டிஜிட்டல் திண்ணை: அமுதா ஐ.ஏ.எஸ். மாற்றம்? விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி… ஸ்டாலின் போடும் பிளான்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் கள்ளக்குறிச்சி தொடர்பான அப்டேட்டுகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விபரீதத்தால் இதுவரை 57 பேர் உயிரிழந்துவிட்டனர். இது தொடர்பாக எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக ஆகியவற்றோடு திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகளும் ஆர்பாட்டம் நடத்துகிறது.

இந்த அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பற்றி முக்கியமான ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இதுகுறித்து திமுகவின் சீனியர்கள் வட்டாரத்திலும் கோட்டை வட்டாரத்திலும் விசாரித்தபோது முக்கிய தகவல்கள் கிடைத்தன.

’நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்றதையடுத்து பெரும் மகிழ்ச்சியில் இருந்தார் ஸ்டாலின். சட்டமன்றம் கூடியதும், நாடாளுமன்ற வெற்றியைப் பற்றி குறிப்பிட்டு தனது நல்லாட்சிக்கு தமிழக மக்கள் தந்த பாராட்டுப் பத்திரம்தான் இந்த வெற்றி என்பதோடு… அதிமுக, பாஜக ஆகியவை எத்தனை இடங்களில் டெபாசிட் இழந்தது என்ற விவரங்களை எல்லாம் வைத்து உரை தயாரித்து எதிர்க்கட்சிகளை பந்தாட திட்டமிட்டிருந்தார் ஸ்டாலின்.

ஆனால், சட்டமன்றம் கூடுவதற்கு ஓரிரு நாட்கள் முன் நடந்த இந்த கள்ளச்சாராய விபரீதத்தால் சட்டமன்றத்தின் சூழலே மாறிவிட்டது. எதிர்க்கட்சிகளைப் பார்த்து கேள்வி கேட்க திட்டமிட்டிருந்த முதல்வரைப் பார்த்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் நிலை உருவாகிவிட்டது. இதனால் அப்செட் ஆகிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

இயல்பாகவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக சம்பந்தப்பட்ட ஸ்பாட்டுகளுக்கு சென்றுவிடக் கூடியவர்தான் முதல்வர் ஸ்டாலின். ஆனால் மன சோர்வோடு சற்று உடல் சோர்வும் ஏற்பட்டுவிட்டது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால் சற்று அலைச்சலை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வந்த நிலையில்தான், கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெற்றுவிட்டது, அதனால்தான் ஸ்டாலின் அங்கே உடனடியாக நேரடியாக செல்லவில்லை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

 

இதுமட்டுமல்ல… சட்டமன்றம் முடிந்ததும் தேர்தல் பரப்புரைக்காக விக்கிரவாண்டி செல்லத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். கள்ளக்குறிச்சிக்கு சென்று மக்களை சந்திக்காமல் விக்கிரவாண்டிக்கு சென்று வாக்கு சேகரிப்பது சரியல்ல என்று நினைக்கும் முதல்வர் ஸ்டாலின்… விக்கிரவாண்டிக்கு செல்வதற்கு முன்பே, கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

அரசு வழங்கிய நிவாரண உதவிகளை ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மக்களுக்கு வழங்கிய நிலையில்… கள்ளச்சாராயத்தால்  தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் உள்ளிட்ட  பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினரையும் கள்ளக்குறிச்சியில் ஓரிடத்துக்கு வரவழைத்து அவர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.

மேலும், இதுவரை கள்ளக்குறிச்சி கலெக்டர் மாற்றப்பட்டிருக்கிறார். எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். மற்ற காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மதுவிலக்கு பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த விஷயத்தில் மிகவும் பொறுப்பு வாய்ந்த உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். மீதும் முதல்வர் வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள். சட்டம் ஒழுங்கு, மதுவிலக்கு அமலாக்கம் ஆகியவை அமுதாவின் நிர்வாகத்தில்தான் வருகின்றன. எனவே உள்துறை செயலாளரை மாற்றலாமா என்ற ஆலோசனையும் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கடைசி நேரத்தில் கேன்சல் – அப்டேட் குமாரு

நாடார்.. கவுண்டர்.. பிராமணர்.. பாஜகவில் சாதி பார்த்து நீக்கம் : திருச்சி சூர்யா குற்றச்சாட்டு!

+1
0
+1
2
+1
1
+1
7
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *