அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகர் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு தினமும் முட்டை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கைதான ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர் என புகைப்படங்களுடன் ஆளும் திமுக அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனினும் திமுகவுக்கும், கைதான ஞானசேகருக்கும் எந்த தொடர்பும் இல்லை என திமுக தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் போது, “துணை முதல்வர், அமைச்சருடன் குற்றம்சாட்டப்பட்டவர் இருந்ததாக புகைப்படம் வெளியாகியுள்ளது. நாங்களும் திருமணத்திற்கு செல்கிறோம், எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள், அப்படி என்றால் அவர்களுடன் எங்களுக்கும் தொடர்பு என அர்த்தமா? யாருடன் யார் ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை. இது பொருந்தாத வாதம், குற்றச் சம்பவம் குறித்து பேசுங்கள்” என நீதிபதிகள் கண்டித்தனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் ஞானசேகர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், ”அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரன், அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் வெகு சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. பெஞ்சல் புயல் பணிகளின்போது, அமைச்சருடன் செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த ஞானசேகரன் குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் ஏன் இன்னும் விளக்கமளிக்கவில்லை?
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று நினைக்கிறது திமுக அரசு?
திமுகவினருக்காக மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறதா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, நமது சகோதரிக்கான நியாயத்தை விட, திமுகவைச் சேர்ந்த குற்றவாளி முக்கியமாகிவிட்டாரா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே சமூகவலைதளங்களில் ஞானசேகர் திமுக அமைச்சருக்கு தினமும் 10 முட்டைகளை வழங்கி வந்ததாக பதிவு வைரலாகி வருகிறது.

அதில், “நீர்வளத் துறை அமைச்சரும் திமுகழ பொதுச் செயலாளருமான துரைமுருகன் அவர்களுடைய கோட்டூர்புரம் இல்லத்தின் அருகில் உள்ள கோல்ட் ஜிம் (GOLD GYM) என்னும் உடற்பயிற்சி அரங்கத்தில் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியனுக்கு தினமும் காலை உடற்பயிற்சியின் போது மஞ்சள் கரு நீக்கப்பட்ட 10 வெள்ளை முட்டைகளை பயிற்சி முடிந்து பாலியல் குற்றவாளி ஞானசேகர் வழங்கி வந்துள்ளார்.
அமைச்சர் மா சுப்பிரமணியனுடன் வரும் நண்பர்களுக்கும் முட்டை பழங்கள் தினமும் உடற்பயிற்சி கூடத்தில் வழங்கி வந்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா