வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு முழுதும் பாமகவினர் இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டக் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
”அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய தொழிலதிபர் அதானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், நவம்பர் 21 ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் பெயரும் இருக்கிறது இதுகுறித்தும், கடந்த ஜூலை 10 ஆம் தேதி சென்னை வந்த அதானி -முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் என்று செய்தி வந்தது. இதுகுறித்தும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘தமிழ்நாடு அரசின் மின்சாரத் துறை அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. மத்திய அரசின் சூரிய சக்தி நிறுவனத்தோடுதான் நாம் ஒப்பந்தம் செய்துள்ளோம்’ என்று பதில் சொன்னார்.
இதற்கிடையே நவம்பர் 25 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சோழிங்கநல்லூர் சென்றபோது அவரிடம் டாக்டர் ராமதாஸ் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அவருக்கு வேற வேலை இல்லை. டெய்லி ஒரு அறிக்கை விட்டுக்கிட்டிருப்பாரு. அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. துறை அமைச்சர் தெளிவா சொல்லிவிட்டார். அதுக்கு மேல ட்விஸ்ட் பண்ணாதீங்க’ என்று சற்று கோபமாகவே பதிலளித்தார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வரின் உடல்மொழி மூத்த தலைவரான டாக்டர் ராமதாஸை அவமானப்படுத்துவதாக இருக்கிறது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமல்ல, டெல்லியில் இருந்த அன்புமணி தமிழக பாமக முக்கிய நிர்வாகிகளை நேற்று மாலை தொடர்புகொண்டு, ‘நம்ம அய்யாவை அவமரியாதையாக பேசிய முதல்வருக்கு எதிராக தமிழ்நாடு முழுதும் போராட்டம் பண்ணுங்க’ என்று உத்தரவிட்டார்.
அதன்படியே பாமகவினர் இன்று (நவம்பர் 26) காலை போராட்டம் நடத்த ஆயத்தமாகினர். பாமகவினரின் போராட்டம் பிசுபிசுக்க வேண்டும் என்று திட்டமிட்ட சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் நேற்று இரவே அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் சில வழிமுறைகளை பின்பற்ற உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை பாமகவினர் போராட்டம் நடத்தக் கூடும்போதே உடனடியாக கைது செய்யப்பட்டனர். அதனால் பெரும்பாலான இடங்களில் உடனடியாக பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
வட மாவட்டங்களில் 40 இடங்களில் பாமகவினரின் ஆர்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மொத்தம் 2500 பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாமக தரப்பில் வேறு ஒரு திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.
‘முதல்வர் ஸ்டாலின் வருகிற 28, 29 தேதிகளில் விழுப்புரம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டபோது சுட்டுக் கொல்லப்பட்ட 21 சமூக நீதி தியாகிகளின் மணிமண்டபத்தை 28 ஆம் தேதி முதல்வர் திறப்பதாகவும் திட்டம் இருந்தது. இப்போது மழை காரணமாக முதல்வரின் விழுப்புரம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் எப்போது விழுப்புரம் வந்தாலும் அவருக்கு எதிராக பாமக அதிர்வு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று பாமக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். அச்சரப்பாக்கம் முதல் விழுப்புரம் வரை முதல்வர் செல்லும் பாதையில் பாமகவினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையும் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதற்கிடையே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பற்றி முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டாக்டர் தமிழிசை ஆகியோர்தான் கண்டனம் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவுக்கான புள்ளியாக அமையுமே என்ற திட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் முதல்வருக்கு கண்டனம் தெரிவிப்பார் என அரசியல் வட்டாரத்தில் ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்துவிட்டார்.
அதிமுக வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது, ‘பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது கண்டனத்துக்குரிய கருத்துதான். ஆனால், சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமியை பற்றி கரப்பான் பூச்சி உள்ளிட்ட சொற்களால் தரம் தாழ்ந்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் விமர்சித்தனர். அப்போது டாக்டர் ராமதாசோ, அன்புமணியோ கண்டித்திருந்தால் இப்போது எடப்பாடி கண்டனம் சொல்லியிருப்பார்.
அதுமட்டுமல்ல… கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி என்று திரைமறைவு பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்து, சீட்டுகளும் என்னென்ன என முடிவு செய்யப்பட்டு, ‘நல்ல நாள் பாத்துட்டு கையெழுத்து போட வர்றோம்’ என்று அதிமுக நிர்வாகிகளிடம் சொல்லிச் சென்றனர் பாமகவினர். ஆனால், ஒரே நாளில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்துவிட்டனர். இந்த கோபம் எடப்பாடிக்கு இன்னமும் ஆறவில்லை.
மேலும் அதிமுக ஆட்சியில் அதானி குழுமத்தினர் தமிழ்நாடு மின்சார வாரியத்தினருடன் நல்ல உறவில்தான் இருந்துள்ளனர். எனவே இந்த விஷயத்தில் டாக்டர் ராமதாஸுக்கு ஆதரவாக பேசப் போய் திமுக பழையவற்றை தோண்டுவதற்கு ஏன் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் எடப்பாடி இந்த விவகாரத்தில் ஒதுங்கிக் கொண்டார்’ என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை எதிரொலி : நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை தெரியுமா?
12 வருஷம் 2 மாசம் 1 நாள்… அமரன் இயக்குநரை பாராட்டிய விஜய்
களத்திலும் சரி… ஏலத்திலும் சரி.. சென்னை அணி தான் கெத்து : காரணம் என்ன?