ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்குங்கள் என்று பிரதமரிடம் கேள்வி கேட்க அமித்ஷாவிற்கு தைரியம் இருக்கிறதா என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக இளைஞரணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூலை 29) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “நான் இப்போது மிகவும் இளமையாக உணர்கிறேன். 70 வயதாகிறது, ஆனால் 20 வயது போல் இருக்கிறேன். இந்த புகழ் எல்லாம் இளைஞரணிக்கு தான். இளைஞரணியை உருவாக்கும் போது வந்த இளைஞர்கள் எப்படி நெஞ்சுறுதியோடு இருந்தார்களோ, அந்த நெஞ்சுறுதி, மலர்ச்சி, எழுச்சியை உங்களிடம் பார்க்கிறேன்.
நீங்கள் இளவட்டங்கள் அல்ல. கழகத்தின் இளம் ரத்தங்கள். மாவட்ட, மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர் பொறுப்புகளை கேட்டு விண்ணப்பித்த 4,158 பேரிடம் நேர்காணல் நடத்தி 609 இளைஞரணி பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பு உங்கள் உழைப்பிற்கு கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம்.
2019 ஜூலை 4 ஆம் தேதி பொறுப்பேற்றதிலிருந்து உதயநிதி பல மகத்தான சாதனைகளை செய்து வருகிறார். 30 லட்சம் இளைஞர்களை சேர்த்து இளைஞரணியின் பலத்தை கூட்டியிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சுற்றி சுழன்று பிரச்சாரம் செய்துள்ளார். அவர் காட்டிய ஒற்றை செங்கல்லை எதிரிகளாலேயே இன்னும் மறக்க முடியவில்லை” என்று உதயநிதி செய்த விஷயங்களை பற்றி பேசினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், “இந்த இயக்கம் எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை செயல்படுத்துவதற்கான ஆட்சி இது. இதை இந்தியா முழுவதும் எடுத்து செல்ல வேண்டும் என்று தான் இப்போது இந்தியா கூட்டணி உருவாகியிருக்கிறது.
இந்தியா என்ற பெயரை கேட்டாலே சிலர் மிரளுகிறார்கள், அலறுகிறார்கள். பாட்னா மற்றும் பெங்களூரு கூட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இதை பார்த்து பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மத்திய பிரதேசத்திற்கு சென்றாலும் அந்தமான் சென்றாலும் திமுகவை விமர்சிக்கிறார் பிரதமர். ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடக்கிறது என்று பேசுகிறார். கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிற ஆட்சி தான் திமுக ஆட்சி.
நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்தார். நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் இது போன்ற மத்திய அமைச்சர்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார்கள்.
அமித்ஷா தமிழ்நாட்டிற்காக மத்திய அரசின் திட்டத்தை தொடங்கி வைக்க வந்தாரா? இல்லையென்றால் ஏற்கனவே அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறந்து வைக்க வந்தாரா?. ஏதோ பாதயாத்திரையை தொடங்கி வைக்க வந்துள்ளார்.
அது பாதயாத்திரை இல்லை. பாவ யாத்திரை. குஜராத்தில் 2002 ஆம் ஆண்டும், இப்போது மணிப்பூரில் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கின்ற பாவயாத்திரை.
நேற்றும் திமுக குடும்ப கட்சி என்று பேசியிருக்கிறார். கேட்டுக் கேட்டு புளிச்சி போன ஒன்று. புதிதாக வேறு எதாவது சொல்லுங்கள் அமித்ஷா. பாஜகவில் எந்த தலைவரின் வாரிசும் அரசியல் பதவியில் இல்லையா? அப்படி இருந்தால் எல்லோரும் நாளை காலையே விலகிவிடுவார்களா?
பாஜகவில் மாநில வாரியாக பதவியில் இருக்கிறவர்கள் பட்டியலை நான் சொல்ல ஆரம்பித்தால் 1 மணி நேரம் ஆகும். 2014 ஆம் ஆண்டு இலங்கை பிரச்சனை பற்றி பேச ராஜபக்ஷேவை அழைத்து பதவியேற்பு விழா நடத்தினார்கள். அவர்களுக்கு பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?
திடீரென்று அமித்ஷாவிற்கு மீனவர்கள் மீது பாசம் பொங்கியிருக்கு. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கள் கூட உயிரிழக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்சனை, குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்சனை. இரண்டு மாநில மீனவர்களின் பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைப்போம் என்று ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு 2017-ல் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் பேசிய பிரதமர் மோடி, தன்னுடைய ஆட்சியில் 1,600 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அப்படியென்றால் 1,600 மீனவர்கள் அவருடைய ஆட்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
313 மீனவ படகுகள் விடுவிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார். அப்படியென்றால், அவருடைய ஆட்சி காலத்தில் 313 படகுகள் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறது என்று தானே அர்த்தம். அதை அவரே ஒப்புக் கொள்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்தும் பேசியுள்ளார் அமித்ஷா. நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன். குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்கள் எல்லாம் பிரதமரின் அமைச்சரவையில் தானே இருக்கிறார்கள். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருப்பது பற்றி கேள்வி கேட்கும் உங்களுக்கு பிரதமர் மோடியிடம் இந்த கேள்வியை கேட்கின்ற தைரியம் உண்டா?
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து நான் விரிவாக பேச முடியாது. பாஜக தனது அரசியல் எதிரிகளை சலவை செய்கிற வாஷிங் மிஷினாக தான் அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறது என்பது இந்தியா முழுவதும் தெரிந்த ரகசியம் இது.
புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை மிரட்டுவது, அவர்களை பாஜகவுக்கு மாற்றுவது என்பது பாஜகவின் அசிங்கமான அரசியல் பாணியாக இது மாறிக் கொண்டிருக்கிறது.
அதனால் உச்சநீதிமன்றமே அமலாக்கத்துறை இயக்குநர் ஜூலை 30 ஆம் தேதிக்கு மேல் பதவியில் நீடிக்க கூடாது என்று உத்தரவிட்ட பிறகும் அதே உச்சநீதிமன்றத்தில் அவருடைய பதவியை மேலும் 2 மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று பணிநீட்டிப்பு வாங்கியிருக்கிறது என்றால் என்ன காரணம்.
ஏன் நாட்டில் அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு தகுதியான ஐஆர்எஸ் அதிகாரிகளே இல்லையா? இந்த கேள்வியை உச்சநீதிமன்றமும் எழுப்பியுள்ளது. மத்திய பாஜகவின் ஆட்சியெல்லாம் இன்னும் சில காலங்கள் தான். இந்தியாவிற்கு விடியல் பிறக்க போகிறது.
இந்தியாவை காப்பாற்ற ‘இந்தியா’விற்கு வாக்களியுங்கள் என்பது தான் நமது தேர்தல் முழக்கமாக அமையப் போகிறது” என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
மோனிஷா
பத்ரி சேஷாத்ரி கைது: அண்ணாமலை கண்டனம்!
பட்டாசு குடோனில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!