டிஜிட்டல் திண்ணை: யாருடன் கூட்டணி? தமிழக பாஜக நிர்வாகிகளிடம் மோடி

அரசியல்

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் சில கேள்விகள்  இன்பாக்ஸில் வந்து விழுந்திருந்தன. அவற்றை சீன் செய்ததும் பதிலை விரிவாக டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.

 “தமிழ்நாட்டுக்கு ஜூலை 28, 29 தேதிகளில் பிரதமர் மோடி  வருகை தந்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவுக்காக சென்னை வந்த பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து மாலை 5 மணிக்கு வருவதாக இருந்தார். ஆனால் தாமதமாகத்தான் வந்தார். அதனால், அடுத்தடுத்த அவரது நிகழ்வுகளும் தாமதமாகிவிட்டன.

நேரு உள் விளையாட்டரங்கில் செஸ் துவக்க விழாவை தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் அமர்ந்து துவக்கி வைத்த பிரதமர் மோடி விழா முடிந்து இரவு உணவுக்காக ஆளுநர் மாளிகைக்கு வந்தார். ரெஃப்ரெஷ் செய்துவிட்டு  நிர்வாகிகளை சந்திக்க  இரவு 8.45  ஆகிவிட்டது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரின் கான்வாயில் வந்தார்.  ஆளுநர் மாளிகையில் பிரதமரை முறைப்படி விட்டுவிட்டு அவர் புறப்பட்டார்.

பிரதமர் ஆளுநர் மாளிகைக்கு வருவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் முன்பாகவே அவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டிருந்த  தமிழக பாஜக நிர்வாகிகள் ஆளுநர் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர். தமிழக பாஜகவின் பேரன்ட் பாடி அதாவது கட்சி தலைமை நிர்வாகிகள் மற்றும் மாநிலத் தலைவரின் அனுமதி பெற்ற பிரத்யேகமான சிலர் மட்டுமே பிரதமரை சந்திக்கும் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.  தமிழக பாஜகவின் சீனியர்களாக இருந்தாலும் அணி நிர்வாகிகளாக இருப்பவர்கள் பிரதமரை சந்திக்கும் பட்டியலில் இடம்பெறவில்லை.  இளைஞரணிச் செயலாளராக  8 வருடங்கள் பணியாற்றி தற்போது அண்ணாமலையால் மாநிலச் செயலாளராக ஆக்கப்பட்ட வினோஜ் பி. செல்வம்  போன்றோர் பிரதமரை சந்திக்கும் நிர்வாகிகள் பட்டியலில் இல்லை. ஆனால் அண்ணாமலைக்கு நெருக்கமான அமர்பிரசாத் ரெட்டி, மாவட்டத் தலைவர்கள் போன்றோர் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தலைமையில் நிர்வாகிகள் அவரை கூட்டாக சந்தித்தனர்.  ஆளுநர்  மாளிகையில் உள்ள ஓர்  உள்ளறையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. பிரதமர் வந்துகொண்டிருக்கிறார் என்று தகவல் தெரிந்ததும் கோவை சி.பி.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எம்..எல்.ஏ.வான  காந்தியிடம், ‘ஜி…. ப்ரைம் மினிஸ்டர் நேரா உங்களைத்தான் தேடி வருவார் பாருங்க. ஏன்னா இங்க இருக்கறவங்கள்யே அவருக்கு ரொம்ப நெருக்கமானவர் நீங்கதான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

மோடி- காந்தி டெல்லி சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

அடுத்த சில நிமிடங்களில்  அந்த இடத்துக்கு வந்த பிரதமர் உயரமான பலர் நின்றிருக்க இரு கைகளையும் விரித்துக் கொண்டே…. ‘எம்.ஆர்.ஜீ……’ என்று உரக்க குரல் எழுப்பியபடியே செருப்பு கூட போடாத எளிமையான   குள்ளமான உருவ அமைப்பு கொண்ட எம்.ஆர். காந்தியின் அருகே வந்து அவரது  இரு தோள்பட்டைகளிலும் தன் இரு கைகளை வைத்து உலுக்கியிருக்கிறார். அப்படி ஒரு துள்ளல், அப்படி ஒரு சந்தோஷம் மோடிக்கு.  காந்தியும் அவரும் ஆர்.எஸ்.எஸ்சில் ஆரம்ப கால நண்பர்கள் அல்லவா… அந்த  பழைய காலங்களை பற்றி சில நிமிடங்கள் உருகிப் பேசி, இப்ப எப்படி இருக்கீங்க. உடம்பு எப்படி இருக்கு, உடல் நலத்தைப் பாத்துக்கங்க என்று விசாரித்துள்ளார் மோடி,  எம்.ஆர். காந்தியும் மோடியும்  இப்படி பேசிக் கொண்டிருப்பதை ஒட்டுமொத்த நிர்வாகிகளும் பார்த்து வியந்திருக்கிறார்கள்.  அரசியல் ரீதியாக பார்த்தால் மோடி நாட்டின் பிரதமர், காந்தி இந்தியாவில் ஒரு மாநிலத்தில் ஒரு சட்டமன்றத்தின் எம்.எல்.ஏ. மட்டுமே. ஆனால் அந்த இடத்துக்கு வந்ததும் மோடி தேடி வந்த ஒரே நபர் காந்திதான். காரணம் ஆர்.எஸ்.எஸ். என்று அந்த நிமிடங்களை நினைத்து நெகிழ்கிறார்கள் அருகே இருந்தவர்கள். 

பொதுவான இந்த அறிமுகக் காட்சிகள், புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்ற காட்சிகள் எல்லாம் முடிந்தவுடன், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட  மையக் குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட  கூட்டத்தை ஒன்பது மணிக்கு மேல் தொடங்கி இரவு சுமார் 11 மணி வரை நடத்தினார் மோடி. அந்த கூட்டத்தில்  ஒவ்வொரு நிர்வாகியையும் பேசச் சொல்லியிருக்கிறார். அவர்கள் சொன்ன கருத்துகள் அப்படியே கணினியில்  ஹிந்தியில் தட்டச்சு செய்யப்பட்டு பிரின்ட் எடுக்கப்பட்டு அந்த கூட்டம் முடிவதற்குள் பிரதமரின் கையில் இருந்தன.

நிர்வாகிகளிடையே பேசிய மோடி, ‘வட இந்தியாவில் நாம் செல்வாக்காக இருக்கிறோம். ஆனால் தென்னிந்தியாவில் நாம் பலவீனமாக இருக்கிறோம்.  தமிழ்நாட்டில் நாம் இன்னும்  ஆழமாக வளரவேண்டியிருக்கிறது.  தமிழ்நாட்டின் கள நிலவரம் எனக்குத் தெரியும்.  வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம்  5 தாமரை எம்பிக்களை நாம் தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும். குறைந்தபட்சம்தான் 5 என்று சொல்கிறேன். அதிகபட்சம் அதையும் தாண்டி அனுப்பலாம். கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள் இருக்கும் சுய விருப்பு வெறுப்புகளை களைந்துவிட்டு கட்சிக்காக உழையுங்கள். நமது பிரச்சினைகளை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

கட்சி வேலைகளை தீவிரமாக பாருங்கள். கூட்டணி உண்டா இல்லையா, யாரோடு கூட்டணி என்பதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். தாமரை சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை மட்டும் பாருங்கள்” என்று பிரதமர் பேசி முடித்தார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் சென்றது வாட்ஸ் அப்.

+1
0
+1
9
+1
1
+1
5
+1
4
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *