தேவநாதன் கைது: மயிலாப்பூர் நிதி நிறுவனம், டிவி சேனலுக்கு சீல்!
ரூ.525 கோடி நிதி நிறுவன மோசடி புகார் காரணமாக தேவநாதன் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) மயிலாப்பூர் நிதி நிறுவனம் மற்றும் தொலைக்காட்சி நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரும், தீவிர பாஜக ஆதரவாளருமான தேவநாதன் யாதவ், ரூ.525 கோடி நிதி மோசடி புகார் காரணமாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மயிலாப்பூர் சுமார் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிறுவனத்தில் இயக்குனராக அவர் இருந்து வரும் நிலையில், தாங்கள் முதலீடு செய்த பணத்தை உரிய முறையில் திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாக சுமார் 140 பேர் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் தேவநாதன் யாதவ், அவருக்கு உடந்தையாக இருந்த குணசீலன் மற்றும மகிமைநாதன் ஆகியோர் கடந்த 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பல கோடி ரூபாய் மோசடி வழக்கு தொடர்பாக தேவநாதனுக்கு தொடர்புடைய 11 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தி நகரில் உள்ள தேவநாதனின் வீடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 4 லட்சம் ரொக்கம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் மயிலாப்பூர் நிதி நிறுவனம் மற்றும் தேவநாதன் யாதவ்வின் வின் தொலைக்காட்சி அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நடிகை ஜோதிகா குறித்து பயில்வான் ரங்கநாதன் சொன்ன அதிர்ச்சி தகவல்… உண்மையா?
ஆவணி மாத நட்சத்திர பலன் – திருவோணம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)