கடந்த 20 நாட்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம் குறித்து மோடி மவுனம் கலைக்க வேண்டும் என்பதற்காக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
அதன் மீது கடந்த 3 தினங்களாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் என்ற வார்த்தையை உச்சரித்ததைவிட, தி.மு.க, தமிழ்நாடு என்று உச்சரித்ததுதான் அதிகமாக இருந்தது.
கடந்த 9ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, “இந்தியா என்றால் வடஇந்தியாதான் என்று தமிழ்நாட்டில் தி.மு.க. அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். இதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவிப்பாரா?”என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று (ஆகஸ்ட் 10) முதன்முறையாக வந்த பிரதமர் மோடியும், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசும்போது,”காங்கிரஸின் நெருங்கிய கூட்டணிக்கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சர் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்தியா ஒரு பொருட்டே இல்லை என்று கூறியிருக்கிறார். அவரை பொறுத்தவரை தமிழ்நாடு என்பது பாரத தேசத்திலேயே இல்லை என்று நினைக்கிறார்” என்று விமர்சித்தார்.
இப்படி பிரதமரே விமர்சிக்கும் அளவுக்கு பேசிய அந்த திமுக அமைச்சர் எ.வ.வேலுதான்.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 11) பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலடியாக அமைச்சர் எ.வ. வேலு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் காரணமாகத்தான் நாட்டின் பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர முடிந்திருக்கிறது என்பதிலிருந்தே ஜனநாயகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்குப் பொறுப்பு வகிக்கும் அரைவேக்காடுகள் போலவே ஒன்றிய அமைச்சர்கள் பேசுவது ஆச்சரியமளித்த நிலையில், நாட்டை ஆளக்கூடிய உயர்ந்த பொறுப்பில் 9 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் பிரதமரும் அதே வழியில் அவதூறான முறையில் நாடாளுமன்றத்தில் பேசியது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது.
எந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது, யார் எப்படி செயல்படுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளக்கூடிய உளவு அமைப்புகளை ஒன்றிய அரசு கொண்டுள்ள நிலையில், நாட்டின் பிரதமரிடம் எப்படிப்பட்ட தவறான தகவல்கள் கொண்டு செல்லப்படுகின்றன, அதை அவர் உறுதிப்படுத்தாமல் எப்படி பேசுகிறார் என்பதற்கு, இந்தியா என்றால் வடஇந்தியாதான் என்று பேசியதாக அமைச்சர்கள் முதல் பிரதமர் வரை பேசியிருப்பது காட்டியுள்ளது.” என்று எ.வ வேலு கூறியுள்ளார்.
உண்மையில் அமைச்சர் எ.வ.வேலு அப்படி பேசியது என்ன? எங்கு பேசினார், எப்போது பேசினார் என்பதை இங்கு காண்போம்!
கடந்த 5ஆம் தேதி சென்னை அண்ணாசாலை தேவநேய பாவாணர் நூலகத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பிலான கருஞ்சட்டை விருது நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அந்த நிகழ்வில் எ.வ.வேலு பேசும்போது, “ஒரு காலத்தில் இந்தியா என்ற வார்த்தையில் கூட நமக்கு பெரிய தாக்கம் இருந்தது கிடையாதே! வெளிப்படையாகவே சொல்கிறேன். நான் சொல்வது ஒரு காலத்தில்… இந்தியான்னா ஏதோ வடக்கே இருக்கிற ஊரு. நம்ம ஊரு தமிழ்நாடுதான். முடிந்தால் இதைத் திராவிட நாடாக்க முடியுமா என்று யோசிப்போம். நம்முடைய எண்ணங்கள் இலக்குகள் எல்லாம் இப்படி தானே போய்க்கொண்டிருந்தது.
ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை? ஏதோ தூரத்தில் இருக்கிற ஊர் இந்தியா என்று கேட்கப்பட்ட நிலைமையை மாற்றி, இன்று இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியா என்ற வார்த்தையில் பொது சிவில் சட்டம் மீதான எதிர்ப்பாக இருக்கலாம், சிறுபான்மை மக்களாகிய இஸ்லாமிய, கிறிஸ்துவ சகோதரர்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடுகளாக இருக்கலாம். இவற்றில் எல்லாம் பணியாற்றிய வேண்டிய அந்தப் பொறுப்பு தமிழனுக்கு இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. நம் அனைவருக்கும் இருக்கிறது” என்று பேசினார்.
அண்ணாமலையின் கட்டிங் வீடியோ!
இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் 7 ஆம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் விருது வழங்கும் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசிய வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டார்.
மேலும், “இது தான் இந்தியா கூட்டணியின் உண்மை முகம், ஒரு முறை பிரிவினைவாதியாக இருப்பவர் எப்போதும் பிரிவினைவாதி தான்” என்றும் பதிவிட்டிருந்தார்.
DMK Minister Thiru EV Velu expressing what they stood for. This is the true face of parties in the I.N.D.I. Alliance.
Once a separatist, always a separatist. pic.twitter.com/BC0V52inkQ
— K.Annamalai (@annamalai_k) August 7, 2023
அண்ணாமலை வெளியிட்ட அந்த 46 நொடி வீடியோவில், அமைச்சர் எ.வ.வேலு பேசியதன் முன்பகுதி மட்டுமே இருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் பேசிய வார்த்தைகள் இடம்பெறவில்லை.
இதனை அடிப்படையாக வைத்தே நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இரானியும், பிரதமர் மோடியும் பேசியிருந்தனர்.
இந்த நிலையில் தான் அண்ணாமலையின் கட் செய்யப்பட்ட வீடியோவையும் சுட்டிக்காட்டும் விதமாக, ”நான் பேசியதை முழுமையாக அறியாத அரைவேக்காடுகள் அதனைக் காதில் வாங்காமல், கவனம் செலுத்தாமல் அரசியல் விளம்பரத்திற்காக எதையோ செய்துவிட்டுப் போகட்டும். பிரதமர் கூடவா முழுமையாக எதையும் தெரிந்துகொள்ளாமல் இத்தனை காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார் என்பதை நினைக்கும்போது பரிதாபமும் வேதனையும் படுகிறேன்.” என்று அமைச்சர் எ.வேலு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே எ.வ.வேலு குறித்து பேசியது அவதூறான குற்றச்சாட்டு பேச்சுகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “மக்களவையில் ஆகஸ்ட் 9 மற்றும் 10-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் போது பிரதமர் மோடி மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சை தவறாக மேற்கோள் காட்டியுள்ளனர்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு மக்களவை உறுப்பினர் இல்லாத நிலையில் சபாநாயகருக்கு போதிய முன்னறிவிப்பு இல்லாமல் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் கூற முடியாது.
எனவே பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் எ.வ.வேலு குறித்து அவையில் பேசியது அவதூறான குற்றச்சாட்டு என்பதால் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
வாரிசு படத்தால் நஷ்டம்: விஜய்க்கு கேரள விநியோகஸ்தர் கடிதம்!
“எ.வ.வேலு குறித்து மோடி பேசியதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” – டி.ஆர்.பாலு கடிதம்!
அரைகுறை பேச்சு கேட்டா பிரதமரு பேசுறாரு? அப்ப அவருகிட்ட உளவுத்துறை அவ்ளொ லட்சணமா இருக்குனு அர்த்தம்…