ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ப்ளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டம் நேற்று (மே 23) சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரியும்.
அதேநேரம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோதே மைதானத்தின் கேலரியில் முக்கியமான சந்திப்பும் நடந்திருக்கிறது. கடந்த மே 6 ஆம் தேதி இதே சென்னை மைதானத்தில் சென்னை அணிக்கும் மும்பை அணிக்குமான ஆட்டத்தின்போது கேலரியில் முதலமைச்சர் ஸ்டாலினுடைய மருமகன் சபரீசனை அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் திடீரென சந்தித்தார். விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த சந்திப்பு அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அதைவிட பல மடங்கு அதிர்வு ஏற்படுத்தும் வகையிலான சந்திப்பு நேற்று ( மே 23) நடந்திருக்கிறது. சென்னை அணிக்கும் குஜராத் அணிக்குமான ஆட்டத்தை ரசிக்க நேற்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா வந்திருந்தார். தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்த கிரிக்கெட் போட்டியை நேரில் ரசித்தார்.
விளையாட்டு நடந்துகொண்டிருந்தபோதே ஜெய் ஷாவை சென்று சந்தித்திருக்கிறார் உதயநிதி. இருவரும் கைலுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜெய் ஷா அமைச்சர் உதயநிதியிடம், ‘தமிழ்நாடு சட்டமன்றத்தில் உங்களிடம் ஐபிஎல் டிக்கெட் கேட்கப்பட்டபோது… என் பெயரைச் சொல்லி என்னிடம் கேட்கச் சொன்னீர்களாமே?’ என்று கேட்டு சிரித்துள்ளார் ஜெய் ஷா. இதை எதிர்பாராத உதயநிதி பதிலுக்கு பலத்த சிரிப்பு சிரித்து சமாளித்துள்ளார்.
கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் சுக்கான டிக்கெட்டுகளை எம்.எல்.ஏ.க்களுக்கு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘உங்க நண்பர் அமித் ஷா இருக்காருல்ல அவர் மகன் ஜெய் ஷா தான் இந்தியாவுக்கே கிரிக்கெட் வாரிய செயலாளர். அவர்கிட்ட கேட்டா கிடைக்கும். அவர் உங்களுக்கு ரொம்ப வேண்டியவர்” என்று பதிலளித்திருந்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த இந்த சுவாரஸ்யம் தேசிய ஊடகங்கள் வரை பேசப்பட்டது. அப்போதே இது ஜெய் ஷா கவனத்துக்கும் சென்றிருக்கிறது.
அதை நினைவு வைத்திருந்துதான் நேற்று உதயநிதியிடம் நேருக்கு நேர் கேட்டு சிரித்திருக்கிறார் ஜெய் ஷா.
-வேந்தன்
ஆடல்-பாடல் நிகழ்ச்சி : காவல்துறைக்கு புதிய உத்தரவு!
சிங்கப்பூர் – தமிழ்நாடு : 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து!