லேப்டாப்பை திறந்ததும் புல் புல் பறவை மீதேறி வந்து ஒட்டிக் கொண்டது வைஃபை. ஃபேஸ்புக் மெசஞ்சரில் ஒரு மெசேஜ் வந்திருந்தது. அதைப் பார்த்து ஒரு ஸ்மைலியை பதிலாக அனுப்பி வைத்த வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
திமுகவின் தற்போதைய நிலை
”தமிழக சட்டமன்றத்தில் தற்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பலம் 159 ஆக உள்ளது. இதில் திமுக மட்டும் ஜெயித்த இடங்கள் 125 தான். மதிமுக 4, மனித நேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் 1 என மொத்தம் எட்டு பேர் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்றவர்கள், ஆனால் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஆக மொத்தம் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்தவர்கள் 133 பேர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக மட்டுமே சுமார் 160 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று ஸ்டாலின் வலிமையான நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான சர்ச்சைகள் பல நிறைந்த எடப்பாடியின் நான்கு ஆண்டு கால ஆட்சி, அதிமுகவில் ஒற்றுமையின்மை என திமுகவுக்கு சாதகமான சூழலில் நடைபெற்ற தேர்தலில் திமுக கொள்கை உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை அமர்த்தியது.
ஐபேக் நிறுவனத்தின் அணுகுமுறைகள், கடுமையான தேர்தல் பணிகள் இதையெல்லாம் தாண்டியும் கூட திமுக மட்டும் 125 தொகுதிகளில்தான் ஜெயித்தது. 173 இடங்களில் போட்டியிட்டும் திமுக 125 இடங்களில்தான் ஜெயித்தது.
திமுகவின் ஆட்சிக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றாலும் கூட ஆளுங்கட்சியான திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர் மீதுள்ள வழக்குப் பின்னணிகளை ஆராய்ந்து அவர்களை பாஜக பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை பாஜக ஏற்கனவே தொடங்கிவிட்டது.
திமுக கூட்டணிக் கட்சிகளில் உதயசூரியனில் நின்ற சட்டமன்ற உறுப்பினர்களோ, அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களோ பாஜகவின் இலக்கு அல்ல. திமுகவைச் சேர்ந்த 125 சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் இருபது பேர் வரை அக்கட்சியில் இருந்து இழுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் தொலை நோக்குத் திட்டம்.
இதெல்லாம் நடக்கிற காரியமா என்று கேள்விகள் எழுந்தாலும்…. திமுக எம்.எல்.ஏ.க்களின் தற்போதைய நிலைமை பாஜகவின் இந்தத் திட்டத்தை சாத்தியப்படுத்திவிடுமோ என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
திமுக ஆட்சி அமைத்து ஒரு வருடம் மூன்று மாதங்கள் ஆனபோதும் திமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் திருப்தியாக இல்லை. ‘அண்ணே தேர்தலுக்கு வாங்கின கடனையே இன்னும் அடைக்க முடியலை.
ஏதாச்சும் உதவி பண்ணுங்க’ என்று காண்ட்ராக்ட் உள்ளிட்ட விஷயங்களுக்காக தங்களுக்கு வேண்டிய அமைச்சர்களிடமே கேட்கும் நிலையில்தான் திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று இருக்கிறார்கள்.
தங்கள் பிரச்சினைகளை கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் சொல்லலாம் என்று அவர்கள் முயற்சித்தாலும் ஸ்டாலினை சந்திக்க முடிவதில்லை. ’அமைச்சர்களே நினைத்தாலும் உடனடியாக முதல்வரை சந்திக்க முடியவில்லை.
அப்புறம் நாங்கள் எம்.எல்.ஏ.க்கள் எப்படி பார்க்க முடியும்? அறிவாலயத்துக்கு முதல்வர் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரிவதில்லை’ என்கிறார்கள் எம்.எல்.ஏ.க்கள். இப்படியாக திமுக ஆட்சியில் அக்கட்சியின் எந்த சட்டமன்ற உறுப்பினரும் சிறு சலுகை கூட அடையவில்லை என்பதை பாஜக தெரிந்துகொண்டு தற்போது தங்களது வலையை வேகமாக வீச ஆரம்பித்திருக்கிறார்கள்.
அசைக்கவே முடியாது என்று பாஜக நினைத்த சில எம்.எல்.ஏ.க்கள் கூட இப்போது தங்களது பொருளாதார தடுமாற்றம் காரணமாக மெல்ல மெல்ல சலசலக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பாஜக இழுக்க முயற்சிப்பது எதார்த்தத்துக்கு வெகு தூரத்தில் இருந்தாலும் பாஜகவின் இந்த முயற்சியை திமுக தலைமை உணர்ந்தே இருக்கிறது
அதிமுகவில் என்ன நடக்கிறது?
இதற்கிடையில் அதிமுகவில் எடப்பாடிக்கும் பன்னீருக்குமான அதிகார யுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைப்பதற்கு எடப்பாடி பழனிசாமியும், அவரிடம் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் கொண்டுவருவதற்கு பன்னீர், சசிகலா தரப்பும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
எடப்பாடி அணியில் இருந்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகஸ்டு 27 ஆம் தேதி பன்னீர் செல்வத்தை சந்தித்து அவருக்கு ஆதரவளித்தார். எடப்பாடியிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை எப்படியாவது தங்கள் பக்கம் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிட்டு சசிகலாவும் பன்னீரும் பணத்தை இறைக்கவும் முடிவெடுத்துவிட்டனர்.
இதை உணர்ந்துதான் வசூல் ராஜா என்று பன்னீர் செல்வத்தை அழைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்த நிலையில் எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பன்னீர் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் தொடர்புகொண்டு தொடர்ந்து பேரம் பேசி வருகிறார்கள்.
இந்த பேரத்தின்போதுதான் அவர்களுக்கு இன்னொரு ஷாக் தகவல் கிடைத்திருக்கிறது.
சசிகலாவுக்காக சிலரும் ஓபிஎஸ் தரப்பில் வைத்திலிங்கம் போன்றவர்களும் எடப்பாடி வசம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் ரகசியமாக பேச்சு நடத்தியிருக்கிறார்கள். அப்போது சில எம்.எல்.ஏ.க்கள், ‘ஏங்க… இப்படி கட்சி நாலா உடைஞ்சு கிடந்தா நாங்க எங்கே வந்து என்ன பிரயோசனம்? பேசாம திமுகவுக்கே போயிடலாம் போல’ என்று தங்களது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்தத் தகவல் பன்னீர் செல்வத்துக்குப் போக…. ‘நம்ம கிட்ட வராட்டாலும் அவங்க திமுக பக்கம் போனா கூட பரவாயில்லை. எப்படியாவது எடப்பாடியை தனிமைப்படுத்தணும். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுக பக்கம் போனால் இதை வைத்தே நாம் எடப்பாடிக்கு எதிராக அரசியல் பண்ணிடலாம்.
அதனால திமுக பக்கம் போறவங்க போகட்டும் தடுக்காதீங்க’ என்று பன்னீரிடம் இருந்து அவரது ஆதரவாளர்களுக்கு மெசேஜ் போயிருக்கிறது. இதனால் பன்னீர் தரப்பினரும் அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுக போகும் நிலையில் இருந்தாலும் பரவாயில்லை என்று விட்டுவிட்டார்கள்.
யார் அந்த எம்.எல்.ஏக்கள்?
சில நாட்களுக்கு முன் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அம்மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் 50 ஆயிரம் மாற்றுக் கட்சியினர் இணைவதாக அவரே அறிவிப்பு கொடுத்தார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலினும், ‘எத்தனை பேர் சேர்கிறார்கள் என்று கேட்டேன். 50 ஆயிரம் பேர் என்றார். நான் ஆச்சரியமாக பார்த்ததும் இணைபவர்கள் அத்தனை பேரின் முகவரி, செல்போன் நம்பர் அனைத்து விவரங்களையும் கொடுத்தார்’ என்று குறிப்பிட்டார்.
அந்த விழாவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி போன்றவர்கள் திமுகவில் இணைந்தவரக்ள். இன்னும் பலரும் திமுகவில் இணைய இருக்கிறார்கள் என்றும் செந்தில்பாலாஜி குறிப்பிட்டார்.
இந்த வகையில்தான் செந்தில்பாலாஜியின் வலையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விழுந்திருக்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முழு அளவில் ஜெயித்த ஒரே மாவட்டம் கோவைதான்.
பத்து தொகுதிகளில் பத்தும் அதிமுக அணியே ஜெயித்தது. சேலம் மாவட்டத்தில் கூட பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் திமுக சார்பாக ஜெயித்தார். ஆனால் கோவையில் திமுகவுக்கு எம்.எல்.ஏ.க்களே இல்லை.
இந்த நிலையில்தான் செந்தில்பாலாஜி அதிமுகவின் கோவை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வேலுமணிக்கு வலுவான அடி கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.
அதற்கு முன்னோட்டமாகத்தான் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை பொள்ளாச்சியில் இணைத்தார் செந்தில்பாலாஜி.
இதன் அடுத்த கட்டமாக தற்போது பதவியில் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடிவெடுத்து அந்த ஆபரேஷனை ஆரம்பித்தார் செந்தில்பாலாஜி.
இதன் படி கோவை மாவட்டத்தில் இருக்கும் மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்பாலாஜியோடு பேசி முடித்துவிட்டனர்.
ஏற்கனவே 2011 ஆட்சியில் விஜயகாந்த் சட்டமன்றத்திலேயே ஜெயலலிதாவுடன் மோதியதை அடுத்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களை அதிமுக வேட்டையாடியது.
தேமுதிக உறுப்பினர்கள் நேரடியாக அதிமுகவில் சேரவில்லை என்றாலும் தொகுதிப் பிரச்சினைகளுக்காக என்று சொல்லி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இது விஜயகாந்துக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அதே ஸ்டைலில் இப்போதைய கொங்கு மண்டலத்தின் மூன்று அதிமுக எம்.எல்..ஏக்கள் தங்கள் தொகுதிப் பிரச்சினைகளுக்காக முதல்வர் ஸ்டாலினை சந்திப்பது என்ற ஒரு திட்டம் இருக்கிறது.
அல்லது அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அவர்களையே திமுக சார்பாக இடைத்தேர்தலில் நிறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்களாக மாற்றுவது என்ற ஒரு திட்டமும் இருக்கிறது.
இதில் எந்த திட்டத்தை நிறைவேற்றுவது என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முடிவுக்காக காத்திருக்கிறார் செந்தில்பாலாஜி. எனவே கோவை மாவட்டத்தில் இடைத்தேர்தலோ அல்லது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி மக்களின் தேவைகளுக்காக அமைச்சர் செந்தில்பாலாஜியோடு சேர்ந்து முதல்வரை சந்திக்கும் நிகழ்வோ விரைவில் நடக்கும்.
குதிரைகள் புறப்படத் தயாராகின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.
டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜிக்கு எதிராக மாவட்டப் பொறுப்பாளர்கள்!
இந்தியாவிலேயே முதன்முறையாக LGBTQIA PLUS சொல்லகராதியை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!