“தமிழக ஆளுநராக நடிகர் ரஜினிகாந்த் நியமிக்கப்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. கட்சி ரீதியாக ரஜினி பேச தயங்குவதால் அவரை, ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநராக நியமித்து அதன்மூலம் வாக்குகளை அள்ளலாம் என்பது பிஜேபியின் கணக்காக இருக்கிறது.
மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகர் ரஜினியின் சந்திப்பில் அதிமுகவின் அரசியலும் அடங்கியிருக்கிறது” என ஒரு ட்விட் வெளியாகி இருந்தது. தொடர்ந்து அதைப் படிக்க ஆரம்பித்ததில் பல தகவல்கள் கிடைத்தன.
“ஆகஸ்ட் 8ம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திடீரென சந்தித்துப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘ஆளுநருடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசினேன். அதனை வெளியில் கூற முடியாது’ என்று தெரிவித்திருந்தது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது.
இதற்கு பல கட்சிகளும் விமர்சனத்தை வைத்ததுடன், ரஜினியின் அரசியல் 2.0 ஆரம்பித்துவிட்டது என்றும் பேசப்பட்டது. இது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால், இந்த இருவரின் பேச்சுக்குள்ளும் இருந்த ரகசியங்கள் பலருக்கும் தெரியாதது” என்பதுதான் அந்த ட்விட்டரில் கண்ட தகவல்.
“இந்த சந்திப்புக்குப் பிறகு ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்ததில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ‘ரஜினி வந்து தன்னைச் சந்தித்தார்.
தன்னைச் சந்தித்தபிறகு வெளியில்போய், செய்தியாளர்களிடம் அரசியல் பேசினோம் என்றார். இப்படி, தேவையில்லாத ஒரு பிரச்சினையை ரஜினி என்மீது உருவாக்கிவிட்டார்’ என ஆளுநர் தரப்பில் சொல்லப்படுவது முதல் விஷயம்.
அதேநேரத்தில் டெல்லி சுதந்திர தினவிழாவில் ரஜினியை சந்தித்த ஆளுநர் ’உங்கள் சகோதரரிடம் தாங்கள் வந்து என்னைச் சந்திக்கச் சொல்லும்படி இரண்டுமுறை சொல்லியிருந்தேனே’ எனக் கேட்க, அதன்பிறகே, ரஜினி ராஜ்பவனுக்குச் சென்றார் என்கிறது, சத்யநாராயணன் தரப்பு சொல்லும் இரண்டாவது விசயம்.
அதாவது, ஆளுநர் அழைத்ததன் பேரிலேயே ரஜினி சென்றார் என்கிறது சத்யநாராயணன் தரப்பு. ஆக ஆளுநர் அழைத்து ரஜினி சென்றாரா, இல்லை ரஜினியே நேரிடையாக சென்றாரா என்பதுதான் இவர்கள் சந்திப்பில் வெளிவராத ரகசியமாக இருக்கிறது.

நம் நாட்டின் 75வது சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவாகக் கொண்டாடப்படுவதற்கு நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டன. அப்போது இந்த விழா நிகழ்ச்சி குறித்து மத்திய அரசு ஒவ்வொரு மாநில பிரபலங்களிடமும் ஆன்லைனில் ஆலோசனை கேட்டது. தமிழகத்தில் ரஜினியிடமும் ஆலோசனை கேட்டது.
அதற்கு ரஜினி, ‘இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகன்களும் தங்களது சட்டையில் தேசியக்கொடியைக் குத்திக்கொண்டால் நன்றாக இருக்கும்’ எனும் ஒரு யோசனையை சொன்னார்.
‘ரஜினி சொன்ன இந்த யோசனை நன்றாக இருக்கிறதே’ என பிரதமர் மோடியிடம் மத்திய அரசு அதிகாரிகள் எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். ‘இந்தியாவுக்கு நல்ல ஐடியாவை ரஜினி சொல்லியிருக்கிறாரே’ என பிரதமர் மோடியும் சந்தோஷப்பட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து டெல்லி விழாவில் கலந்துகொள்ள ரஜினிக்கு அழைப்பு வந்தது.
அடுத்தகணம், ரஜினியும் டெல்லி புறப்பட்டுச் சென்று விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் பல பிஜேபி பிரபலங்களையும் சந்தித்த ரஜினி, மகிழ்ச்சியில் திளைத்துப் போனார்.
இந்த நிகழ்ச்சியில்தான் ஆளுநர், ரஜினியை அழைத்தாராம். அதன்பிறகு, டெல்லியிலிருந்து திரும்பிய ரஜினி, ஆளுநரைப் போய்ச் சந்தித்தார். இந்த ஆளுநர் சந்திப்பின் முக்கியக் காரணமே, அதிமுகவை ஒன்றிணைப்பதும், ஆன்மிக அரசியலை கொண்டுவருவதும்தான். இதைத்தான் ஆளுநரிடம் ரஜினி ஆலோசித்து இருக்கிறார்.

அப்போது அவர், ’அடுத்த தேர்தலில் பிஜேபி அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டுமானால் அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பது பெரிய விஷயமல்ல. அது தற்போது பிளவுபட்டிருப்பதுதான் கூட்டணிக்கே ஆபத்து.
ஆகையால், இன்று தனித்தனியாகப் பிரிந்து நிற்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரை ஒன்றிணைக்க வேண்டும். அப்படி இணைத்து அதை ஆன்மிக அரசியலாக்கினால்தான் பிஜேபிக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும்’ என ரஜினி ஆலோசனை சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ரஜினிகாந்தை நேரில் போய்ச் சந்தித்த சசிகலா, அவருடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்ததுடன், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தார். ஆனால், அப்போதே அதிமுக நிலை குறித்து பேசியதாகவும், அதை இணைக்க உங்களால்தான் முடியுமெனவும் ரஜினியிடம் சசிகலா கோரிக்கை வைத்ததாக ரகசிய தகவல்கள் கசிந்தன.
அதை மனதில்வைத்துத்தான் தற்போது பிளந்து நிற்கும் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஆளுநர் – ரஜினி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது” என கூடுதலாய் தகவலைக் கொட்டிய அந்த ட்விட்டர் பதிவின் இறுதியில், “இதன்மூலம் பிஜேபி தூதராக களமிறங்கியிருக்கும் ரஜினி, வருங்கால அரசியலில் அதிமுகவின் ஓர் அங்கமாக இருப்பார் எனவும், அவர்மூலம் இன்னும் பல ரகசிய தகவல்கள் வெளிவரும்” என்று சொல்லி முடிவுபெற்றிருந்தது.
டிஜிட்டல் திண்ணை: ஆளுநர்-ரஜினி சந்திப்பு: மோடியின் மெசேஜ் என்ன?