டங்ஸ்டன் சுரங்கத்தை ஆதரித்தேனா?: டெல்லியில் தம்பிதுரை பேட்டி!

அரசியல்

டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக இன்று (டிசம்பர் 9) தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் கனிமவள சட்டத்திருத்தம் கொண்டு வரும் போது அவையை ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அங்கு சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இங்கு தீர்மானம் கொண்டு வந்து என்ன பயன் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், “நாடாளுமன்றத்தில் கனிமவள மசோதா நிறைவேறும்போது, திமுக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எதுவும் தெரியாமல், தவறான தகவலை அவையில் பதிவு செய்யக்கூடாது. எங்களின் ஆதரவுடன் அந்த சட்டம் நிறைவேறவில்லை என்று நேருக்கு நேர் பதிலளித்தார்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரை, கனிமவள சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்தசூழலில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி , அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக எம்.பி தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. நான் அதுபோல எந்த காலக்கட்டத்திலும் நாடாளுமன்றத்தில் பேசியது கிடையாது.
2023 ஆகஸ்ட் மாதத்தில் கனிம வள சட்டத்தை கொண்டு வந்த போது அன்று இருந்த நிலவரம் வேறு.

யுபிஏ அரசாங்க காலத்தில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு, இந்த சட்டம் வருவதற்கு முன்பு கனிம வளங்களை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்தது.

அப்போது ஏலம் என்ற முறை இல்லாமல் தனியாருக்கு தாரை வார்த்ததன் காரணமாக நிலக்கரி ஊழல் என்ற மாபெரும் ஊழல் டிவிகளில் வெளியானது எல்லாம் உங்களுக்கு தெரியும்.

எப்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் இருந்ததோ அதுபோல திமுகவும், காங்கிரஸும் அங்கம் வகித்த யுபிஏ அரசாங்கம் தவறான வழியில் சுரங்கங்களை தனியாருக்கு தாரைவார்த்து நாட்டிற்கு பல லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுத்தின.

இதை தவிர்ப்பதற்காக மோடி அரசு, ஏலம் முறையில் கனிம வளங்களை தர வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தது.

அப்போது நான் பேசியது என்னவென்றால், “யுபிஏ அரசாங்கத்தில் நடந்த ஊழலை தடுக்க வேண்டும் என்றால் தனியாருக்கு நேரடியாக உரிமங்களை தரக்கூடாது.
ஏலம் முறை வரவேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன் என்று பொதுவாக சொன்னேன்.

நான், மதுரை மேலூர் பகுதி கதிராம்பட்டியில் டங்ஸ்டன் எடுக்க ஏலம் விடுவதற்கு உரிமை தர வேண்டும் என்று எக்காரணத்தை கொண்டும், எந்த நேரத்திலும் பேசியது கிடையாது.

அந்த சமயத்தில் நெய்வேலி சுரங்க நிறுவனம் நிலக்கரி எடுக்க நிலத்தை கையகப்படுத்தும் போது மக்கள் போராட்டம் நடந்துகொண்டிருந்தது.

எனவே விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் நிலக்கரி எடுப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது தவறு என்று நான் சுட்டிக்காட்டினேன்.

பொதுவாக தமிழ்நாட்டில் திமுக அரசு ஏலம் விடாமல், கனிமங்களை கேரளம், கர்நாடகாவுக்கு கடத்துகிறது.

எனவே ஏலம் என்ற முறை இருந்தால் தான் சரியாக இருக்கும் என்று பேசியிருக்கிறேனே தவிர டங்ஸ்டனுக்கு ஆதரவாக பேசியது கிடையாது.

ஏனென்றால் எங்களுடைய பொதுச்செயலாளர் ஒரு விவசாயி. திமுக ஆட்சியில் தஞ்சாவூர் பகுதியில் கார்பன் நைட்ரேடு எடுப்பதற்காக தனியாருக்கு நிலங்கள் தாரைவார்க்கப்பட்டன.

ஆனால் அந்த பகுதிக்கு பாதுகாப்பு தந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் தான் பேசியது தவறு என்று உணர்ந்துகொள்ள வேண்டும்.

இதுதவறு என்பதை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் திமுக ஐடி விங் தவறான செய்தியை வெளியிட்டது என சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பேன்.

ஏலம் முறைக்கு ஆதரவாக இந்தியா முழுமைக்காகவும் தான் பேசினேனே தவிர டங்ஸ்டன் எடுக்க ஆதரவு தெரிவித்து நான் பேசவில்லை.

அப்போது நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் ஏலம் விடும் முறை எங்களுக்கு வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கிறார். இது எல்லோருக்கும் தெரியும்.

ஏலம் தங்களுக்கு வேண்டும் என்று துரைமுருகன் உரிமைகோரினார். ஆனால் அதிமுக எக்காரணத்தை கொண்டும் அதற்கு ஒத்துப்போகவில்லை.

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு நான் உறுதுணையாக இருந்தேன் என்று பேசியதை திமுக அரசால் நிரூபிக்க முடியுமா?

மக்களை திசைதிருப்புவது வருந்தத்தக்கது” என்று விளக்கமளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

ஆயிரம் கைகள் மறைத்தாலும்… சஸ்பெண்ட் குறித்து ஆதவ் அர்ஜூனா ரியாக்சன்!

பிளஸ் ஆனா உப்பு தான் போல : அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0