டிஜிட்டல் திண்ணை: ஆதவ் அர்ஜுனாவுடன் சந்திப்பு… திருமா கொடுத்த சிக்னல்… ஸ்டாலின் காட்டிய ரியாக்‌ஷன்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும்  ஆதவ் அர்ஜுனா – திருமா சந்திப்பு வீடியோ காட்சிகள் விசிக, திமுக புள்ளிகளிடம் இருந்து அனுப்பப்பட்டு. இன்பாக்சில் வந்து விழுந்தது. அதில் கூடவே சில எமோஜிகளும் இருந்தன. thiruma signal stalin reaction

‘அண்ணன் எங்க இருக்காரு?’ விசாரித்த ஆதவ்

சில உரையாடல்களுக்குப் பின் வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.’

“விசிகவை பொறுத்தவரை ஒரு அஜெண்டாவோடு செயல்பட்ட ஆதவ் அர்ஜுனா கடந்த டிசம்பர் மாதம் அக்கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பின் அவராகவே விசிகவில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டார்.

அதன் பின் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று (ஜனவரி 31)  இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி  வழங்கப்பட்டது. விஜய்யை சந்தித்த சில மணி நேரங்களிலேயே திருமாவளவனைச் சுற்றி எப்போதும் இருக்கும் விசிக நிர்வாகிகளுக்கு போன் போட்ட ஆதவ், ‘அண்ணன் எங்க இருக்காரு? பார்லிமென்ட்டுக்காக டெல்லிக்கு போயிட்டாரா?’ என்று கேட்டிருக்கிறார்.   

’அண்ணனோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லைங்க. அதனால டெல்லிக்கு கூட போகலை. இங்க சென்னையிலதான் இருக்காரு’ என்று அவர்கள் பழைய பாசத்தில் ஆதவ்விடம் சொல்லியிருக்கிறார்கள். உடனே திருமாவளவனுக்கு போன் செய்த ஆதவ், ‘அம்மாவின் உடல் நலம் விசாரித்துவிட்டு, சந்திக்க வரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதன் பிறகு  கட்சி அலுவலகத்துக்கு சென்று திருமாவளவனை சந்தித்தார் ஆதவ்.

டிசம்பர் 6… நினைவுபடுத்திய ஆதவ்

டிசம்பர் 6 ஆம் தேதி நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்துகொள்வார் என்று முதலில் திட்டமிடப்பட்ட நிலையில்… அரசியல் சர்ச்சைகள் காரணமாக திருமா அந்த விழாவில் பங்கேற்கவில்லை. அந்த புத்தகத்தை இப்போது திருமாவுக்கு கொடுத்த ஆதவ், பெரியார் – அம்பேத்கர் இருவரும் ஒரே பீடத்தில் இருக்கும் சிலையையும் கொடுத்தார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை இருவரும் சேர்ந்தே சந்தித்தனர். ‘ஒரு தந்தையை தனயன் பார்ப்பது போலத்தான் என் ஆசானை சந்தித்து ஆசி பெற வந்திருக்கிறேன். இதில் வேறு எதுவும் இல்லை’ என்று ஆதவ் கூறினார்.

ஆதவ்வை பாராட்டித் தள்ளிய திருமா

அதேபோல திருமாவளவனும், ‘தமிழ்நாட்டில் ஒரு புதிய  அரசியல் பாரம்பரியத்தை ஆதவ் தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு கட்சியில் இருந்து விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அவரை எதிரியாகவே பார்க்கும் ஒரு சூழல் இருக்கிறது.

ஆனால், அதையெல்லாம் தாண்டி தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டும் பண்பு இது’ என்று ஆதவ்வை பாராட்டினார். மேலும், இதில் அரசியல் கணக்கோ அரசியல் முடிச்சோ இல்லை என்றும் கூறினார் திருமா.

ஆனாலும், இந்த சந்திப்பை திமுக சிறிதும் ரசிக்கவில்லை என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள், முதல்வருக்கு நெருக்கமான திமுக புள்ளிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, thiruma signal stalin reaction

திருமா-ஆதவ் சந்திப்பு… ஸ்டாலின் ரியாக்ஷன்

‘அரசியல் நாகரிகத்தை ஆதவ்வா கற்றுக் கொடுக்க வேண்டும்?  ஆதவ் தன்னை சந்திக்க வருகிறார் என்று சொன்னதுமே திருமா தவிர்த்திருக்க வேண்டும். அவரை அழைத்து வீடியோ எடுத்து, பிறகு இணைந்து செய்தியாளார் சந்திப்பும் நடத்தியிருக்கிறார். இதன் மூலம் திருமா ஒரு மெசேஜை திமுக தலைமைக்கு சொல்கிறார். அதாவது, எங்களுக்கு இன்னும் ஆப்ஷன்கள் இருக்கின்றன என்பதுதான் அது.

ஒருவேளை திமுக கூட்டணியிலே விசிக தொடர்ந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சி சார்பாக போட்டியிட்டால் அந்தத் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றிக்காக சிறுத்தைகள்  உழைப்பார்களா அல்லது ஆதவ் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்களா? அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் ஆதவ்  போட்டியிடும் சட்டமன்றத் தொகுதியை நாங்கள் விசிகவுக்கே கொடுப்போம்.  இந்த சந்திப்பை முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் விரும்பவில்லை. திருமா இன்னமும் ஆதவ்வோடு நெருங்கிய தொடர்பில்தான் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது’ என்கிறார்கள். thiruma signal stalin reaction

அடுத்த சந்திப்பு டெல்லியில்!

ஆதவ் அர்ஜுனா தரப்பில் விசாரித்தபோது, ‘இந்த சந்திப்புக்கே திமுக தலைமை வரை விவாதம் நடந்திருக்கிறது.  ஆனால், டெல்லியில் திருமா அண்ணனோடு ஆதவ் அடுத்தடுத்த சந்திப்புகளை நடத்துவார். விரிவாக விவாதிப்பார். திருமாவை திமுகவின் எதிர்க்கூட்டணிக்கு நகர்த்துவதுதான் ஆதவ்வின் வேலை. அதை ஆரம்பித்துவிட்டார். டெல்லியில் அடுத்தடுத்த பேச்சுகள் தொடர்ந்து நடக்கும்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share