டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் பிரசாந்த் கிஷோர் இவர்தான்… ஆதவ் – அன்புமணி கூட்டணி மூவ்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் வடகிழக்கு பருவ மழைக்கான  முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பற்றிய அப்டேட்டுகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“பருவ மழைக்கு எப்படி முன் தயாரிப்புப் பணிகள் நடக்கின்றனவோ… அதேபோல தேர்தல் என்னும் பருவ மழையை எதிர்கொள்ள திமுகவைத் தொடர்ந்து,  எதிர்க்கட்சியான அதிமுகவும் ஏற்பாடுகளில் இறங்கிவிட்டது.

திமுக  வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள  எப்போதோ பணிகளைத் தொடங்கிவிட்டது.  நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த சில வாரங்களில் அதாவது கடந்த ஜுலை 20 ஆம் தேதியே,  சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்தார்  திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்.

கே.என்,நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்., இந்த குழு கூடும்போதெல்லாம் துணை முதல்வர் உதயநிதி நடு நாயகமாக அமர்ந்து ஆலோசனை மேற்கொள்வதை காண முடிகிறது.

திமுக இவ்வாறு தேர்தல் பணிகளை மூன்று மாதங்களாக தீவிரமாக செய்து வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக  அக்டோபரில் இருந்து  தேர்தல் பணிகளில்  ஈடுபடத் தொடங்கியிருக்கிறது.

கடந்த அக்டோபர்  1 ஆம் தேதி அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அன்றே அதிமுக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டது.  ஐடி விங் நிர்வாகிகள் கூட்டத்திலேயே  2026 தேர்தலை திறம்பட எதிர்கொள்வோம் அதற்கான முக்கிய திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன என்று கூறியிருந்தார் எடப்பாடி.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் பணிகளை ஒருமுகப்படுத்தவும், விரைவுபடுத்தவும் 2021 இல் திமுக பிரசாந்த் கிஷோரை பயன்படுத்தியது போல, அதிமுகவும் இப்போது தேர்தல் உத்தி வகுக்கும் குழுவை அணுகியிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் எதிர்க்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்று  ஆளுங்கட்சியாகியிருக்கிறது. சந்திரபாபு நாயுடு முதல்வராகிவிட்டார், பவன் கல்யாண் துணை முதல்வராகியிருக்கிறார்.  ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் உத்தி வகுப்பு அதாவது ஸ்டேட்டர்ஜி செயல் திட்டங்களை மேற்கொண்டவர்  ராபின் ஷர்மா என்பவர்.

பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் கம்பெனியில் இயக்குனராக இருந்த  ராபின் ஷர்மா தொழிலை கற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியேறி, ஷோடைம் கன்சல்டன்சி (STC)  என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இவர்தான் தெலுங்குதேசம் கட்சியின் ஒட்டுமொத்த தேர்தல் செயல் திட்டத்தை உருவாக்கினார்.

சென்ட்ரல் கமாண்ட் சென்டர் எனப்படும் தலைமைக் கட்டளை மையத்தை உருவாக்கியவர் ஆந்திராவின் 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் கிளை அலுவலகங்களை உருவாக்கினார். ஒட்டுமொத்தமாக 1400 பேர் பணியாற்றினார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் வரை தொடர்பில் இருந்து ஒவ்வொரு  தொகுதிக்கும் தனித்தனியான செயல் திட்டங்களை உருவாக்கினார்கள். இதன் மூலம் தெலுங்குதேசம் மட்டுமே  136 இடங்களில் வெற்றி பெற்றது., இப்படிப்பட்ட வெற்றியை சந்திரபாபு நாயுடுவுக்கு பெற்றுக் கொடுத்த ராபின் ஷர்மாவிடம்தான் அதிமுக பேசியிருக்கிறது என்கிறார்கள்.

இது ஒரு பக்கம் என்றால் வலுவான கூட்டணியை 2026 இல் அமைத்தே தீர வேண்டும் என்பதிலும் எடப்பாடி பழனிசாமி தீவிரமான முயற்சியில் இருக்கிறார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

‘அண்மையில் விசிக நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் கலந்துகொள்ளலாம் என்று அவர் பேசிய ஒரு வார்த்தை கூட்டணி பற்றிய பல்வேறு விவாதங்களை உருவாக்கியது. ஆனால்  உளுந்தூர்பேட்டையில் நடந்த மது ஒழிப்பு மாநாட்டில் திமுக கூட்டணிக் கட்சிகள் மட்டுமே கலந்துகொண்டனர்.

அப்போதைக்கு இந்த பிரச்சினை ஓய்ந்தாலும் அதிமுகவுடன் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து தொடர்பில்தான் இருக்கிறார்.  அவ்வப்போது டெல்லி சென்று வரும்,  ஆதவ் அர்ஜுனா அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், அதிமுக ஐடி விங் மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன் உள்ளிட்டோருடன் பேசி வருகிறார்.

மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு பற்றிய சர்ச்சைகள் முடிய இருந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாதான் திமுகவையும், துணை முதல்வர் உதயநிதியையும் கடுமையாக தாக்கி பேட்டி கொடுத்தார்.  திமுக தரப்பில் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  ஆ.ராசா வெளிப்படையாகவே வலியுறுத்தினார். முதல்வர் ஸ்டாலின் சொல்லித்தான் இந்த பேட்டியையே அவர் அளித்தார். ஆனபோதும் கூட மாநாட்டு தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலும் ஆதவ் அர்ஜுனாவுக்கு உரிய முக்கியத்துவத்தை தவறாமல் அளித்து திமுகவுக்கு வேறு வகையில் பதில் சொன்னார் திருமா.

திமுகவில் இருந்தபோதே ஆதவ் அர்ஜுனுக்கும் உதயநிதிக்கும் ஆகாது.  அங்கிருந்து அவர் வெளியே வந்ததற்கு காரணமே உதயநிதிதான். அதனால் மீண்டும் திமுக வெல்லக் கூடாது என்பதுதான் ஆதவ் அர்ஜுனாவின் அஜெண்டாவாக இருக்கிறது. இந்த அடிப்படையில் அதிமுக புள்ளிகளோடு அதிகாரபூர்வமற்ற வகையில் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார் ஆதவ் அர்ஜுனா என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.

இன்னொரு பக்கம் விசிகவின்  நேரடி எதிரியான பாமகவும் தனது கூட்டணி முடிவில் மாற்றம் செய்யலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுகவோடு கூட்டணி அமைக்கலாம் என்று விரும்பினார். அதனால்தான் டெல்லியில் இருந்த  முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வேகவேகமாக தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று டாக்டரை சந்தித்துப் பேசினார். ஆனால், அப்போது டாக்டர் அன்புமணியோ,  ‘இது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் மோடியை ஆதரிக்க வேண்டும் அல்லது மோடியை எதிர்க்க வேண்டும். அதிமுக அணியில் சேர்ந்தால் சரியாக இருக்காது’ என்று கூறி பாஜக கூட்டணியை முடிவு செய்தார்.

இந்த நிலையில் இப்போது, ‘நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பாஜகவோடு கூட்டணி வைத்து ஒன்றுமில்லாமல் போய்விட்டோம்.  கேபினட் மினிஸ்டர் பதவியும் பாஜக நமக்கு கொடுக்கவில்லை. இதனால்  வரும் சட்டமன்றத் தேர்தலில் என்னுடைய கருத்துப்படி அதிமுக கூட்டணியில்தான் நாம் இருக்க வேண்டும்’ என்று அன்புமணியிடம் கூறியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

சில மாதங்களுக்கு முன் நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக நின்றாலும்… அதிமுக இடைத் தேர்தலை புறக்கணித்த காரணத்தால்  அதிமுகவின் ஆதரவை வெளிப்படையாக கேட்டது. ஜெயலலிதாவின் படம் போட்டே அன்புமணி பிரச்சாரமும் செய்தார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி, ‘ அதிமுகவுக்கு பெருமைதான்’ என்று பாமகவுக்கு அனுசரனையாகவே பதில் அளித்தார்.

இந்த நிலையில்தான் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருப்பதே பாமகவுக்கு நல்லது, அப்போதுதான் திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்து பலன் காண முடியும் என்று நினைக்கிறார் டாக்டர் ராமதாஸ். இதற்கு அன்புமணியும் மறுக்கவில்லை. இப்படி பாமக, விசிக என இரு கட்சிகளோடும் வெவ்வேறு வகைகளில் தொடர்புகளை பேணி வருகிறது அதிமுக.

இப்படிப்பட்ட சூழலில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி இன்று (அக்டோபர் 14)  கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று சில நாட்களுக்கு முன் மறைந்த முரசொலி செல்வம் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  மணியின் போன் மூலம் முரசொலி செல்வத்தின் மனைவி  செல்வியிடம்  பேசி தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். இது அரசியலுக்கு அப்பாற்பட்டதுதான் என்றாலும்…செல்வியிடம் ராமதாஸ் போனில் பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

விசிக, பாமக இரண்டில் ஒன்று அதிமுக கூட்டணிக்கு வரும் என்று எடப்பாடி நம்பிக்கையாக இருக்கிறார். அதனால்தான் கட்சியை சட்டமன்றத் தேர்தலுக்கு தயார் படுத்தும் வேலைகளை அவர் தீவிரப்படுத்தியுள்ளார்.

மாவட்டங்களில்  ஒன்றியம், நகரம், பேரூர்  அளவிலும், மாநகரங்களில் பகுதி, வட்ட அளவிலும் செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்த உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் இந்த செயல்வீரர் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த செயல்வீரர்கள் கூட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள்,  அமைப்புச் செயலாளர்களை பங்கேற்க உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி. சேலத்தில் நடந்த செயல்வீரர் கூட்டங்களில் தங்கமணி, விஜயபாஸ்கர், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.  மாவட்டங்களில் நடக்கும் இந்த செயல்வீரர் கூட்டங்கள் 23 ஆம் தேதி வரை நடக்க வேண்டும். அதையடுத்து மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும்.

திமுக ஆட்சியில் செய்த தவறுகள், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம், அம்மா உணவகம் உள்ளிட்ட  சாதனைத் திட்டங்கள், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில்  தண்ணீர் வரி,  சொத்து வரி போன்றவற்றோடு இப்போது குப்பை வரியும் போடுகிறார்கள் என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி.  மாவட்ட அளவிலான செயல்வீரர் கூட்டங்களை முடித்தபின், சட்டமன்றத் தேர்தல் பணிக் குழுக்கள் பட்டியலை வெளியிட இருக்கிறார் எடப்பாடி.

கூட்டணி குறித்த நம்பிக்கையால்தான் தேர்தல் கட்சி வேலைகளில் தீவிரமாகியிருக்கும் எடப்பாடி… அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை சேர்க்க வேண்டாம் என்பதிலும் உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.

இதே நேரம்  ஆதவ் அர்ஜுனா  நகர்த்தும் மூவ்கள்  திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கவனத்துக்கு சென்றபடியே இருக்கின்றன. ஆயினும் அவர், ‘திருமா திமுக கூட்டணியை விட்டுப் போக மாட்டார்’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.

2019  உள்ளாட்சித் தேர்தல்- நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் என தொடரும் கூட்டணி அப்படியே  2026 இலும் நீடிக்கும் என்றுதான் ஸ்டாலின் சொல்லிவருகிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவை, சேலம், மதுரையில் வெளுத்து வாங்கும் மழை!

சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள்… மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel