதிமுக இரண்டையும் ஒழிப்பதே எனது வேலை என்று முழங்கிவிட்டுச் சென்றார். அண்ணாமலையின் விமர்சனத்துக்கு தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். மேலும், கூட்டணி பற்றி பாஜகவில் தனி நபர் அறிவிக்க முடியாது, தேசிய தலைமைதான் முடிவெடுத்து அறிவிக்கும் என்றும் சொன்னார் ராம ஸ்ரீனிவாசன். அதேபோல முன்னாள் ஆளுநர் தமிழிசையும், நாகரிகமாக விமர்சிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ள அரசியல் சூழலில்… ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹெச்.ராஜா டெல்லி சென்று அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து பேசியிருக்கிறார்.
அதே நாளில் அமித் ஷாவை சந்தித்த ஜி.கே.வாசன், பாஜகவைச் சேர்ந்த ராஜா பேசத் தயங்கிய விஷயங்களைப் பற்றி அமித் ஷாவிடம் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அதாவது கடந்த 2023 செப்டம்பர் விநாயகர் சதுர்த்தியன்றுதான் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை இழிவுபடுத்தி வந்ததால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக கூட்டணி இனி இல்லை என்று அறிவித்தார். சில நாட்களிலேயே அதிமுக மாசெக்கள் கூட்டம் கூடி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது.
அந்த சூழலிலேயே மீண்டும் அதிமுக-பாஜக ஒற்றுமையை ஏற்படுத்தவும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் பாஜகவையும், அதிமுகவையும் தக்க வைக்கவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கடுமையாக முயற்சி செய்தார். இதுகுறித்து சமரச தூதர் ஜி.கே.வாசன் என்ற தலைப்பில் 2023 செப்டம்பர் 21 டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியானது.
‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்கள் வேண்டுமென்றால் அதிமுக-பாஜக கூட்டணி தொடர வேண்டும்’ என்று அமித் ஷா, மோடி வரை அப்போது பேசினார் வாசன். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அது சாத்தியப்படவில்லை.
இந்த நிலையில்தான் இந்த வருடம் செப்டம்பர் 3-ஆம் தேதி அமித் ஷாவை சந்தித்த வாசன், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மேற்கொண்ட தவறான அரசியல் முடிவால் குறைந்தபட்சம் 5 எம்.பி.க்களை நாம் இழந்துவிட்டோம். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை ஆளும் திமுக இப்போதே தொடங்கிவிட்டது. 200 இடங்களில் ஜெயிக்க வேண்டுமென்ற மிகப்பெரிய இலக்கோடு அவர்கள் தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான வலிமையான அணி இன்னும் அமையவில்லை. அதிமுக ஒரு அணி, பாஜக ஒரு அணி, சீமான் ஒரு அணி, புதிதாக வருகிற விஜய் ஒரு அணி என திமுகவுக்கு எதிராக நான்கு அணிகள் இருந்தால் திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி ஓட்டுகள் சிதறும். இதனால் திமுக மீண்டும் எளிதாக ஆட்சியைப் பிடித்துவிடும்.
எனவே தமிழ்நாட்டில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமானால் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால்தான் முடியும்’ என்று வாக்கு சதவிகித விவரங்கள் மற்றும் அரசியல் கணக்கீடுகள் என சில டேட்டாக்களை அமித் ஷாவிடம் கொடுத்திருக்கிறார் ஜி.கே.வாசன்.
இந்த வியூகம் என்பது அண்ணாமலையின் வியூகத்துக்கு நேர் எதிரானது என்று அறிந்தும், அமித் ஷாவிடம் விளக்கியிருக்கிறார் வாசன். இதைக் கேட்ட அமித் ஷா, வாசனுக்கு எவ்வித உத்தரவாதமும் தராமல், ‘இதுபற்றி மோடியிடம் பேசுகிறேன். முடிவை அப்புறம் மேற்கொள்ளலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.
எனவே 2026 இல் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணியை உருவாக்க அச்சாரம் போட்டுள்ளார் வாசன்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாடர்ன் தியேட்டர்ஸ் தந்த இசை விருந்து ’வண்ணக்கிளி’!
சென்னை ரயில்வே தண்டவாளத்தில் முடிந்த கேரள காதல் ஜோடியின் வாழ்க்கை!