இன்று (டிசம்பர் 24) முன்னாள் முதல்வரும், அதிமுகவை நிறுவியவருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 37ஆவது நினைவுநாள்.
இதைமுன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் எம்.ஜி.ஆரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அவரை நினைவு கூர்ந்தனர்.
பொதுவாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் பிறந்தநாளுக்கோ அல்லது நினைவு நாளுக்கோ அதிமுகவினர் மெரினாவில் உள்ள அவர்களது நினைவிடங்களுக்கு செல்லும் போது இருவரது சமாதிக்கும் சென்று மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு வருவது வழக்கம்.

கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நினைவு நாள் அன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தனிதனியாக சென்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரு தலைவர்களின் சமாதிக்கும் சென்று மரியாதை செலுத்திவிட்டு வந்தனர்.
இந்த ஆண்டு (2024), 37ஆவது எம்.ஜிஆர் நினைவு நாளில், முக்கிய தலைவர் உட்பட பலரும் ஜெயலலிதா சமாதிக்கு செல்ல மறந்தனர்.
இன்று காலை 10.15 மணிக்கு முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என சுமார் 1000 பேருடன் கருப்பு உடை அணிந்து எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்றார் எடப்பாடி பழனிசாமி.
எம்.ஜி.ஆர் சமாதிக்கு மலர் தூவி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திவிட்டு, அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். “எம்ஜிஆர் வழியில் நேர்வழி சென்று தீய சக்தி திமுகவை வீழ்த்துவோம்” என்று சூளுரைத்தார். பின்னர் அங்கிருந்து 10.40க்கு வெளியேறினார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா சமாதிக்கு அவர் செல்லவில்லை.

அவரை தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் காலை 11.10 மணிக்கு வந்து எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு அருகில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கும் சென்று மரியாதை செலுத்தி, சில விநாடிகள் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக நின்றார். 11.25 மணிக்கு அங்கிருந்து வெளியே வந்தார்.

அடுத்ததாக சசிகலா, எம்.ஜி.ஆர் சமாதிக்குள் 11.30க்குள் உள்ளே நுழையும் போது, எதிரே ஓபிஎஸ் வெளியில் வந்தார். இருவரது காரும் சில விநாடிகள் நின்றது. அப்போது சசிகலா, ஓபிஎஸ் இருவரும் காரில் அமர்ந்தபடியே ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். (கடந்த ஆண்டு இதே நாளில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு வந்தபோது ஓபிஎஸ் காரில் இருந்து இறங்கி சென்று சசிகலாவைச் சந்தித்து வணக்கம் தெரிவித்தார்)

அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ‘ஓபிஎஸ் வாழ்க… ஓபிஎஸ் வாழ்க” என கோஷம் எழுப்பியதும், டென்ஷனான சசிகலா இருகிய முகத்துடன் காரை எடுக்கச் சொன்னார்.
அப்போது ஓபிஎஸ் உடன் வந்த 10 பெண்கள் சசிகலாவை நோக்கி ஓடி, ‘அம்மா கட்சிக்கு நீங்கதான் தலைமையேற்று நடத்த வேண்டும்’ என்று முறையிட்டனர்.
அதற்கு சசிகலா நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள். 2026ல் அம்மா ஆட்சிதான் மலரும் நீங்கள் ஒற்றுமையாக இருங்கள் என்று கூறி எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
பிறகு காருக்கு செல்ல முயன்ற போது, அவரிடம் வந்த ஒருவர் ‘ஜெயலலிதா சமாதி’ என்று நினைவுப்படுத்தியதும் உடனடியாக யூட்ரன் செய்து ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு 11.55 மணிக்கு வெளியில் புறப்பட்டார் சசிகலா.
கடைசியாக சென்ற டிடிவி தினகரன், எம்ஜிஆர் சமாதிக்கு மட்டும் மரியாதை செலுத்திவிட்டு, ஜெயலலிதா சமாதிக்கு செல்லாமல் வெளியேறினார்.

இவற்றையெல்லாம் பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், அங்கு கூடியிருந்த அதிமுக நிர்வாகிகளும், “ஆளாளுக்கு 2026ல் அம்மா ஆட்சியை அமைப்போம்… அம்மா ஆட்சியை அமைப்போம் என்று கூறுகின்றனர். ஆனால் இங்கு நடக்கிற நிகழ்வுகளை பார்த்தால் காலப்போக்கில் ஜெயலலிதாவையே மறந்துவிடுவார்கள் போல” என்று பேசிக்கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
ஒத்தையா நின்று தோற்பதை விட, கை கோர்த்து வாழலாம்!- நிஸ்ஸான், ஹோண்டா இணைய 5 காரணங்கள்!
திமுகவுக்கு பாமக நிபந்தனையற்ற ஆதரவு… ஆனால்: அன்புமணி வைத்த கோரிக்கை!