நாட்டின் புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஆகஸ்டு 6) நடைபெறுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் இந்தத் தேர்தலில் இன்று காலை பத்து மணி முதல் வாக்குப் பதிவு நடக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் மற்றும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா இடையே போட்டி நிலவுகிறது.
குடியரசு தலைவர் தேர்தலில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். இன்று நடக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள்.
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்கருக்கு ஆதரவாக அதிக அளவில் வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்க் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகளும் அதிகரித்துள்ளன. இரு அவைகளிலும் 36 எம்.பி.க்கள் வைத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் இன்றைய வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), டிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் மற்றும் ஜேஎம்எம் ஆகியவை ஆல்வாவுக்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ளன.
பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் ஜகதீப் தன்கருக்கு ஆதரவை வழங்கியுள்ளன. ஆந்திர ஆளுங்கட்சியான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஒடிசாவின் ஆளுங்கட்சியான பிஜேடி ஆகிய கட்சிகளும் தன்கரை ஆதரிக்கின்றன.
வாக்குகள் இன்றே அறிவிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். புதிய துணைக் குடியரசுத் தலைவர் ஆகஸ்டு 11 ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தன்கர் புதிய குடியரசுத் துணைத் தலைவர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
முன்னதாக குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பெரு வெற்றிபெற்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
–வேந்தன்
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நேரடியாக நிதி ஆயோக் கூட்டம் நாளை!