சஸ்பெண்ட் ஆனாலும்… உதயநிதியை விடாத ஆதவ் அர்ஜுனா
விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீதான விமர்சனத்தில் உறுதியாக இருப்பதாக ஆதவ் அர்ஜுனா இன்று (டிசம்பர் 9) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்!
கடந்த 6ஆம் தேதி சென்னையில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நூலை உருவாக்கியவர் என்ற நிலையில் விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார்.
அப்போது மேடையில் பேசிய அவர், ”2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சராக உருவாக்கப்பட கூடாது. தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை” என்று பேசினார்.
விஜய்க்கு பாராட்டு!
மேலும் தனது கட்சியின் முதல் மாநாட்டிலயே ஆளும் திமுக அரசை கடுமையாக சாடிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை பாராட்டி, திமுகவை விமர்சித்தார்.
அவர், “தமிழகத்தில் இனி கருத்தியல் தலைவர் தான் முதலமைச்சராக வேண்டும். தமிழகத்தில் புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து இருக்கிறார்.
விஜய்க்கு அரசியல், கொள்கைகள் தெரியுமா? என்று கேள்வி கேட்கிறார்கள். ஆனால் கொள்கைகளை பேசிய பல கட்சிகள் மேடையில் ஏன் அம்பேத்கரை ஏற்றவில்லை?
சினிமாத்துறையில் தன்னை சுற்றியுள்ள 2000 கோடி ரூபாய் பிசினஸை விடுவதற்கு ஒரு மனசு வேண்டும். அது விஜய்யிடம் இருக்கிறது. ஆனால் இங்கு ஒரு சினிமா தொழில் நிறுவனத்தை நடத்தி அரசியல் மூலமாக லாபம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என்றும் ஆதவ் ஆர்ஜூனா பேசினார்.
திமுக எதிர்க்கும் கட்சித் தலைவர் முன்னிலையில், அதே திமுக கூட்டணியில் உள்ள விசிக கட்சியில் உயர் பொறுப்பில் இருந்தப்படி ஆதவ்வின் இத்தகைய பேச்சு திமுகவினரை கொதிப்படைய செய்தது.
எங்கள் தலைவர் துணைமுதல்வர் ஆகக் கூடாதா?
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘சினிமாவில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன் அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும்போது, நாற்பது வருடங்களாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் (திருமாவளவன்) துணைமுதல்வர் ஆகக் கூடாதா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
உதயநிதியை தாக்கி ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்தது அப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதத்தை உண்டாக்கியது.
நடவடிக்கை இல்லை!
அதற்கு எதிர்வினையாற்றிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா, ”விசிக கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஆதவ் அர்ஜுனா, கொள்கை புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அறனுக்கு, அரசியல் அறத்துக்கு ஏற்புடையது அல்ல. அவர் திருமாவளவனின் ஒப்புதலோடு இதனைப் பேசியிருக்க மாட்டார். திருமாவளவன் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார். இது போன்ற குழப்பத்தை விளைவிக்கின்ற, பாஜகவிற்கு துணை போகிறார்கள் என்று எண்ணக் கூடியவர்கள் மீது திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பேசினார் ஆ.ராசா.
அப்போது அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறவிருந்த மது ஒழிப்பு மாநாட்டுக்குப் பிறகு ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று தெரிவித்தார் திருமா.
ஆனால் மது ஒழிப்பு மாநாட்டுக்காக நடந்த ஆயத்தக் கூட்டங்களிலும் சரி, மாநாட்டிலும் சரி ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை பாராட்டியே பேசினார் திருமா.
விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து!
தொடர்ந்து அக்டோபர் 27ஆம் தேதி நடந்த தவெக முதல் மாநாட்டில், “கூட்டணியில் பங்கு பெறும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும்” என்று விஜய் கூறினார்.
இதற்கு விசிக தலைவர் திருமாளவன் முதல் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் விஜய்யின் கருத்தை முதல் ஆளாக வரவேற்று கருத்து தெரிவித்தவர் ஆதவ் அர்ஜூனா தான்.
அவர், “‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள்” என தெரிவித்திருந்தார்.
இடைத்தேர்தல் பாணியில் ஏன் செயல்படவில்லை?
தொடர்ந்து ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தரப்பு எப்படி இருபது பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்பி என்று பொறுப்பாளர்களை நியமித்து பம்பரம் போல் களப்பணியை மேற்கொண்டு தேர்தல் வெற்றிக்காக அவர்கள் காட்டும் ஆர்வத்தை இப்போது பெரும் துயரில் மக்கள் சிக்கியுள்ள வேளையில், இடைத்தேர்தல் பாணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு இயந்திரம் ஏன் செயல்படவில்லை?” என திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.
இப்படி தொடர்ந்து திமுக அரசையும், உதயநிதியையும் விமர்சித்து வந்த ஆதவ் ஆர்ஜூனா, அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில், அரசியல் பேச வேண்டாம் என திருமாவளவன் கூறியிருந்த நிலையிலும் தனது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இப்படி தொடர்ச்சியாக கூட்டணியில் இருந்துகொண்டு திமுகவை விமர்சித்து வரும் அவர் மீது என்ன நடவடிக்கை? என்ற கேள்விக்கு பதிலாக கட்சியில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்து இன்று உத்தரவை பிறப்பித்தார் திருமா.
கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன்!
எனினும் திமுக மற்றும் உதயநிதி மீதான தனது விமர்சனத்தை விடுவதாக இல்லை ஆதவ் அர்ஜூனா.
இன்று மாலை அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன்” என்றும், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசியதை மீண்டும் கூறியிருக்கிறார் ஆதவ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆயிரம் கைகள் மறைத்தாலும்… சஸ்பெண்ட் குறித்து ஆதவ் அர்ஜூனா ரியாக்சன்!
ஆதவ் நீக்கம்… யார் கொடுத்த அழுத்தம்? – ஸ்டாலினை சந்தித்த பின் திருமா பேட்டி!