dhayanidhi maran speech is not wrong

இந்தி பேசுபவர்கள்… வைரலாகும் வீடியோ: தயாநிதிமாறன் ரியாக்‌ஷன் என்ன?

இந்தி பேசும் மக்கள் குறித்து தயாநிதி மாறன் பேசியதில் தவறில்லை என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதிஷ்குமாரின் இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த நிதிஷ்குமார், ‘‘இந்தி நம் தேசிய மொழி. தேசிய மொழியை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவே, நீங்கள் இந்தி கற்றுக் கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்திருந்தார்.

இது இந்தியா கூட்டணி கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தயாநிதி மாறன் இந்தி பேசும் மக்கள் குறித்து விமர்சித்து பேசிய வீடியோவை பாஜக ஐடி விங் பொறுப்பாளர் அமித் மால்வியா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, ராகுல் காந்தி நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் போன்ற இந்தியா கூட்டணி தலைவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

அந்த வீடியோவில் தயாநிதி மாறன், ”ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஐ.டி. நிறுவனங்களில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால் சிலர் இந்தி, இந்தி என கூறுகின்றனர். உ.பி மற்றும் பிகாரில் இந்தியை மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டிற்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும்தான் வருகின்றனர். இந்தியை மட்டும் கற்றால் இதுதான் நிலைமை” என்று பேசியிருப்பார்.

இதற்கு பிகார் மாநிலத்தின் துணை முதல் தேஜஸ்வி யாதவ் உட்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

“இதுபோன்ற பேச்சுகள் கண்டிக்கத்தக்கது. மற்ற மாநில தலைவர்கள், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், இதுபோன்ற கருத்துகளை கூறுவதை தவிர்க்க வேண்டும். நாங்கள் மற்ற மாநில மக்களை மதிக்கிறோம், அதையே மற்றவர்களிடமும் எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற கருத்துகளை யாரும் கூறக்கூடாது” என்று கண்டனம் தெரிவித்திருந்தார் தேஜஸ்வி யாதவ்.

“பீகாரில் இருந்து மக்கள் எங்கு சென்றாலும் கடுமையாக உழைக்கிறார்கள், சுயமரியாதையுடன் பணியாற்றுவது குற்றமல்ல. அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் திமுகவின் மொழியே இப்படிதான் இருக்கும்” என்று மத்திய அமைச்சரும், பிகார் மாநில பாஜக தலைவருமான கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்த வீடியோவுக்கு திமுக தரப்பில் இருந்து ஒரே பதில் இது பழையது என்பதுதான். சமீபத்தில், நாடாளுமன்ற அரங்கில், வட மாநிலங்கள் கோமுத்ரா ஸ்டேட்ஸ் என்று, திமுக எம்.பி பேசினார். இதன்மூலம் திமுகவின் எண்ண மாற்றம் நடந்துள்ளது. திமுக ஐடிவிங்கில் உள்ள சிலர் இதுபோன்ற மொழியை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். இவர்கள் ஒரு அமைச்சரால் ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை பற்றியும், அவர்களின் கல்வி அறிவை பற்றியும் விமர்சிக்கும் வகையில், தொழில்துறை அமைச்சரும், திமுக ஐடி விங் செயலாளருமான டிஆர்பி ராஜா ஏற்கனவே பதிவிட்ட ஸ்கீர்ன்சாட்களை பகிர்ந்துள்ளார்,

இந்தசூழலில் தயாநிதி மாறன் இந்தி குறித்து பேசியதில் தவறில்லை என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் துரை வைகோ, “திமுக எம்.பி தயாநிதி மாறன் இந்தி பேசும் மக்கள் குறித்துப் பேசியதில் எந்த தவறும் இல்லை. ஆங்கிலம் தெரியாததால் அவர்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டட வேலை, சாலை பணி உள்ளிட்ட சாதாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கடைப்பிடித்ததால், அதிகமாக ஆங்கிலத்தை கற்றனர். அதனால் உலக அளவில் பெரிய பதவிகளில் தமிழர்களால் வர முடிந்துள்ளது.

தயாநிதி மாறனின் பேச்சு, வெட்டி ஒட்டி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பாஜகவினர் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக பாஜகவும் தரம் இல்லாத அரசியலை செய்து இதனை பரப்பி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தனது பேச்சுக்கு தயாநிதி மாறன் இதுவரை நேரடியாக பதில் சொல்லவில்லை. எனினும், ஸ்ரீராம் என்பவரின் ட்விட்டை  ரீட்வீட் செய்து ரியாக்ட் செய்துள்ளார். அந்த பதிவில் ஸ்ரீராம்,  முதலாவதாக, கூட்டணியை உடைக்கும் நோக்கத்துடன் பகிரப்பட்ட 4 வருட பழைய வீடியோ இது. இரண்டாவது, தமிழகத்தில் கடினமான பணிகள் உ.பி. மற்றும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது என்று தயாநிதி மாறனே ஒப்புக்கொள்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

தமிழகத்தில் மூலை முடுக்கெங்கும் வேலைவாய்ப்பு : டி.ஆர்.பி ராஜா பேட்டி!

ஹர்திக் பாண்டியா விவகாரத்தில்… ரூபாய் 100 கோடி பணம் கைமாறியதா?… வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts