’உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… வாரிசு அரசியலின் அடையாளம்’ : தமிழிசை

அரசியல்

”உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி என்பது ஜனநாயக அரசியல், வாரிசு அரசியலாக மாற்றப்பட்டுள்ளதன் அடையாளம். இது திமுக மூத்த அமைச்சர்களை இழிவுபடுத்துவது போன்றது” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி வகித்து வருகிறார். அவர் இன்று மாலை 3.30 மணிக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அவர் திட்டமிடல் மற்றும் மேம்பாடு துறை அமைச்சராகவும் பதவியேற்க உள்ளார். 

அவருடன் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ள செந்தில் பாலாஜியும் தமிழக அமைச்சரவையில் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.

மேலும் டாக்டர் கோவி செழியன், ராஜேந்திரன், எஸ்எம் நாசர் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

இந்த நிலையில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி, செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூத்த தலைவர்களுக்கு என்ன நடந்துள்ளது?

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “உதயநிதி பிறப்பதற்கு முன்பிருந்தே எத்தனையோ அமைச்சர்கள், தலைவர்கள், திமுகவின் வளர்ச்சியில் ஈடுபட்டு, தற்போது கட்சியின் 75வது ஆண்டைக் கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால் அத்தகைய மூத்த தலைவர்களுக்கு தற்போது என்ன நடந்துள்ளது? அமைச்சர் பொன்முடி பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மூன்று அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன? அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதா? என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி!

மேலும், ”திமுக பேசிவரும் பெண்கள் அதிகாரம் மற்றும் சமூக நீதிக்கு என்ன ஆனது? துணை முதல்வர் பதவியை உதயநிதிக்கு பதிலாக பெண் ஒருவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க என்ன அவசரம்? ஊழலைப் பற்றி திமுக கவலைப்படவில்லை. இவை தமிழக அரசியலில் மிகத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

ஜனநாயக அரசியலை வாரிசு அரசியலாக திமுக மாற்றியுள்ளது. இது மூத்த அமைச்சர்களை இழிவுபடுத்துவது போன்றது. இந்த முடிவு தொண்டர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்கும்” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இடிந்து விழுந்த காரைக்கால் மருத்துவமனை: பயந்தோடிய நோயாளிகள்!

முடி திருத்துபவர் செய்த மசாஜ்: இளைஞருக்கு ஏற்பட்ட பக்கவாதம்!

+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *