டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு தள்ளிப் போகும் துணை முதல்வர் பதவி… துரைமுருகன் காரணமா?

Published On:

| By Aara

வைஃபை  ஆன் செய்ததும் உதயநிதி துணை முதல்வரா என்பது பற்றிய அதிமுகவினரின் பேட்டிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“விரைவில் அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சர் ஆவார் என்று திமுகவினர் குறிப்பாக இளைஞரணியினர் நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் ஜூலை 20 ஆம் தேதி திமுக இளைஞரணியின் 45 ஆவது ஆண்டு தின விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, ‘ஊடகங்களில் வரும் வதந்தியை நம்பிக் கொண்டு நீங்கள் இங்கே தீர்மானம் போட்டிருக்கிறீர்கள்.  இப்பவே துண்டு போடலாம் என்று சிலர் நினைக்கிறீர்கள்’ என்று சிரித்துக் கொண்டே மறுத்தார்.

அதேநேரம் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (ஜூலை 21) வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘திமுகவில் மூத்தவரான நீங்கள் துணை முதல்வர் ஆக வாய்ப்பு உள்ளதா?’ என்று கேட்க, ‘கொடுத்தா யார்தான் வேணாம்னு சொல்லுவாங்க?’ என்று சிரித்தபடியே கேட்டார். மேலும், அதெல்லாம் முதல்வர்தான் முடிவு செய்வார் என்றும் கூறினார் துரைமுருகன்.

இதற்கிடையே நேற்றும் இன்றும் துரைமுருகனை குறிவைத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோரும் சில கருத்துகளை கூறியுள்ளனர்.

திமுகவுக்கு வன்னியர்கள் மீது ஏனிந்த வன்மம் என்று தலைப்பிட்டு டாக்டர் ராமதாஸ் ஜூலை 20 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,

‘திமுகவில் உள்ள 131 சட்டமன்ற உறுப்பினர்களில்  பெரும்பான்மையினர் வன்னியர்கள். அவர்களின் எண்ணிக்கை 23, அதாவது 17.55%. அதன்படி மொத்தமுள்ள 34 அமைச்சர்களில் 6 அமைச்சர் பதவிகள் வன்னியருக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது வழங்கப்பட்டிருப்பதோ வெறும் 3 அமைச்சர் பதவிகள் தான். இது தான் திமுகவின் வன்னியர் புறக்கணிப்பு.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஆட்சியில் இப்படி என்றால் திமுக கட்சியிலும்  வன்னியர்களுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை.  அறிஞர் அண்ணாவின் காலத்திலிருந்து  தளகர்த்தர்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், மதுராந்தகம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் அவர்களின் கடைசி காலத்தில் திமுக தலைமையால் எப்படியெல்லாம் உதாசீனப் படுத்தப்பட்டார்கள்; எப்படியெல்லாம் அவமானப் படுத்தப்பட்டார்கள்; அவர்களுக்குப் போட்டியாக யார், யாரையெல்லாம்  திமுக தலைமை வளர்த்து விட்டது ;அதனால் அவர்கள் எந்த அளவுக்கு மனம் நொந்து மறைந்தார்கள் என்பதை வன்னியர்கள் நன்கு அறிவர்.

1949-ஆம்  ஆண்டில் திமுக தொடங்கப்பட்டது. அதன்பின் 70 ஆண்டுகளில் திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் ஒரே ஒரு வன்னியர் கூட நியமிக்கப்படவில்லை.  2018-ஆம் ஆண்டில்  கலைஞர் மறைவுக்குப் பிறகு தான்  வேறு வழியின்றி திமுகவின் பொருளாளராகவும், பின்னர் பொதுச் செயலாளராகவும்  துரைமுருகன் நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. பொதுச் செயலாளராக இருந்தும் கூட, அவரது பெயரில் வரும் அறிவிப்புகள்  அவருக்கே  தெரியாத நிலையில் தான் அவரது அதிகாரம் உள்ளது’என்று குறிப்பிட்டிருந்தார் ராமதாஸ்.

சொல்லிவைத்தாற்போல் இன்று (ஜூலை 21) சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமி, ‘திமுகவில் பல மூத்த முன்னோடிகள் இருக்க உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் அது ஏற்புடையதாக இருக்காது’ என்று கூறினார். அவரை வழிமொழிந்து ஜெயக்குமார் ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘திமுகவை தோற்றுவித்த அண்ணா காலத்தில் இருந்து அக்கட்சியில் இருக்கும் மூத்தவர் துரைமுருகன். அவரை துணை முதல்வர் பதவியில் நியமிக்காமல்  ஸ்டாலினுடைய மகன் என்ற ஒரே காரணத்துக்காக உதயநிதி துணை முதல்வர் என்ற பதவிக்கு முன்னிறுத்தப்படுகிறார்’ என்று கூறியுள்ளார்.

நேற்று ராமதாஸ், இன்று எடப்பாடி- ஜெயக்குமார் என்று எதிர்க்கட்சிகள் கூறியிருப்பதன் அடிப்படையில் திமுக மேல் மட்ட வட்டாரங்களில் சில ஆலோசனைகள் நடைபெற்றிருக்கின்றன.

‘கலைஞர் காலத்தில் இருந்தே  நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும்  டாக்டர் ராமதாஸோடு கலைஞர் சார்பாக துரைமுருகன் தான் பேசுவார். அந்த வகையில் அவருக்கும் ராமதாஸுக்கும் நல்ல நட்பு உண்டு. பதவிக்கேற்ற அதிகாரங்கள் எதுவும் இல்லை என்று துரைமுருன் தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் பல முறை புழுக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அது ராமதாஸின் காதுகளுக்கும் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது என திமுக மேலிட வட்டாரம் கருதுகிறார்கள்.

மேலும் பாமகவை அடுத்து அதிமுகவிலும் துரைமுருகனை மூத்த முன்னோடி என்று அழைத்து அவருக்காக பரிவு காட்டும் தொனியில் பேசுகிறார்கள்.

உதயநிதி ஒரு வேளை துணை முதல்வர் ஆக்கப்பட்டால் கட்சிக்கு உள்ளே சீனியர்கள், வெளியே எதிர்க்கட்சிகள் என இரு தரப்பு எதிர்ப்பு வரும் என்ற ஆலோசனையில்தான் அதை முதல்வர் தள்ளிப் போடுகிறார் என்ற விவாதங்களும் அறிவாலயத்திலேயே நடந்து வருகின்றன.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

துரைமுருகன் வட்டாரத்தில் விசாரித்தபோது, ’தனக்கு உரிய மரியாதை இல்லை என்பதில் துரைமுருகனுக்கு பெரிய வருத்தம் உண்டு.  அதை அவ்வப்போது அவர் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் வெளிப்படுத்தவும் செய்வார். இதனாலேயே முதல்வர் ஸ்டாலினுக்கும் அவருக்கும் இடையே அவ்வப்போது  மனஸ்தாபம் ஏற்படுவதும் உண்டு.

அதேநேரம் ஏற்கனவே பொதுச் செயலாளராக பதவியேற்றபோதே உங்கள் குடும்பத்துக்கு எங்கள் குடும்பம் தாசானு தாசர்களாக இருப்போம் என்று ஸ்டாலினை பார்த்து கூறினார் துரைமுருகன். அதேபோல ஆளுநரை சந்தித்தபோது கூட, ‘ஸ்டாலின் அப்பாவோடு நான் உடன் இருந்தேன்.  இப்போது ஸ்டாலினுடன் இருக்கிறேன். அவரது மகன் உதயநிதியோடும்  உறுதுணையாக இருப்பேன்’ என்று ஆளுநரிடமே சொன்னவர்தான் துரைமுருகன்.

ஒரே காரணம்… தனது மகன் கதிர் ஆனந்துக்கு கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி வேண்டும் என்பதால் துரைமுருகன் வெளிப்படையான எதிர்ப்பு எதையும் தெரிவிக்க மாட்டார்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆரம்பமே அதிரடி… முதல் ரிவ்யூ மீட்டிங்கில் கடுகடுத்த டேவிட்சன் தேவாசீர்வாதம்

சென்னானூர் அகழாய்வில் கற்கால கருவி: ஸ்டாலின் பெருமிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel