ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் நாதக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட்டை வாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் டெபாசிட் தொகை என்றால் என்ன?
தேர்தல் பாதுகாப்பு வைப்புத்தொகை என்பது ஒரு வேட்பாளர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் செலுத்த வேண்டிய தொகையாகும்.
போதிய ஆர்வமற்றவர்களும், பொழுதுபோக்காக போட்டியிட நினைப்பவர்களையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓரளவு தடுக்கும் நோக்கில் தேர்தல் டெபாசிட் தொகை வசூலிக்கப்படுகிறது.
இந்த தொகை தேர்தலுக்கு தேர்தல் மாறுபடும். 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் ஏற்ற வகையில் மாறுபடும்.
நாடாளுமன்ற எம்.பி.தேர்தலுக்கு டெபாசிட் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் இந்த தொகையில் பாதியாக ரூ.12,500 செலுத்தினால் போதும்.
இதுவே சட்டமன்றத் தேர்தல் அல்லது கவுன்சிலர் தேர்தல் என்றால் ரூ.10,000 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.5,000 செலுத்த வேண்டும்.
குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களில் கூட ரூ.15,000 டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.
டெபாசிட் காலி
இவ்வாறு டெபாசிட் செய்யப்படும் தொகையானது, வேட்பாளர்களுக்கு திருப்பி கொடுக்கப்படும். ஆனால் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்கினை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
உதாரணமாக 6000 வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்றால் அதில் ஒரு பங்கு வாக்கான 1000 வாக்குகள் வாங்கியிருந்தால் மட்டுமே டெபாசிட் பணம் திருப்பி கொடுக்கப்படும். இல்லை என்றால் டெபாசிட் தொகை கிடைக்காது.
ஒரு வேட்பாளர் தனது வேட்புமனுவை கடைசித் தேதிக்குள் வாபஸ் பெற்றாலோ அல்லது வாக்குப்பதிவுக்கு முன்பாக மரணமடைந்தாலோ, அந்தத் தொகை திருப்பி அளிக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் டெபாசிட் பணம் திரும்ப கொடுக்கப்படும். இப்படி டெபாசிட்டை இழக்கும் வேட்பாளர்களின் பணமானது தேர்தல் செலவினங்களுக்கு உதவும்.
அதன்படி தற்போது ஈரோடு கிழக்கில் பதிவாகியுள்ள 1,70,192 வாக்குகளில் சுமார் 28,365 வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் டெபாசிட் இழக்க நேரிடும்.
மதியம் வரை தேர்தல் ஆணையம் 5 சுற்று முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் தற்போது,
காங்கிரஸ் – 39648
அதிமுக – 13643
தேமுதிக – 517
நாம் தமிழர் – 3354 வாக்குகளை பெற்றுள்ளன.
மதியம் 1.45 மணி நிலவரப்படி 8ஆவது சுற்று வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் தொடங்கியிருக்கிறது. இதில் காங்கிரஸ் 53,735 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறது.
அதிமுக 28 ஆயிரம் வாக்குகளைக் கடந்து பத்தாவது சுற்றில் தனது டெபாசிட்டை தக்கவைத்துக் கொண்டது. நாம் தமிழர் கட்சி 3,604, தேமுதிக 600 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழக்கும் நிலையில் இருக்கிறது.
பிரியா
“இடைத்தேர்தலில் பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்”: முதல்வர்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் ஒரு குற்றவாளி கைது!