ராஜன் குறை
சென்ற வாரம் சமூக ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் எனப் பலவற்றிலும் மீண்டும் பேசுபொருளானது வாரிசு அரசியல். முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் சிலர் கடும் கோபத்துடன் எழுதுகிறார்கள். வாரிசுகளுக்குப் பதவி கொடுத்தால் மக்களாட்சியே இறந்து விடும் என்று எழுதுகிறார்கள்.
யாராவது நடைமுறை அம்சங்கள், சட்டம், கோட்பாடு என்று பேசத் தொடங்கினால் “என்ன பெரிய தத்துவத்தை தூக்கிக் கொண்டு வந்துவிட்டாய்” என்று பொங்குகிறார்கள். “முட்டு” என்று உடனே சொல்லி விடுவார்கள். வாரிசு அரசியல், குறிப்பாக, வாரிசு அரசியல் தலைமை என்பது சீரழிவு, மக்களாட்சிக்கு முற்றிலும் எதிரானது என்று முரட்டுத்தனமாக நம்புகிறார்கள்.
இந்த நம்பிக்கையில் உள்ள முதற்பெரும் சிக்கல் என்னவென்றால் மன்னராட்சியையும், மக்களாட்சியையும் இவர்கள் எப்படி வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் என்பதுதான். இந்த இரண்டுக்கும் இடையில் முக்கிய வேறுபாடே வாரிசு முறையில் பதவியில் அமர்வதா, இல்லையா என்பதுதான் என்று இந்த கோபக்காரர்கள் நினைக்கிறார்கள். எப்படி என்று தெளிவாகப் புரிந்து கொள்வோம்.
மன்னராட்சியில் அரியணையில் அமர்ந்திருந்தவருக்குப் பிறகு அவரது மகனோ, மகளோ அரியணை ஏறுவார்கள். வாரிசுகள் சிறு வயதினராக இருந்தால் அவர்களது மனைவிகூட அரசியாக பட்டம் சூட்டிக்கொள்வார். அதாவது மன்னர் பதவி வாரிசு அடிப்படையில் தொடரும்.
மக்களாட்சி என்றால் எல்லா ஆட்சியாளர்களுமே தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். கட்சித் தலைவர் பதவிக்கும் உட்கட்சி தேர்தல் மூலம்தான் யாரும் தேர்வு செய்யப்பட வேண்டும்; இந்தத் தேர்தலில் பலரும் போட்டியிட ஒருவர் பெரும்பான்மை வாக்குகள் பெற்றுத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
அப்படித் தேர்தல் மூலமாகக் கூட, பிரதமரின், முதலமைச்சரின், கட்சித் தலைவரின் மகனோ, மகளோ அதே பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டால் அது மறைமுகமாக வாரிசு அரசியல் ஆகிவிடும், உண்மையான மக்களாட்சியாக இருக்காது என்று நம் கோபக்காரர்கள் நம்புகிறார்கள்.
கட்சி தேர்தலில் வேறு யாரும் போட்டியிடவில்லை என்றால் கூட அது திணிப்பு, மக்களாட்சி இல்லை என்று சொல்கிறார்கள். கட்சி விரும்பியே வாரிசை தலைவராகத் தேர்ந்தெடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். விநோதமாக மக்களாட்சியின் பேரில் கட்சியினரின் தேர்வுக்கான உரிமையையே மறுக்கிறார்கள்.
வாரிசு முறைதான் மன்னராட்சியின் பிரச்சினையா?
வாரிசு முறையில் தலைமைக்கு வருவதுதான் மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்குமான முக்கிய வேறுபாடு என்று நினைப்பதாலேயே இவர்களுக்கு ஓர் அரசியல் தலைவரின் மகனுக்கோ, மகளுக்கோ ஏதும் பதவி கொடுக்கப்பட்டால் கடும் கோபம் வருகிறது. இவர்கள் கற்பித்துக்கொள்ளும் இந்த வேறுபாடு முற்றிலும் தவறானது என்று சொன்னால் மேலும் கோபித்துக்கொள்வார்கள். வள்ளுவர் வாக்கு என்ன?
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
சரி… மெய்ப்பொருளை எப்படிக் காண்பது? அரசியல் தத்துவத்தின் வரலாறு குறித்த நூல்களைப் பயிலவேண்டும். எப்படிக் கடந்த அறுநூறு ஆண்டுகளில் அரசியல் குறித்த சிந்தனைகள் உருவாகி வந்துள்ளன என்பதைக் குறித்த சிறந்த ஆய்வு நூல்கள் பல எழுதப்பட்டுள்ளன. மக்களாட்சி சிந்தனை எப்படி மலர்ந்தது என்று பல அற்புதமான ஆய்வுகள் உள்ளன.
உலகெங்கும் பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், ஆய்வுப் படிப்பு என்று பல்வேறு நிலைகளில் அரசியல் கோட்பாடுகளும், நடைமுறைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. இது தொடர்பான நூல்களையெல்லாம் எல்லோரும் தேடிப் படிப்பது கடினம். போதுமான அவகாசம் இருக்காது. அதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்கிறார்.
கற்றிலன் ஆயினும் கேட்க; அஃதொருவர்க்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
நான் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் தத்துவ நூல்களை, கோட்பாட்டு நூல்களை, பல்வேறு நாடுகளின் அரசியல் வரலாறுகளைப் படித்து வருகிறேன். கற்றது கைமண்ணளவு என்பதுதான் என் நிலை என்றாலும்கூட, நிச்சயம் மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்குமான முக்கிய வேறுபாடு வாரிசு முறை என்பது அல்ல என்று சொல்ல முடியும்.
அப்படியானால் என்னதான் வேறுபாடு? மிக முக்கியமான வேறுபாடு, அதிகாரப் பகிர்வு என்பதுதான். அதிகாரம் ஒரே புள்ளியில் குவிந்துவிடக் கூடாது. ஒரே மனிதரிடம் குவிந்துவிடக் கூடாது. எதேச்சதிகாரிகளும் (Despots), சர்வாதிகாரிகளும் (Dictators) தோன்றக் கூடாது. அதற்கான பாதுகாப்புதான் மக்களாட்சி தத்துவம், கோட்பாடு, நடைமுறை எல்லாம்.
அந்தப் பாதுகாப்புக்காகத்தான் அதிகாரத்தை நான்காகப் பிரிக்கிறது மக்களாட்சி.
ஒன்று, அரசு இயந்திரம் – அரசு அதிகாரிகள், ராணுவம், காவல்துறை;
இரண்டு, மக்கள் பிரதிநிதிகள் – நாடாளுமன்றம்/சட்டமன்றம், அமைச்சரவை;
மூன்று, நீதிமன்றம் – அரசியலமைப்பு சட்டம், சட்டத்தின் ஆட்சி;
நான்கு, பொதுமன்றம் -ஊடகங்கள், குடிமைச் சமூக இயக்கங்கள், எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள்.
இதைத் தவிரவும் ஆட்சியதிகாரமும், உள்ளூர் ஆட்சி, மாவட்ட ஆட்சி, மாநில ஆட்சி, ஒன்றிய ஆட்சி எனப் பல அடுக்குகளாக பகிரப்படுகிறது. இதையெல்லாம் ஒருங்கிணைக்கும் விதத்தில் தலைமை பொறுப்புகள் இருக்கின்றன என்றாலும் அவற்றில் யாரும் சுலபத்தில் எதேச்சதிகாரியாக, சர்வாதிகாரியாக மாற முடியாது என்பதுதான் இந்த அமைப்பின் முக்கியத்துவம்.
அதாவது யார் எப்படி தலைமைப் பொறுப்புக்கு மன்னராகவோ, பிரதம அமைச்சராகவோ, முதல் அமைச்சராகவோ வருகிறார்கள் என்பதல்ல; அவர்கள் எப்படி நீதி, நெறி வழுவாமல் அறம் சார்ந்து ஆட்சி செய்வார்கள் , அதை உத்தரவாதம் செய்யும், அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கும் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வியை எதிர்கொள்ளும் விதமாகவே மக்களாட்சி தத்துவம் சிந்திக்கிறது எனலாம்.
சுருங்கச் சொன்னால் தேர்தல்களின் நோக்கம் வாரிசை தவிர்ப்பது அல்ல; வாரிசானாலும், யாரானாலும் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும், மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றாக வேண்டும் என்பதை உத்தரவாதம் செய்வதுதான். கட்சிக்குள்ளும் அதேதான் நிலை. தொண்டர்களின், கட்சி நிர்வாகிகளின் ஆதரவைப் பெற்றாக வேண்டும்.
வாரிசு தலைவர்களால் கட்சியினர் ஆதரவையோ, மக்கள் ஆதரவையோ மிரட்டிப் பெற முடியாது, விலை கொடுத்து வாங்க முடியாது என்பதை நிரூபிக்க ஓராயிரம் உதாரணங்களை உலக நாடுகளின் வரலாற்றில், இந்திய அரசியல் வரலாற்றில் காண முடியும். அப்படியிருந்தும் ஏன் இந்த வாரிசு புலம்பல் என்பதே கேள்வி.
மன்னர்கள் எல்லோரும் கொடுங்கோலர்களா?
இந்தக் கோபக்காரர்களின் வாதங்களில் இன்னொரு அபத்தமும் கடுமையாக தொனிக்கிறது. அது என்னவென்றால் மன்னராட்சி என்றாலே கொடுங்கோன்மை என்பதுதான் அது. “ஒருவன் ஒருவன் முதலாளி, உலகில் மற்றவன் தொழிலாளி” என்ற பாடலைப்போல மன்னரைத் தவிர எல்லோருமே அடிமைகளாக இருந்தார்கள் என்று கருதுகிறார்கள். மன்னரை எதிர்த்தால் “இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்” என்று கருதுகிறார்கள்.
மனித இனக்குழுக்கள் சேர்ந்து இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்தே தலைமைப் பதவி என்பது தோன்றிவிட்டது. காடுகளில் வேட்டையாடித் திரிந்தவர்கள், விவசாயம், வர்த்தகம், நகரம் என்று நிலைத்த வாழ்க்கைக்கு மாறியபோது மன்னர்கள், பேரரசர்கள் என்றெல்லாம் தோன்றினார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராட்சிதான் உலகம் முழுவதும் நிலவி வந்தது. மானுட நாகரிகங்கள் செழித்து வளர்ந்தன.

கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் 1776ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னராட்சியிலிருந்து சுதந்திரமடைவதைப் பிரகடனம் செய்தபோதுதான் உலகில் முதல் அரசியலமைப்பு சட்டத்தின்படி இயங்கும் மக்களாட்சி தோன்றியது எனலாம். அதைத்தொடர்ந்து 13 ஆண்டுகள் கழித்து பிரெஞ்சுப் புரட்சியின் தலைவர்கள் மனித உரிமை பிரகடனத்தை 1789ஆம் ஆண்டு வெளியிட்டது உலகிற்கு “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” ஆகிய புதிய கோட்பாட்டு அடித்தளத்தை அமைத்தது எனலாம். இருப்பினும் வயது வந்தோர்க்கெல்லாம் வாக்குரிமை (Universal Adult Franchise) என்னும் ஏற்பாடு உலகின் பல நாடுகளிலும் நடைமுறைக்கு வந்து நூறாண்டுகள்தான் இருக்கும்.
இந்த 100 ஆண்டு தேர்தல் நடைமுறை, 250 ஆண்டு அரசியலமைப்பு சட்ட ஆட்சி என்ற நடைமுறை ஆகியவற்றுக்கு முன்னால் நிலவிய மன்னராட்சி எல்லாமே கொடுங்கோன்மையானது என்றால் எப்படி பண்பாடு, நாகரிகம், கல்வி, கலை, அறிவியல் எல்லாம் வளர்ந்து செழித்திருக்க முடியும்? “மன்னர் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று மோசிகீரனார் கூறுவதன் பொருள் என்ன?
அரச நீதி என்பது என்ன என்று எல்லா பண்டைய மொழிகளிலும் தீவிரமாக சிந்தித்து வந்துள்ளார்கள். இன்றும் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது வள்ளுவரை மேற்கோள் காட்டுகிறார்கள். பாசன், காளிதாசன், ஷேக்ஸ்பியர், மில்டன், இளங்கோ, தாந்தே, கம்பன் என ஏராளமான பண்பாட்டுக் கருவூலங்கள் மன்னராட்சியில் தோன்றியதுடன் அரசியல் குறித்தும் மிகச் செறிவான கருத்துப் புதையலை தங்கள் படைப்புகளில் வழங்கியுள்ளார்கள். அதையெல்லாம் மறந்துவிட்டு வாரிசு அரசுரிமை காரணமாக எல்லோரும் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தது போல கற்பனை செய்வது நகைப்பிற்குரியது.
மன்னராட்சி, நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றிலிருந்து மக்களாட்சி நடைமுறை என்பதற்கு மானுடம் நகர்ந்தது நிச்சயம் முன்னேற்றம்தான். இதனூடாக அரசியல் தத்துவம் மிகவும் மேம்பட்டுள்ளது. ஆனால் அதற்காக மன்னராட்சி முறை என்பது அரச நீதி என்பதற்கு முற்றிலும் தொடர்பற்றது போல நினைப்பதும், வாரிசு, வாரிசு என்று பதறுவதும் நகைப்பிற்குரியது.
இந்திய மக்களாட்சி அனுபவத்தில் வாரிசு தலைமையின் இடம் என்ன?
இந்தியாவில் கருத்தியல் ரீதியாக மூன்று வகையான அரசியல் கட்சிகள் உள்ளன. ஒரு சிறிய அட்டவணையாகப் பார்க்கலாம்.

இந்துத்துவ அரசியல் பேசும் பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் வழி நடத்தப்படுவது. கட்சி தலைமை பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆலோசனையின் பேரில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தேர்தல் கிடையாது. அதே போல பாரதீய ஜனதா கட்சியிலும் நியமன முறை அதிகம். உதாரணமாக கட்சியில் புதிதாகச் சேர்ந்த அண்ணாமலையை, பல சீனியர் தலைவர்களைப் புறக்கணித்து தமிழ் நாடு மாநிலத் தலைவராகக் கட்சி மேலிடம் நியமனம் செய்தது.
பொதுவுடமை கட்சிகள் பொலிட்பூரோ என்ற கட்சியின் மத்திய அமைப்பை தேர்வு செய்த பின் அதன் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதே விதி. இதை ஜனநாயக மத்தியத்துவம் என்று அவை அழைக்கின்றன.
இந்த இரண்டு வகைகள் தவிர பெரும்பான்மையான வெகுஜன அரசியல் கட்சிகள் வாரிசு அரசியல் தலைமை என்பதையே பின்பற்றுகின்றன. இந்திய தேசிய காங்கிரஸ் இதற்கு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது. இந்தியாவில் வெகுஜன அரசியலை முதல் முறையாக உருவாக்கிய மகாத்மா காந்தி தன்னுடைய வாரிசு என ஜவஹர்லால் நேருவை குறிப்பிட்டு, அவரை காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் உறுதிப்படுத்தினார்.
நேரு பிரதமராக இருந்தபோதே அவர் மகள் இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை வகித்தார். நேருவின் மரணத்துக்குப் பின் லால்பகதூர் சாஸ்திரி அமைச்சரவையில் இணைந்த இந்திரா காந்தி, அதன் பின் பிரதமரானார். அவர் 1984ஆம் கொலையுண்ட போது அவர் மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார். ராஜீவும் கொலையுண்ட பிறகு, தற்சமயம் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய விசையாக விளங்கி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி மட்டுமில்லாமல் பெருவாரியான மாநில அளவிலான வெகுஜன கட்சிகளும் வாரிசு அரசியல் தலைமை என்பதை கட்சியின் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், வரலாற்று தொடர்ச்சியை மக்களுக்கு உணர்த்தவும், மக்கள் ஆதரவைத் தொடர்ந்து பெறவும் பின்பற்றுகின்றன. அது இந்திய வெகுஜன அரசியலின் முக்கிய பண்பாக கடந்த எழுபது ஆண்டுகளில் உருவாகியுள்ளதை நாடு முழுவதும் காண முடிகிறது.

பாசிசமே மக்களாட்சியின் முக்கிய எதிரி
கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றபிறகு இந்திய மக்களாட்சி மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடப்பதில்லை. பல முக்கிய சட்டங்கள் விவாதமின்றி பெரும்பான்மை உறுப்பினர் ஆதரவு இருப்பதால் அவசரமாக நிறைவேற்றப்படுகின்றன. பிரதமர் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பதில்லை.
யாரையும் கலந்தாலோசிக்காமல் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு என்ற நடவடிக்கையை எதேச்சதிகாரமாக செயல்படுத்தினார். மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. அதனால் எந்த நன்மையும் விளையவில்லை.
பெரு முதலாளிகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச்சலுகை, வங்கிக் கடன் உதவி, கடன் தள்ளுபடி என லட்சம், கோடிகளில் நிதி சுரண்டப்படுகிறது. அதற்குப் பிரதிபலனாக பாஜக ஆயிரக்கணக்கான கோடிகள் தேர்தல் நிதியாகப் பெற்றுக்கொள்கிறது. இது எதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை. மக்கள் இது குறித்த தகவல்களை அறிய முடிவதில்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தங்கள் பணிகளில் கடும் தலையீடு இருப்பதாக முறையிட்டனர். நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் ஆகியவற்றில் பல சர்ச்சைகள் வெடிக்கின்றன. நீதிமன்றங்களில் அரசியல் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுகின்றன. சுயேச்சையாக இயங்க வேண்டிய அரசு அமைப்புகள், ஆளும் கட்சியின் ஏவலுக்குக் கட்டுப்பட்டு இயங்குகின்றன.
அரசியல் கருத்தாளர்கள் கொல்லப்பட்டனர்; பல மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொய் குற்றங்களில் கைது செய்யப்பட்டு கால வரையறையின்றி சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மை மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பதே கிடையாது. அவரால் அவர்கள் கேள்விகளுக்குப் பொறுமையாக பதிலளிக்க முடியாது. அவர் பொதுவெளியில் யாருடனும் எதையும் கலந்தாலோசிப்பதாக கூறுவதேயில்லை. குறிப்பாக பொருளாதார வல்லுநர்கள், கல்வியாளர்கள் யாருடனும் அவர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்வதேயில்லை.

வாரிசை கண்டு அஞ்சும் பாசிசம்
மோடிக்கு நேர் மாறாக ராகுல் காந்தி அனைவருடனும் பொதுவெளியில் உரையாடுகிறார். கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். பத்திரிகையாளர்களை தொடர்ந்து சந்திக்கிறார். பாரத் ஜாடோ யாத்ரா என்ற மிக நீண்ட நடை பயணத்தில் அனைத்து தரப்பு மக்களுடனும் தொடர்ந்து தடையின்றி, மனம் திறந்து உரையாடுகிறார்.
உண்மை இப்படி இருக்க, வாரிசு அரசியலே மக்களாட்சி பெரும் தீங்கு என்று பாரதீய ஜனதா கட்சி பிரச்சாரம் செய்கிறது. பிரதமர் முதல் அனைத்து மட்டங்களிலும் பாஜக தலைவர்கள் வாரிசு அரசியல் தலைமை என்பது மிகப்பெரிய தீங்கு என பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில்தான் சமூக வலைதள கருத்தாளர்கள், ஊடக கருத்தாளர்கள் எல்லாம் போதிய தரவுகளும் ஆய்வுகளும் இன்றி வாரிசு அரசியல் தலைமை தவறு என்று கிளிப்பிள்ளைகள் போல சொல்லி வருகிறார்கள். இவர்களுக்கு நடைமுறையும் புரிவதில்லை, அரசியல் தத்துவமும் தெரிவதில்லை. தன்னாலும் தெரிவதில்லை. சொன்னாலும் புரிவதில்லை. அவர்கள் கற்கவும், கேட்கவும், சிந்திக்கவும் முற்படுவது காலத்தின் கட்டாயம் எனலாம்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
இன்னுமொரு தேசிய கட்சி தேவையா? சாத்தியமா?
கலையின் மனசாட்சி: நடாவ் லபீட் என்ற கலைஞனும், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமும்
வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!
குடும்பத் தொழில் அரசியல் என்றால் தவறில்லை; பிற தொழில் என்றால் குலத்தொழில்! எத்தகைய ஏரணம்!
இவ்ளோ பெரிய கட்டுரையில் ராகுல்காந்தி காங்கிரஸ் என்று வருகிறது ,திமுக என்றோ உதயநிதி என்றோ கட்டுரைக்கு நேரடித்தொடர்பாளர்கள் பற்றி வார்த்தைகூட வரவில்லை என்பதை நாம் தற்செயலானதென்றே புரிந்துகொள்ள வேண்டும் …
இவ்வளவு தத்துவார்த்த ஆராய்ச்சிக்கு முன் கொஞ்சம் திமுக வாரிசுகளை தேர்ந்தடுப்பதன் பின்புலத்தை சற்று அலசியிருந்தால் புடிபட்டிருக்கக்கூடிய விஷயம் ..
கட்டுரையிலேயே அரசியல் நிலைத்தன்மையென்ற சொல் சிறிது நிம்மதியைத்தருகிறது இந்தப்புள்ளியில் கூறாய்வு செய்திருந்தாலாவது உண்மை புலப்பட்டிருக்கும் ….
குலத்தொழிலை வரலாற்றுத்தொடர்ச்சியாகப்புரிந்துகொள்ளலாம்…
திமுகவின் கடைநிலை கிராமத்தலைமை அந்த ஊரின் பெரும்பான்மை சாதியின் வாரிசுகள் பெரும்பாலும் குலத்தொழில் பாரம்பரியமான வரலாற்றுத்தொடர்ச்சியுடன் தொடர்கிறார்கள் ,அதன் தொடர்ச்சி இதுவா இதன் தொடர்ச்சி இதுவா என்று நம் ஆராய்ச்சியைத்தொடர்ந்தால் நம்புரிந்துகொள்ள விடயங்கள் கிடைக்கலாம்….
மிகச்சிறந்த கட்டுரை.
ஆகச்சிறந்த மேற்கோள்கள், உதாரணங்கள். திருக்குறளை மேற்கோள் காட்டியது இன்னும் சிறப்பு. கருத்துப் புரிதலையும், தெளிவையும் ஏற்படுத்தியதற்கு நன்றி.
இதைவிட கேவலமான முட்டு இந்த உலகில் தோன்ற போவதே இல்லை..மகா கேலவம்..
மின்னஞ்சல்கள் செய்தியை பல வருடங்களாக நான் வாசித்து வருகிறேன் நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாகவே அனைத்து செய்திகளும் உள்ளன
இது ஒரு வகையான மேதாவி அடிமை
நானும் வாசித்து வருகிறேன். எந்த பக்கம் ஞாயம் இருக்கோ அந்த பக்கம் தான் பேசுவாங்க. ஞாயத்தின் தரப்புக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்காக கவும் பேசுவது தான் நடுநிலை.