பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தமிழ்நாடு பாஜக புகார் எழுப்பியுள்ளது.
சில வாரங்களுக்கு முன் பிரதமர் மோடி தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்தபோது, அவரை வரவேற்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட விளம்பரத்தில், இடம்பெற்றிருந்த ராக்கெட்டில் சீனக் கொடி பொறிக்கப்பட்டிருந்ததை பிரதமரே பொதுக்கூட்டத்தில் பேசினார். அது சர்ச்சையை ஏற்படுத்தியது. அது விளம்பர வடிவமைப்பாளர் செய்த பிழை என்று அப்போது பதிலளித்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
இந்த நிலையில் மார்ச் 22 ஆம் தேதி தூத்துக்குடி மக்களவை திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. இதில் அமைச்சர் அனிதா பேசிய பேச்சின் வீடியோ கிளிப்பை பகிர்ந்திருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
“நமது மாண்புமிகு பிரதமர் மோடிக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளையும் மன்னிக்க முடியாத பேச்சுகளையும் வெளியிட்டு திமுக தலைவர்கள் தங்களின் நேர்மையற்ற நடத்தையில் புதிய தாழ்வு நிலையை அடைந்துள்ளனர்.
பிரதமர் மோடியை விமர்சிக்க எதுவுமே இல்லாத போது, திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மிகவும் கீழ்த்தரமாக பேசியிருக்கிறார். மேடையில் இருந்த திமுக எம்.பி.யான கனிமொழி கூட பெண்களை இழிவுபடுத்தும் இந்த பேச்சை தடுக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, இன்று தேர்தல் ஆணையத்திடமும் காவல்துறையிடமும் பாஜக எடுத்துச் சென்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடி சேலத்தில் காமராஜரை புகழ்ந்து பேசினார். அதுபற்றி திருச்செந்தூர் பேச்சில் குறிப்பிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “ஏதோ பெருந்தலைவர் காமராஜர் மோடியை கட்டியணைத்தது மாதிரி அவரைப் பற்றி பேசுகிறார் மோடி. ….. நீங்கள்லாம் என்ன பண்ணீங்க தெரியுமா? டெல்லியில காமராஜர் இருக்கும்போது அவரை கொளுத்திக் கொல்லணும்னு நினைச்ச பாவிங்க நீங்க” என்று பேசினார்.
DMK leaders have reached a new low in their uncouth behaviour by passing vile comments & unpardonable public discourse against our Hon PM Thiru @narendramodi avl.
When they have nothing to criticise, this is the level DMK leaders have stooped. DMK MP Smt Kanimozhi avl was on… pic.twitter.com/sTdQSNjkir
— K.Annamalai (@annamalai_k) March 24, 2024
இந்த பேச்சின் ஆங்கில சப் டைட்டிலோடு அண்ணாமலை அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில் அனிதா ராதாகிருஷ்ணன் குறிப்பிட்ட அந்த ஒரு வார்த்தை பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், பெண்களையே இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. பாஜகவின் வட இந்திய புள்ளிகளும் இந்த வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் அனிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அமலாக்கத் துறை தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் மார்ச் 26 ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.
அப்போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை நெருக்கடி அதிகரிக்கும் என்று பாஜக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
“சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொண்டு வரும் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது தமிழ்நாடு அரசில் அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் இவ்வழக்கை நடத்த வேண்டிய மாநில அரசு இவரது நலன்களை காக்க அக்கறை கொண்டுள்ளது.
இதன் மூலம் இவ்வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்ற சந்தேக நிழல் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே சொத்துக் குவிப்பு வழக்கில் அமலாக்கத் துறையை வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக (assist the prosecution) வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும், இந்த வழக்கில் மாநில அரசின் வழக்கறிஞருக்கு உதவுவதற்காக எழுத்துபூர்வமான ஆவணங்களையும் தாக்கல் செய்ய அமலாக்கத்துறையை அனுமதிக்க வேண்டும்” என்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையின் சென்னை மண்டல துணை இயக்குனர் கார்த்திகேயன் கடந்த 2023 ஏப்ரல் 19 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த மனு மீது எந்த முடிவையும் நீதிமன்றம் எடுக்காத நிலையில்… கடந்த மார்ச் 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கு மிக குறுகிய இடைவெளியில் மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கை விரைந்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிக்கை வைக்கும் என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரங்களில்.
அமைச்சர் அனிதாவின் திருச்செந்தூர் கூட்ட பேச்சும் சர்ச்சையாகியிருக்கும் நிலையில், வரும் 26 ஆம் தேதி வர இருக்கும் வழக்கு விசாரணை பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...
–வேந்தன்
ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய ராஜ்நாத் சிங்
திமுக கூட்டணியில் கமல்ஹாசன்: தேர்தல் பிரச்சாரம் எப்போது?
Comments are closed.