பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கான்வாய் செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
அமைச்சர் வீடியோ வைரல்
தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வாகனத்திற்காக நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது போன்ற வீடியோ தான் அது.
உண்மை என்ன?
பாலத்தின் ஒரு முனையில் ஆம்புலன்ஸ் ஒன்று காத்திருக்க, அந்த பாலத்தில் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழியின் பாதுகாப்பு வாகனம், கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. பலரும் இதுகுறித்து விவாதித்து வரும் நிலையில் அங்கு உண்மையில் நடந்தது தான் என்ன என்பது தெரியவந்துள்ளது.
அன்பில் மகேஷ் ஆய்வு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் மேட்டூரில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்பட்டு காவிரி ஆற்றில் வெள்ளம் பாய்ந்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தண்ணீர் புகுந்தது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்லணையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரை பகுதியில் செல்லும் போது தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அணைக்கரை பாலம் என்பது கும்பக்கோணம், அரியலூர், கடலூர் ஆகிய ஊர்களை இணைக்கும் பகுதி. அதோடு இது ஒரு வழிப்பாதை ஆகும். குறுகிய பாலத்தின் வழியே ஒரு சமயத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். இதனால் தான் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
பழமையான பாலம்
மேலும் இதுகுறித்து பேசியவர்கள், `தஞ்சாவூர் மாவட்டத்தையும் அரியலூர் மாவட்டத்தையும் இணைக்க கூடியது அணைக்கரை பாலம். பழமையான பாலம் என்பதால் அதில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு, கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் அதிக அளவிலான வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருப்பதால் ஒருவழிப்பாதையாக பாலத்தில் போக்குவரத்தை போலீஸார் ஒழுங்குப்படுத்தி வருகின்றனர். பாலத்தின் ஒரு கரையில் வாகனங்கள் உள்ளே சென்றால் மற்றொரு கரையில் நிறுத்தப்படும். குறிப்பிட்ட அளவு வாகனங்கள் சென்ற பிறகே அடுத்த கரையில் நிற்கும் வாகனங்களை அனுமதிப்பர். இந்த நடைமுறை வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வதந்தி பரப்புகிறார்கள்
இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சுற்றுலா மாளிகையிலிருந்து பாலத்தின் வழியாக புறப்பட்டார். அப்போது எதிர் திசையில் ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது.
அமைச்சரின் வாகனம் பாதி வரை வந்துவிட்டதாலும் பின்னால் தொடர்ந்து வாகனங்கள் இருந்ததாலும் அதனை திருப்பி அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் ஆம்புலன்ஸை பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ் நிறுத்தினார்.
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர், தி.மு.க நிர்வாகிகள் என 15க்கும் மேற்பட்ட கார்கள் சென்ற பிறகே ஆம்புலன்ஸ் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. அந்த பாலத்தில் யார் சென்றிருந்தாலும் இப்படிதான் நடந்திருக்கும்” என்கின்றனர்.
இந்த சம்பவம் கடந்த 6ஆம் தேதி நடந்துள்ளது.
கலை.ரா
அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்?: ஓபிஎஸ் ஈபிஎஸ்