கோவை கார் வெடிப்பு வழக்கில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கார் வெடிப்பு வழக்குத் தொடர்பாக 2 ஆவது முறையாக டிஜிபி சைலேந்திரபாபு கோவை சென்றுள்ளார். அங்கு கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் அலுவலகத்தில் என்.ஐ.ஏ மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகளுடன் இன்று(அக்டோபர் 27) அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, “23 ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் உள்பட அனைத்து அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டு, நிகழ்விடத்திற்கு உடனே சென்று அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, அந்த கார் யாருடையது என்று விசாரித்து, அதன்பிறகு 6 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
தகுந்த ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் போலீஸ் காவலிலும் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சிறப்பாக, குறுகிய காலத்தில் இதுபோன்ற வழக்கில் துப்புதுலக்கிய கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மற்ற அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கிறோம்.
முதலமைச்சர் பரிந்துரையின் பேரில் உள்துறை செயலகம் வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க அனுமதி வழங்கியுள்ளது. கோவை வந்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.
அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக காவல்துறை செய்து கொடுக்கும். திரட்டப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் என்.ஐ.ஏ வசம் ஒப்படைப்போம்” என்று கூறினார்.
கலை.ரா
கணக்கு வழக்கு: கலவர பூமியாகும் தெலுங்கு திரையுலகம்!
இரண்டு சத்தங்கள்: கோவை ஜமாத்தினரிடம் அதிகாரிகள் தெரிவித்த முக்கிய தகவல்!