வைஃபை ஆன் செய்தவுடன் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வெளியிட்ட கருத்துகளோடு, ஆதவ் அர்ஜுனா அளித்த ஃப்ரஷ் பேட்டியின் வீடியோவும் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“விசிகவின் 10க்கும் மேற்பட்ட துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் அளித்த பேட்டிகள் திமுக-விசிக கூட்டணிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசிக இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும், ‘சினிமாவில் இருந்து நான்கைந்து வருடங்கள் முன்பு அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் துணை முதல்வர் ஆகலாம்… ஆனால் 40 வருடமாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வராகக் கூடாதா?’ என்றும் அந்த பேட்டிகளில் கூறியிருந்தார் ஆதவ் அர்ஜுனா.
ஆதவ் குறிப்பிட்டது உதயநிதியைத்தான் என்பதால் திமுக தரப்பில் இதற்கு கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலினே இந்த பேட்டிகளைப் பார்த்து டென்ஷனாகி, கூட்டணிக் கட்சிகளோடு டச்சில் இருக்கும் அமைச்சர் வேலுவைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அந்த ஆலோசனைக்குப் பிறகு ஆ.ராசாவைத் தொடர்புகொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அதன் பிறகுதான் சத்தியமங்கலத்தில் இருந்தே செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, எழுச்சித் தமிழர் என்ற பட்டப் பெயரோடு திருமாவளவனைக் குறிப்பிட்டுப் புகழ்ந்ததோடு… அந்த கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கிற ஒருவர் போதுமான அரசியல் புரிதல் இல்லாமல் பேசுவது கூட்டணி அரணுக்கும் அரசியல் அறத்துக்கும் ஏற்புடையதல்ல. இந்த கருத்தை திருமாவும் ஏற்கமாட்டார். ஏற்கக் கூடாது. அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இருக்கிறது’ என்று பேட்டியளித்தார் ஆ.ராசா.
திமுகவிடம் இப்படி ஒரு கருத்து அதுவும் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவிடம் இருந்து வரும் என்று திருமாவளவன் எதிர்பார்க்கவில்லை. இதே நேரம் விசிகவுக்குள் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விசிக வட்டாரத்தில் பேசியபோது ஆதவ் அர்ஜுனா ஒரு அஜெண்டாவோடுதான் செயல்படுகிறார் என்கிறார்கள். அதாவது உதயநிதிக்கு எதிரான அஜெண்டாவில் அவர் இருக்கிறார் என்கிறார்கள்.
‘2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே சபரீசனுடன் இருந்தவர் ஆதவ் அர்ஜுனா. தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர். சபரீசன் எங்கு சென்றாலும் அவருடன் செல்பவர். சபரீசன் டெல்லி சென்றால் அங்கே செல்வார், சபரீசன் லண்டன் சென்றால் அங்கே செல்வார். சபரீசனுக்கு நெருக்கமானவராக இருந்த ஆதவ் அர்ஜுனா, சட்டமன்றத் தேர்தல் பணிகளிலும் சபரீசனோடு இணைந்து செயல்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பெருமளவு தேர்தல் நிதியும் கொடுத்திருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
தேர்தல் முடிவுக்கு முன்னதான ஒரு மாதகால இடைவேளையிலேயே… ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களோடு இருந்தபோது அங்கே சென்ற ஆதவ் அர்ஜுனா, ‘நாம் திட்டமிட்டபடியே வெற்றி பெற்றுவிடுவோம். எனக்கு மணல், டாஸ்மாக் உள்ளிட்ட சில துறைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பைக் கொடுங்க. அவற்றில் இருந்து பெரும் அளவு கட்சி நிதியை அறுவடை செய்ய பெரிய ப்ளான் வச்சிருக்கேன். வெளிநாடு பார் மாதிரி பல வசதிகளை தமிழ்நாட்டின் நகரங்களில் செய்யலாம்’ என உரிமையோடு சில ஐடியாக்களை வைத்திருக்கிறார்.
இதைக் கேட்ட ஸ்டாலின், ‘ஆதவ்வை மாப்பிள்ளைக்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போங்க’ என்று சொல்லியிருக்கிறார். இதற்கிடையில் சபரீசனுக்கு போன் போட்டு, ‘என்ன அவரு… என்னோட வேலையெல்லாம் தான் செய்யறதா சொல்லிக்கிட்டிருக்காரு’ என்று கேட்டிருக்கிறார்.
இதுகுறித்து ஆலோசித்தபோது செந்தில்பாலாஜி, ‘ டாஸ்மாக்கில் பார்களை ஜெனரலைஸ்டு செய்வதன் மூலம் ஆதவ் சொல்வதை விட அதிக வருமானத்தை ஈட்டமுடியும்’ என்று சொல்ல செந்தில்பாலாஜியின் கருத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால் அப்செட் ஆனார் ஆதவ் அர்ஜுனா
அதன் பின் சபரீசன் சில வாக்குறுதிகளை அளித்து ஆதவ் அர்ஜுனாவை சமாளித்திருக்கிறார். இப்படியே வருடங்கள் ஓட… நாடாளுமன்றத் தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பாகவே, ‘எனக்கு இந்த எம்பி தேர்தலில் திமுகவில் டிக்கெட் வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார் ஆதவ். இதுகுறித்து உதயநிதியிடமும் சபரீசன் பேசியிருக்கிறார். ஆனால், திமுகவில் கடும் போட்டி நிலவிய அந்த சூழலில், ’நேத்து வந்தவருக்கு சீட்டா?’ என்ற கேள்வி எழும் என்பதால் ஸ்டாலின் மறுத்துவிட்டார். மேலும் ஆதவுக்காக சபரீசன் செயல்படுவதையும் உதயநிதி விரும்பவில்லை என்று அப்போதே திமுக மேல்மட்ட வட்டாரங்களில் பேச்சு எழுந்தது.
இந்த நிலையில்தான் தேர்தலுக்கு முன்பே திமுகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா விசிகவில் இணைந்தார். தனது கடந்த கால செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் பற்றி திருமாவளவனிடம் விளக்கிய ஆதவ் அர்ஜுனா விசிகவை வளர்க்க தனது அஜெண்டா பற்றி கூறினார். இதனால் ஈர்க்கப்பட்ட திருமாவும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இணைத்ததோடு குறுகிய காலத்திலேயே அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியும் கொடுத்தார்.
எம்பி தேர்தலில் திமுக சார்பில் சீட் பெற முயன்ற ஆதவ் அது முடியாமல் போல விசிக சார்பில் சீட் பெற முயன்றிருக்கிறார். அதனால்தான் விசிகவுக்கு மூன்றாவதாக ஒரு பொதுத் தொகுதி வேண்டும் என்றும் தொடர்ந்து பொதுவெளியில் வற்புறுத்தினார் திருமா. ஆதவ்வுக்காகவே அந்த பொதுத் தொகுதியை கேட்டார் திருமா. இதற்காகவே சில கட்ட பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.
ஆனால் திமுக தரப்பில் இந்த மூவ் அறிந்துகொண்டு, ‘விசிகவுக்கு 3 சீட் கொடுத்தால் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு சீட் அதிகரித்துக் கொடுக்க வேண்டும். அது நடக்காது’ என்று சொல்லிவிட்டனர்.
இந்த நிலையில்தான் திமுக தரப்பில் தனக்கு டிக்கெட் கிடைக்காமல் போனதற்கும், விசிகவில் இணைந்தும் தனக்கு டிக்கெட் கிடைக்காமல் போனதற்கும் உதயநிதிதான் காரணம் என்று கருதுகிறார் ஆதவ் அர்ஜுனா.
மேலும் திருமாவளவனிடம், திமுகவில் நடக்கும் உள் விவகாரங்கள் பற்றி விளக்கிய ஆதவ் அர்ஜுனா… அங்கே நன்றாக வைத்திருப்பது போல ஒரு தோற்றம் இருக்கும். ஆனால் நமக்குரிய உரிமைகள் கிடைக்காது. கிடைக்க விட மாட்டார்கள். விசிக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றால் திமுக அணியில் இருக்கும் வரை நடக்காது’ என்றும் கூறியிருக்கிறார்.
இந்த பின்னணியில்தான் திருமாவளவனின் ஒப்புதல் பெற்றுத்தான் உதயநிதி பற்றிய விமர்சனத்தையும் வைத்திருக்கிறார்.
ஆ.ராசா செய்தியாளர் சந்திப்பில் திருமாவை எழுச்சித் தமிழர் என்ற உயர்வாக அழைத்தார். ஆதவ் மீது அவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
அதேநேரம் திருமாவிடம் திமுக தரப்பில், ‘ஆதவ் அர்ஜுனாவின் கட்சிப் பதவியை பறிக்க வேண்டும்’ என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் திருமா.
ஆனால் திருமாவளவன், ‘அக்டோபர் 2 மது, போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டுப் பணிகளில் இப்போது தீவிரமாக இருக்கிறோம். இப்போது சில ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்தால் அது மாநாட்டையும் பாதிக்கும். எனவே மாநாடு முடிந்த பிறகு ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று திமுகவுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதையே தன்னை சந்தித்த மூத்த விசிக நிர்வாகிகளிடமும் கூறியிருக்கிறார்.
நேற்று (செப்டம்பர் 23) சீத்தாராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச ஆரம்பித்தபோதுதான் அரங்கத்துக்குள் சென்றார் திருமா. முதல்வர் ஸ்டாலின் பேசி முடித்து புறப்பட்டபோது அவரை காமராஜர் அரங்கத்தின் வாசல் வரைக்கும் சென்று வழியனுப்பி வைத்துள்ளார். அப்போது, ‘ராஜா பேட்டிய பாத்தீங்களா?’ என்று திருமாவிடம் ஸ்டாலின் கேட்டிருக்கிறார். திருமாவும் பார்த்ததாக சொல்லியிருக்கிறார்.
பிறகு கட்சி அலுவலகத்துக்கு சென்ற திருமாவோடு விசிக பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் நள்ளிரவு வரை ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று செப்டம்பர் 24 ஆம் தேதி, ஆதவ் அர்ஜுனா புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். திருமாவிடம் ஆலோசித்த பிறகு… திமுகவின் துணைப் பொதுச் செயலாளரான ஆ.ராசாவுக்கு விசிகவின் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனாவே பதிலளிக்க வேண்டும் என்ற திட்டத்தில் ஆதவ் அர்ஜுனாவே பேட்டியளித்தார்.
அதில் அதிகாரப் பகிர்வு, துணை முதல்வர் குறித்து தான் பேசியதில் உறுதியாக இருப்பதாகவும், இது விசிகவின் எதிர்காலத் திட்டம் என்றும் பதிலளித்துள்ளார்.
எனவே திருமாவளவன் இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவே தெரிகிறது. இந்த பேட்டி விவரம் அறிந்து ஸ்டாலின் கடும் கோபத்தில் இருக்கிறார். இப்போது பந்து திமுகவின் கையில் இருக்கிறது. ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்பதே அரசியல் அரங்கத்தில் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பு” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிகாரப் பகிர்வு… துணை முதல்வர்… அதே நிலைதான்: ஆ.ராசாவுக்கு ஆதவ் அர்ஜூனா பதில்!
சீசிங் ராஜாவை தொடர்ந்து திருச்சியில் பாய்ந்த குண்டு : ரவுடியை சுட்டுப்பிடித்த பின்னணி!
பெரிய பிராடு பயலா இருப்பான் போலருக்கு…ஏழை வயிற்றில் அடித்து லாட்டரி மூலம் சம்பாதித்து கொளுத்த பணத்தில் வாழ்பவனுக்கு ஏழை பற்றின சிந்தனையா! என ஐயம் தோண்றியது சரிதான் போலருக்கு..பணப்பேய் நாகத்தை திருமா தெரியாமல் பால் ஊற்றி வருகிறார்..திரும்ப அது அவரை கொத்தாமல் விடாது..திமுக அப்போதே அவனிடம் இருந்து விலகி வந்ததற்கு இப்போது பழியா?
கூந்தலில் ஒண்ணை கூட அந்த பிராடு பயலால் புடுங்க முடியாது..
ராகுலா மோடியா என்றால் மோடி தான்..
திருமாவா ஸ்டாலினா என்றால்
ஸ்டாலின் தான்..