மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து இன்று (ஜூலை 30) பேசினார்.
கடந்த ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.
இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு இன்று(ஜூலை 30) பதிலளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர் சொல்லப்படவில்லை என்றால், அந்த மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டது என அர்த்தமில்லை. ஆனால் தவறான கருத்துகளை எதிர்க்கட்சிகள் பரப்பியுள்ளன.
யுபிஏ ஆட்சியில் 2004-2005 பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. 2006-07ல் 16 மாநிலங்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை. 2009ல் 26 மாநிலங்களின் பெயர் சொல்லப்படவில்லை.
அப்படியானால் இந்த மாநிலங்களை யுபிஏ அரசு புறக்கணித்ததா? அப்படி எடுத்துக்கொள்ள முடியுமா?
தவறான புரிதலோடு கருத்துகளை வெளியிட வேண்டாம். காங்கிரஸ் ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்ததா?
விவசாயிகள் மீதான தேசிய ஆணையம் 2006 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையானது சராசரி உற்பத்தி செலவை விட 50% அதிகமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் அந்த பரிந்துரை ஏற்கப்படவில்லை.
2007-ல் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை யுபிஏ அரசு நிராகரித்தது. காங்கிரஸ் கட்சி விவசாயிகளைப் பற்றி தற்போது முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்வது வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வயநாடு நிலச்சரிவில் 95 பேர் பலி… ரூ.5 கோடி நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்
போதைப்பொருள் கடத்தல் : திமுக நிர்வாகி நீக்கம்!