கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜ் அண்ணன் தனபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) தடை விதித்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை,கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று இவ்வழக்கில் தொடர்புடைய, சந்தேகத்திற்கிடமாக மரணமடைந்த கனகராஜின் அண்ணன் தனபால் பேட்டி அளித்து வந்தார்.
இந்நிலையில், “தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருகிறார்.
கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளார்.
அவர் கொடநாடு வழக்குடன் தன்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும். ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் தனபால் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் ” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 26) விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், 2017ம் ஆண்டு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் பலியான போது, யாருக்கும் தொடர்பில்லை என அளித்த பேட்டிக்கு முற்றிலும் முரணாக, தன்னை தொடர்புபடுத்தி பேசி வருவதாக வாதிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, “இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனபால் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்பதற்கு முகாந்திரம் இருக்கிறது.
தொடர்ந்து இதுபோல பேசுவதற்கு அனுமதித்தால் ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச இரண்டு வாரங்களுக்கு தனபாலுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதுதொடர்பாக தனபால் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி மஞ்சுளா, வழக்கை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதுபோன்று அமைச்சர் உதயநிதி தன்னை பற்றி பேச தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி மஞ்சுளா, “கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பற்றி இரண்டு வாரங்களுக்கு பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக் காலத் தடை விதிக்கிறேன். இரண்டு வாரங்களுக்குள் அமைச்சர் உதயநிதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” உத்தரவு பிறப்பித்தார்.
இன்றும் எடப்பாடி பற்றி பேசிய தனபால்
முன்னதாக இன்று காலை இரண்டாவது முறையாக கோவையில் உள்ள சிபிஐசிடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான தனபால், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “எடப்பாடி பழனிசாமி, இளங்கோவன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் எனது தம்பியை மூளை சலவை செய்தனர். சென்னையில் உள்ள எடப்பாடி வீட்டில் தான் சதித் திட்டம் தீட்டப்பட்டது” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா