பாரத மாதா கோயிலின் பூட்டை உடைத்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘அமுத திருவிழா’ கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கடந்த 11-ம் தேதி, பாஜகவினர் பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடம் வரை பாதயாத்திரை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள பாரதமாதா நினைவு ஆலயத்தின் முன்புறமுள்ள கதவு பூட்டு போடப்பட்டு இருந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியினர் பூட்டை திறக்க சொல்லி அங்கு பணியாற்றும் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து பணியாளர் பூட்டை திறக்க மறுத்ததால் பாரதமாதா நினைவாலயத்தின் முன்புறமுள்ள கதவின் பூட்டை உடைத்து பாரதமாதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பாரதமாதா கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த முன்னாள் எம்.பி.யும் தற்போதைய பாஜக மாநில துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உள்ளிட்ட 50 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதன் அடிப்படையில் பாஜக ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சிவலிங்கம், ஆறுமுகம், ஒன்றிய தலைவர் சிவசக்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் மௌனகுரு, முன்னாள் நகர தலைவர் மணி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் பூட்டை உடைத்த வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை இன்று ( ஆகஸ்ட் 14) ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தருமபுரி காவல்துறையினர் மற்றும் ராசிபுரம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
நீ போ… நீ வா… ஆமீர்கானை விட்டுவிட்டு, ஹிருத்திக்கை தாக்கும் நெட்டிசன்கள்!