வைஃபை ஆன் செய்ததும் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சின் லைவ் வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதை பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற விழாவில்… அமைச்சர் எ.வ.வேலு எழுதிய, ’கலைஞர் எனும் தாய்’ நூலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசிய பேச்சு திமுகவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
‘ஸ்டாலின் தொடர்ந்து தேர்தல் வெற்றிகளை குவித்து வருகிறார். அது மட்டுமல்ல எத்தனையோ கட்சிகள் நீண்ட கால தலைவர்களின் மரணத்துக்கு பிறகு அடுத்த சந்ததியினரால் அந்த கட்சிகளைக் காப்பாற்ற முடியாமல் திண்டாடி வரும் நிலையில், திமுகவை மிக திறமையாக வழிநடத்தி வருகிறார் ஸ்டாலின்’ என்று பாராட்டி இருக்கிறார் ரஜினிகாந்த்.
அதுமட்டுமல்ல… ஸ்கூல் டீச்சர்ஸுக்கு புதிய ஸ்டூடன்ட்ஸ் பிரச்சினையல்ல. பழைய ஸ்டூடன்ஸ்தான் பிரச்சினை. அதுவும் இங்க இருக்கிறது சாதாரண பழைய ஸ்டூடன்ட்ஸ் இல்ல. ஃபெயிலானவங்க கிடையாது. ரேங்க் மேல ரேங்க் வாங்கிட்டு உட்காந்திருக்கிறவங்க. அசாத்தியமானவங்க.
துரைமுருகன்னு ஒருத்தரு இருக்காரு. கலைஞரின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டக்கூடியவர். அவரைப் போன்ற சீனியர்களை எல்லாம் சர்வ சாதாரணமாக சமாளித்து கட்சி நடத்தி ஆட்சியையும் நடத்தி வருகிறார் ஸ்டாலின்’ என்று அங்கே அரங்கத்தில் இருந்த திமுக முக்கியஸ்தர்களின் பலத்த கரவொலிக்கிடையே பேசினார் ரஜினிகாந்த். அவரது இந்த பேச்சை மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குலுங்கிக் குலுங்கிச் சிரித்து ரஜினிக்கு வணக்கம் வைத்து அவரது பாராட்டை ஆமோதித்தார்.
ரஜினியின் பேச்சைப் பார்த்த திமுக முக்கிய நிர்வாகிகள், ‘இன்றைய திமுகவில் நடப்பதை ரஜினி மிகச்சரியாக சுட்டிக்காட்டி இருக்கிறார். ஸ்டாலினை சிறுவயதில் இருந்து பார்த்து வந்த மூத்த தலைவர்கள் இன்று அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த அணுகுமுறையை சீனியர்கள் உதயநிதியிடம் காட்டத் தயாராக இல்லை.
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று வெளிப்படையாக எல்லோரும் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால், உதயநிதி இன்னமும் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. உள்ளபடியே சொல்லப் போனால் உதயநிதி தான் துணை முதலமைச்சர் ஆவதை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார்.
இதற்கு காரணம் என்னவென்றால் இப்போதைக்கு கட்சி அமைப்பில் பத்து முதல் 15 சீனியர் மாவட்ட செயலாளர்கள், ரஜினி பாஷையில் சொல்லப் போனால் பழைய ஸ்டூடன்ட்ஸ்கள் தங்களது விருப்பம் போல செயல்பட்டு வருவதாக உதயநிதிக்கு துல்லியமான ரிப்போர்ட்கள் சென்றிருக்கின்றன.
கட்சி ரீதியாக சில அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு அந்த இடங்களுக்கு புதிய ஸ்டூடன்ட்ஸ்களை கொண்டுவர வேண்டும் என்று உதயநிதி விரும்புகிறார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் அவர் தரவுகளோடு கோரிக்கை வைத்தும் கட்சி ரீதியாக அந்த நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
’நான் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். அதே நேரம் கட்சியில் சில முக்கியமான மாற்றங்களை செய்தால்தான், நான் துணை முதலமைச்சர் ஆவதற்கு அர்த்தம் இருக்கும். அந்த 10 முதல் 15 மாவட்ட செயலாளர்களின் அதிகார குறைப்பு, ஆதிக்க குறைப்பு ஆகியவை நடந்தால்தான் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வேன்’ என்று ஸ்டாலினிடம் உதயநிதி நிபந்தனை விதித்திருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில்தான், ’தனக்கென்று சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிற உதயநிதி’ என்று பேச்சை தொடங்கும்போதே உதயநிதியை பாராட்டி இருக்கிறார் ரஜினிகாந்த்.
அதேநேரம் கட்சியில் எதேச்சதிகாரம் மிக்கவர்களாக இருக்கும் சீனியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத வரை துணை முதலமைச்சர் பதவியை ஏற்பதில் அர்த்தமில்லை என்றும் கருதுகிறார் உதயநிதி.
இதுதான் துணை முதலமைச்சர் பதவி ஏற்பதற்கு தாமதப்படுவதற்கான காரணம். விரைவில் ரஜினி சொன்னதைப் போல ஸ்டாலின் பழைய ஸ்டூடன்ட்ஸ்களுக்கு பதிலாக புதிய ஸ்டூடன்ட்ஸ்களை கொண்டுவந்த பிறகு உதயநிதி துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்வார்’ என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கலைஞரை இரண்டு முறை சோகமாகப் பார்த்திருக்கிறேன்… நினைவுகளைப் பகிர்ந்த ரஜினி
பிள்ளை போல கவனித்துக் கொண்ட வேலு: மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்திய ரஜினி
பாடாய்ப்படுத்தும் சீனியர்கள்… அசால்டாக சமாளிக்கும் ஸ்டாலின்… ரஜினி கலாய்!