வைஃபை ஆன் செய்ததும் பிரதமர் நரேந்திர மோடி சென்னை பயணம் பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்துக்கொண்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“கடந்த பிப்ரவரி 27, 28 தேதிகளில் திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு வந்து சென்ற பிரதமர் மோடி ஒரு வாரத்திற்குள் மீண்டும் தமிழ்நாடு வருகிறார்.
மார்ச் 4ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு அரசு நிகழ்வுக்காக வருகிற பிரதமர் மோடி, அதை தொடர்ந்து சென்னை நந்தனத்தில் இருக்கிற ஒய்எம்சிஏ மைதானத்தில் பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய மோடி… அதிமுகவின் இருபெரும் தலைவர்களான எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் வானளாவப் புகழ்ந்தார். அதற்கு அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ’எதிர்க்கட்சிகள் கூட பாராட்டும் அளவுக்கு ஆட்சி செய்தவர்கள் எங்கள் தலைவர்கள்’ என்று நக்கலாக பதில் கொடுத்தார்.
அதிமுகவை எப்படியாவது பாஜக கூட்டணிக்குள் மீண்டும் கொண்டு வந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான், மோடி அவ்வாறு பேசினார். அதனால்தான் அதிமுகவுக்கு ஆகாத அண்ணாமலை இல்லாமல் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவை பாஜக அமைத்திருக்கிறது.
ஆனால், எடப்பாடியோ அதற்கு எவ்வித இடமும் கொடுக்காமல் அதிமுக தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தான் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மார்ச் 2 ஆம் தேதி எடப்பாடியை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எடப்பாடியிடம், ’பாஜக மீண்டும் கூட்டணிக்கு அழைப்பதாக எல்லாரும் பேசுறாங்க என்னண்ணே நடக்குது’ என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விளக்கமாக பதில் அளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதாவது, ‘ நாம் பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் நமக்குள்ள பலத்தை தெரிந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சி மீண்டும் நம் மீது சவாரி செய்ய முயற்சி செய்கிறது. அதற்கு எவ்வகையிலும் நாம் இடம் கொடுக்க மாட்டோம். ஒரு வாதத்துக்காக, தேர்தலுக்கு முன்பு நாம் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கூட, கணிசமான எம்பிக்களை நாம் வெற்றி கொள்ளும் பட்சத்தில், அந்த எம்பிக்களை உருட்டி மிரட்டி பாஜகவுக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்வார்கள்.
நாம் அவர்களோடு கூட்டணி வைக்காமல் இருந்தால் கூட இப்போதும் வேறு வகைகளில் நமக்கு ஏதாவது பிரச்சனை கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களோடு கூட்டணி வைத்தாலும் பிரச்சினைதான், வைக்கவில்லை என்றாலும் பிரச்சினைதான்.
அதனால் தான் இரட்டை இலை சின்னம் அது இது என்று பன்னீரை வைத்து கிளப்பி விடுகிறார்கள், இது எதுவும் நடக்காது. இரட்டை இலை சின்னம் நம்மிடம் தான் உறுதியாக இருக்கும். இனிமேல் பாஜகவால் அதை எதுவும் செய்ய முடியாது.
ஆந்திராவில் எப்படி ஜெகன்மோகன் ரெட்டி ஜெயித்த பிறகு, முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தனியாக நிற்கிறாரோ அதேபோல நாமும் தேர்தலை சந்திப்போம். எதுவாக இருந்தாலும் சந்தித்துக் கொள்ளலாம். ஆனால், நமது தலைமையில் தான் கூட்டணி, அதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
எடப்பாடி இப்படி உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் டெல்லி சென்று வந்த தமிழக பாஜக முக்கிய பிரமுகர் ஒருவர், தனக்கு நெருக்கமானவர்களிடம்… ‘அமித் ஷா, மோடி இருபெரும் தலைவர்களும் வெளிப்படையாக அழைப்பு விடுத்தும் எடப்பாடி கண்டுக்கலை. அண்ணாமலை இல்லாமல் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு அமைத்திருக்கிறோம்.
எம்ஜிஆரை, ஜெயலலிதாவை மோடியே புகழ்ந்து பேசுகிறார். இதெல்லாம் எதற்காக? திமுகவை தோற்கடிக்க அதிமுகவும் பாஜகவும் இணைந்தால்தான் முடியும் என்பதற்காகத்தான். ஆனால், எடப்பாடி எங்களை அலட்சியப்படுத்துகிறார். மோடி சென்னை வந்து சென்ற பிறகு பாருங்கள் கச்சேரியை’ என்று பூடமாக சொல்லி வருகிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக கூட்டணி அழைப்பில் உள்நோக்கம்: ஜெயக்குமாருக்கு திருமா பதில்!
2024 ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வா?