வைஃபை ஆன் செய்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்பு மனு பற்றிய சர்ச்சை செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றை சிறிது பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் தொடங்கி, நடத்தி வருகிறார் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின். ஒவ்வொரு பொதுக்கூட்டத்தில் பேசும் போதும் தனக்கு எழுச்சியாக இருப்பதாகவும் பெண்களின் முகங்களை பார்க்கும் போது அவர்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பேசி இருக்கிறார் ஸ்டாலின்.
இதேநேரம் வாரத்திற்கு இரண்டு முறை என மிகக் குறுகிய கால இடைவெளிகளில் தேர்தல் டிரண்ட் எப்படி இருக்கிறது என்பது குறித்த ரிப்போர்ட் முதலமைச்சருக்கு சென்று கொண்டே இருக்கிறது. சபரீசன் மேற்பார்வையில் இயங்கும் ’பென்’ நிறுவனம் சார்பில் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் இந்த ரிப்போர்ட் முதலமைச்சருக்கு அனுப்பப்படுகிறது.
அந்த வகையில் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட லேட்டஸ்ட் ரிப்போர்ட்டில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது. லேட்டஸ்டாக ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டிருக்கிற அந்த ரிப்போர்ட்டில் 10 முதல் 15 தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்துக்கு வர கடுமையாக முயற்சிப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்கான தனது வியூகத்தை வேட்பாளர் தேர்விலிருந்தே தொடங்கி விட்டது பாஜக. அதாவது ஒவ்வொரு தொகுதிகளும் மிகப் பிரபலமானவரையே வேட்பாளராக நிறுத்துவது என்ற வியூகத்தை முதலில் கையில் எடுத்தது பாஜக. உதாரணத்துக்கு தென் சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை, கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை, நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நெல்லையில் சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இவ்வாறு ஒவ்வொரு தொகுதிகளிலும் அதிகபட்ச வாக்குகளை பெறுவதற்கான முதல் கட்ட முயற்சியாக அங்கே மிகவும் அறியப்பட்டவர்களை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது பாஜக.
பாஜக என்ற கட்சிக்குள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் ஒவ்வொரு கட்சி தலைவரையும் தேர்தல் களம் காண செய்திருக்கிறார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், ஜான்பாண்டியன், பாரிவேந்தர் இப்படி ஒவ்வொரு கட்சியிலும் அதன் தலைவர்கள் தேர்தல் களம் காண வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து அதன்படியே செய்திருக்கிறார்கள்.
இதில் பாமக மட்டும் தலைவர்களை நிறுத்தவில்லை. அதனால் தர்மபுரியில் அன்புமணியை போட்டியிடுமாறு பாஜக வலியுறுத்தியது. ஆனால் தனக்கு பதிலாக தனது மனைவி சௌமியா அன்புமணியை நிறுத்தி இருக்கிறார் பாமக தலைவர். இவ்வாறு ஒவ்வொரு தொகுதியிலும் அதிகபட்ச வாக்குகளை பெறும் முயற்சியாக அறியப்பட்ட முகங்களை வேட்பாளராக நிறுத்திய பாஜக பணம் செலவழிப்பதிலும் சற்று தளர்வுகளை செய்திருக்கிறது என்கிறார்கள்.
அதாவது திராவிட கட்சிகள் பாணியில் தேர்தல் செலவுக்கு தலைமை பணம் கொடுப்பது என்ற வழக்கம் பாஜகவில் இல்லை. அதே நேரம் தற்போது தமிழ்நாட்டில் இருந்து எப்படியாவது சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் தனிப்பட்ட செல்வ செழிப்புள்ள பாஜகவினர் பணம் கொடுக்கவும் தயாராகி விட்டார்கள். இப்படிப்பட்ட முயற்சிகள் மூலம் பாஜக சில இடங்களை கைப்பற்றவும் கணிசமான இடங்களில் இரண்டாவது இடத்தை பெறுவதற்கும் தீவிர முயற்சி எடுத்து வருகிறது என்பதுதான் ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்.
இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட திமுக மாவட்ட செயலாளர்களிடமும், வேட்பாளர்களிடமும் ஸ்டாலினே பேசியிருக்கிறார். ‘அங்க என்ன நடக்கிறது? இப்போது என்ன நிலவரம்?’ என்றெல்லாம் விசாரித்தவர் எக்காரணத்தை முன்னிட்டும் பாஜக எங்கேயும் இரண்டாவது இடத்திற்கு வந்து விடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதே போல எடப்பாடி தரப்புக்கும் பாஜகவின் மூவ்மென்ட்டுகள் குறித்து தகவல்கள் சென்றிருக்கின்றன. அவரும் இதுகுறித்து அதிமுகவின் மாவட்ட செயலாளர்களிடமும் வேட்பாளர்களிடமும் தொடர்ந்து பேசி வருகிறார். இதுவரை ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்ற முடிவில் இருந்த நிலையில், பாஜகவை பின்னுக்கு தள்ள வேண்டும் என்பதற்காக ஓட்டுக்கு பணம் கொடுக்கவும் அதிமுக தயாராகிவிட்டது.
இதே நேரம் திமுக மாசெக்கள் சிலரிடம் இந்த ரிப்போர்ட் பற்றி கேட்டபோது, ’ பாஜகவும் அதிமுகவும் பிரிந்து கிடப்பதால் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற மிதப்பில் இன்னமும் திமுகவில் பலர் இருக்கிறார்கள். அதனால் தேர்தல் தினம் வரை சுற்றி சுழன்று செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில்… இப்படி பாஜக இரண்டாவது இடத்தை பிடிக்க கூடிய அபாயம் இருக்கிறது என்ற ஒரு குண்டை போட்டு திமுகவினரை எச்சரிக்கை செய்வது கூட ஸ்டாலினுடைய திட்டமாக இருக்கலாம். மீண்டும் நாம் தான் முற்று முழுதாக ஜெயிக்க போகிறோம் என்ற மிதப்பில் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கூட இப்படி தலைவர் எச்சரித்திருக்கலாம்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”விலைவாசி குறைய வேண்டுமென்றால்…” : ஐடியா சொன்ன கதிர் ஆனந்த்
முதல் பாதியில் அதிர்ச்சி… இரண்டாம் பாதியில் அதிரடி : டெல்லியை பந்தாடிய பராக்!
BJP ஐ விடக்கூடாது.