கனகராஜ் சகோதரர் தனபால் கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் கனகராஜின் அண்ணன் தனபால் சமீப நாட்களாக பேட்டி அளித்து வருகிறார்.
“கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி சொல்லித்தான் எனது சகோதரர் கனகராஜ் சில விஷயங்களை செய்தார்” என்று கூறி வருகிறார் தனபால்.
இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், “தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருகிறார்.
கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளார்” என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன் வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
பிரியா