ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு இன்று ( ஆகஸ்ட் 13 ) நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சனை ஏற்பட்டது.
இதன் காரணமாக ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டுப் புறப்பட்டபோது விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது பாஜகவினர் செருப்பை வீசி எறிந்தனர்.

இதனை கண்டித்து திமுக எம்.எல்.ஏ.வும் ஐ.டி.விங் மாநில செயலாளருமான டி.ஆர்.பி ராஜா, “தேசியக் கொடி ஏற்றி தேசப்பற்றை நிரூபியுங்கள் எனச்சொல்லும் பாஜகவினர்தான், அமைச்சர் செல்லும் தேசியக்கொடி பொருந்திய வாகனத்தின் மீது செருப்பு வீசி, தேசியக்கொடியை அவமதிக்கின்றனர்.
அமைச்சரின் காரில் செருப்பு வீசிய நபர்களை உடனடியாக காவல் துறை கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் திமுக வினர் இதை கையில் எடுக்க வேண்டியது வரும்” என்று கூறினார்.
இதையடுத்து அமைச்சர் கார் மீது செருப்பு வீசியது தொடர்பாக, பாஜக-வினர் 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில் , ”நான் வன்முறையை கையில் எடுக்கும் ஒரு கட்சியை நடத்தவில்லை.
எங்களது தொண்டர்களை வன்முறையை கையில் எடுங்கள் என்று நாங்கள் யாருக்கும் சொல்லிக் கொடுக்கப்போவதில்லை , பாஜக ஒரு ஆழமான தேசிய கலாச்சாரத்தை கொண்ட கட்சி”என்று கூறினார்.
இந்த சம்பவம் பற்றி திமுக நிர்வாகிகள் கூறுகையில், “ராணுவ வீரருக்கான இறுதி மரியாதை என்பது அது தொடர்பான படைப்பிரிவு (ரெஜிமெண்ட்) மூலமாக மட்டுமே செய்யப்படுகிறது.
ஆனால் அண்ணாமலை ராணுவ வீரரின் உடலுடன் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்பதற்காக ராணுவ (ப்ரோட்டகால் ) நெறிமுறைகளை மீறியுள்ளார்.
அவர் உண்மையாகவே மரியாதை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் ராணுவ வீரரின் வீட்டிலோ அல்லது அவரது கிராமத்திற்கோ சென்று மரியாதை செய்திருக்க வேண்டும்.
நாட்டை ஆளும் கட்சி என்பதால் ராணுவத்தின் கடமைகளில் தலையிடத் துணிந்துவிட்டார் அண்ணாமலை” என்று கூறினர்.

அமைச்சர் கார் மீது செருப்பு வீசியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் #செருப்பு பிஞ்சிரும்அண்ணாமல என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டிஜிட்டல் திண்ணை: அதிமுகவில் யாருக்கு ஆதரவு? இதுதான் அமித் ஷா திட்டம்!