திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஆலோசனைகள் செய்து வருவதாக சொல்கிறார்கள் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவிடத் திறப்பு விழா, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (பிப்ரவரி 26) கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் திமுக எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பாமக கெளரவ தலைவரும், சட்டமன்ற குழு தலைவருமான ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், ஆனால், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் எம்எல்ஏ மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
வேல்முருகன் விழாவிற்கு வராதது பற்றி கூட்டணி கட்சிகளிடையே வினாக்கள் எழுந்தது. இதுகுறித்து, தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ-வைத் தொடர்புகொண்டு கேட்டோம்.
“எனக்கு கடுமையான முதுகு வலி. அதேநேரத்தில், திமுக மீது அதிருப்தியும் மனவலியும் உள்ளதால், கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் கலந்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இருந்தாலும், பாசிச பாஜக தமிழகத்தில் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக பொதுக்குழுவைக் கூட்டி மாற்றியோசிக்க முடிவு செய்துள்ளேன்” என்றார்.
தவாக முக்கிய நிர்வாகிகளிடம் வேல்முருகன் அதிருப்தியை பற்றிக் கேட்டபோது, “கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் எங்கள் தலைவரை அழைத்து பேசவும் இல்லை, முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. நாங்கள் எதை சொன்னாலும் அமைச்சர்கள் செய்வதில்லை. அதனால் பொதுக்குழுவைக் கூட்டி, வன்னியர் வாக்குகள் அதிகமுள்ள பத்து தொகுதிகளில் தனித்து போட்டியிட ஆலோசனை செய்து வருகிறார் எங்கள் தலைவர்” என்கிறார்கள்.
_வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போதைப்பொருள் வழக்கு: திமுக அரசை கண்டித்து எடப்பாடி ஆர்ப்பாட்டம்!
WPL 2024: உ.பி வாரியர்ஸ் அணியை எளிதில் வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்