வைஃபை ஆன் செய்ததும், ‘மக்களவைத் தேர்தலுக்கான அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகள் பற்றிய சில தகவல்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிற அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டுகள் பதிவு செய்யும் நடைமுறை சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் அரசு ஊழியர்கள் தங்கள் தபால் ஓட்டுக்களை செலுத்தும் விதத்திலும், அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதிலும் ஆளுங்கட்சியான திமுகவுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தலைமை வரை சென்று சேர்ந்திருக்கின்றன.
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதிலும் குறிப்பாக பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, அரசு ஊழியர் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட முக்கியமான வாக்குறுதிகளை ஸ்டாலின் அப்போது அளித்திருந்தார்.
ஆனால், 2021ல் ஸ்டாலின் முதலமைச்சரான இந்த மூன்று ஆண்டுகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஒரு அரசு ஊழியர் சங்கத்தின் நிகழ்ச்சியிலே கூட கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், ‘நிதி நெருக்கடி அதிகமாக இருக்கிறது. நிதி நெருக்கடி சீரடைந்த பிறகு உங்களுக்கான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்’ என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார்.
இந்த நிலையில் தான் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தபால் ஓட்டுகள் தேர்தல் பணி செய்யும் அரசு ஊழியர்களால் சில நாட்களாக பதிவிடப்பட்டு வருகின்றது.
பொதுவாகவே தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் தபால் வாக்கு சீட்டுகளை அந்தந்த பகுதியில் இருக்கும் திமுக பொறுப்பாளர்கள் அவர்களிடம் உரிமையாக சென்று வாங்கி வருவார்கள். அந்த திமுக பொறுப்பாளர்களே அதில் உதயசூரியனுக்கு டிக் அடித்து அதை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் கொண்டு சேர்ப்பார்கள். அந்த அளவுக்கு திமுக மீது அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் பற்றும் விருப்பமும் கொண்டிருந்தார்கள்.
ஆனால், இந்த தேர்தலில் அதேபோன்று எதிர்பார்ப்புடன் திமுக பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் தபால் வாக்குகளை சேகரிக்க கேட்டிருக்கிறார்கள் ஆனால், ‘இந்த முறை நாங்க எலக்ஷன் கிளாஸிலேயே எங்க தபால் ஓட்டுகள் போட்டு விட்டோம் ’ என்று மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்களிடமிருந்து பதில் வந்திருக்கிறது. இது திமுக தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அதிருப்தியில் இருப்பதை ஏற்கனவே அறிந்த திமுக தலைமை, தங்களது தனிப்பட்ட ஏஜென்சி மூலமாக அரசு ஊழியர்கள் மத்தியில் கடந்த வாரத்தில் ஒரு சர்வேயை எடுத்தது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 லிருந்து 500 அரசு ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
‘பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உறுதியாக சொல்லி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் அது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 2022 மே நிலவரப்படி தமிழ்நாட்டில் சுமார் 14 லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இந்த ஆட்சி காலத்தில் மட்டுமே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாகி இருக்கின்றன இவற்றை நிரப்ப திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அது மட்டுமல்ல ஸ்டாலின் தனக்கு அரசியல் லாபம் அடையக்கூடிய வகையில் செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண், தவப்புதல்வன், மக்களை தேடி மருத்துவம், நீங்கள் நலமா உள்ளிட்ட பல திட்டங்கள் அனைத்திலும் அரசு ஊழியர்களின் அளப்பரிய உழைப்பு அடங்கி இருக்கிறது. வழக்கமான அரசு அலுவல்களைத் தாண்டி இந்த திட்டங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பல மணி நேரங்கள் அதிகமாக அரசு ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளில் பணியாற்றி வருகிறோம்.
ஆனால், பொதுப் புத்தியில் அரசு ஊழியர் என்றாலே சோம்பேறிகள் என்றும் சரியாக வேலை செய்யாதவர்கள் என்றும் ஒரு பெயர் இன்னமும் இருக்கிறது. அதிகரித்து வரும் காலிப் பணியிடங்கள் அதே நேரத்தில் அதிகரித்து வரும் அரசு திட்டங்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போது கடந்த மூன்று வருட திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் உழைப்பு கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி இருக்கிறது.
அது மட்டும் அல்ல உயர் அதிகாரிகளின் டார்ச்சர் அதிகமாகி இருக்கிறது. இத்தனை நாட்களுக்குள் இந்த ரிப்போர்ட் வேண்டும் என்று டார்கெட் நிர்ணயிக்கப்பட்டு அரசு ஊழியர்கள் இப்போது பணிச்சுமையிலும் மன அழுத்தத்திலும் இருக்கிறார்கள். இதனால்தான் இப்படி ஒரு மாற்றம் நடந்து வருகிறது” என்று அரசு ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலக உதவியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இந்த தேர்தலில் நாம் யார் என்று காட்டுவோம் என்று பல்வேறு மாவட்டங்களில் தீர்மானமே போட்டிருக்கிறார்கள்.
இத்தனை தகவல்களும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தவிர பிற அரசு ஊழியர்களின் ஓட்டு இந்த முறை திமுகவுக்கு இல்லை என்பது தான் இரண்டு மூன்று நாட்களாக பதிவாகி வருகிற தபால் ஓட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது.
வழக்கமாக அரசு ஊழியர் வாக்குகளில் 70% திமுகவுக்கு கிடைக்கும், ஆனால், இம்முறை அதில் உறுதியாக 30% குறைந்து 40% வாக்குகளே திமுக கூட்டணிக்கு கிடைக்கின்றன. தபால் ஓட்டுக்களில் இது தொடங்கி இருக்கிறது என்றால் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் நேரடியாக வாக்கு செலுத்தும் போதும் இதே விகிதம் தான், எதிரொலிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் முதலமைச்சருக்கு சென்றிருக்கிற ரிப்போர்ட்.
திமுகவின் நிரந்தர வாக்கு வங்கியான அரசு ஊழியர்களின் அதிருப்தியை உடனடியாக சரிசெய்ய, என்ன செய்வது என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள் முதல்வரின் ஆலோசகர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பரப்புரையில் பட்டைய கெளப்பும் பாரதிய ஜனதா: திணறும் திமுக; அதல பாதாளத்தில் தவிக்கும் அதிமுக!
Comments are closed.