மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த வழக்கில், மயிலாடுதுறை பாஜக தலைவர் அகோரத்தை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளது போலீஸ்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக பாஜக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஆடுதுறை வினோத், மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது ஐபிசி 323,307,389,506 (2), 120 B ஆகிய 5 பிரிவுகளின் கீழ் மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஆடுதுறை வினோத், திருவெண்காடு விக்னேஷ், குடியரசு, உடந்தையாக செயல்பட்ட ஸ்ரீநிவாஸ் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். தலைமறைவான 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
காவல்துறையினர் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொண்டதற்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் நேற்று நன்றி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தலைமறைவாக உள்ள மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட ஐந்து பேரை பிடிக்க திருச்சி ஐஜி கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அகோரம் தலைமறைவாகியுள்ள இடத்தை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், அகோரத்தின் உறவினர்கள், நண்பர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண கொண்டாட்டம் : ஜாம்நகரில் குவியும் உலக பிரபலங்கள்!
இந்த மாவட்டத்தில் தான் ‘வெயில்’ ரொம்ப அதிகமாம்!