மீண்டும் மீண்டும் சர்ச்சை… சிக்கும் திமுக மாசெ!

Published On:

| By vanangamudi

தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நடத்திய கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், சொந்த கட்சி நிர்வாகிகளே அவருக்கு எதிராக வெடித்திருக்கிறார்கள். Dharmapuri district secretary Controversy

தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பதவியில் இருந்து நீக்கி, தர்ம செல்வனை பொறுப்பாளராக நியமித்தது திமுக தலைமை.

அந்த சமயத்தில் தர்மசெல்வன் ஏற்கனவே பேசியிருந்த ஆடியோ ஒன்று வெளியானது. அதில், “பாமக நிர்வாகியை உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்த சொன்ன தர்மசெல்வன், வரும் சட்டமன்ற தேர்தலில் இன்பசேகரனை காலி செய்தால் தான் நமக்கு எதிர்காலம்” என்று பேசியிருந்தார்.

இந்த உரையாடலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த தருமபுரி முன்னாள் மாவட்ட செயலாளர் இன்பசேகரன், ”திமுகவை ஒழிக்க நினைத்த தர்மசெல்வன் மாவட்ட பொறுப்பாளர் பதவிக்கு தகுதியுடைய நபர்தானா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

இந்த சர்ச்சை ஓய்வதற்குள் அரசு அதிகாரிகள் குறித்து தர்மசெல்வன் பேசிய ஆடியோ வெளியானது.

அந்த ஆடியோவில், ”கலெக்டர், எஸ்.பி, அதற்கு கீழ் இருக்கும் அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள்” என்று மிரட்டும் தொனியில் பேசியிருந்தார்.

இதனை கண்டித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியில் திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் குறுநில மன்னர்களை போல செயல்படுகிறார்கள்” என்று காட்டமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலும், தர்மசெல்வன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி மாவட்ட அரசு ஊழியர்களும் போராட்டம் நடத்தினர். இதனால் கோபமான திமுக தலைவர் ஸ்டாலின், தர்மசெல்வனை அழைத்து எச்சரித்தார். அவர் மன்னிப்பு கேட்டதால் தப்பித்தார்.

இந்தநிலையில் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் தர்மசெல்வன். 

தருமபுரி பெரியார் சிலை அருகே உள்ள தமிழக அரசின் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான டிராவல்ஸ் பங்களாவில் தருமபுரி கிழக்கு மாவட்ட ஒன்றிய, பேரூராட்சி, நகர கழக நிர்வாகிகள் கூட்டம் நேற்று (மார்ச் 6) மதியம் 2 மணியளவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தர்மசெல்வன் பேசும்போது, “நான் கட்சி கூட்டத்தில் பேசுவதை சிலர் ரெக்கார்ட் செய்து எனக்கு எதிராக செயல்படுகிறீர்கள். அவர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கிவிடுவேன்” என்று எச்சரித்தார்.

இதனால் சூடான பெரும்பாலான நிர்வாகிகள் எழுந்து, ”எங்களை நீங்க நீக்குறீங்களா, இல்லை உங்களை நாங்க நீக்குறோமான்னு பார்ப்போம்” என்று தர்மசெல்வனுக்கு எதிராக கோஷமிட்டபடி கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத தர்மசெல்வன், வெளியேறிய நிர்வாகிகளை அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், அவர் பேச்சை கேட்காமல் அங்கிருந்து வெளியேறினர்.

சொந்த மாவட்ட நிர்வாகிகளே மாவட்ட செயலாளருக்கு எதிராக வெடித்திருப்பது மாவட்ட திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுஒருபுறமிருக்க, தமிழக அரசின் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான டிராவல்ஸ் பங்களாவில் தர்மசெல்வன் கட்சி கூட்டத்தை நடத்தியுள்ளார். ஏற்கனவே, அரசு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் தர்மசெல்வன் பேசிய ஆடியோவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசுக்கு சொந்தமான டிராவல்ஸ் பங்களாவில் கட்சி கூட்டத்தை நடத்தியுள்ளது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share