உயர்கல்வியில் மறுக்கப்படும் இட ஒதுக்கீடு!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ரவிக்குமார்

2021-22 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் ஆய்வறிக்கை (AISHE Report)  வெளியாகியுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிரிவினரின் இட ஒதுக்கீடு எந்த அளவுக்குப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்த அறிக்கையில் வெளியாகியிருக்கும் புள்ளி விவரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இப்போது 15,97,688 ஆசிரியர்கள் பணி புரிவதாக அந்த அறிக்கை கூறுகிறது ( பக்கம் 161). அதில் எஸ்சி பிரிவினருக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தால் 2,39,653 பேர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 1,48,635 பேர்தான் எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக உள்ளனர். 91,018 இடங்கள் மறுக்கப்பட்டு பின்னடைவாக உள்ளன. எஸ்டி பிரிவினருக்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும். அதன்படி 1,19,826 பேர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 41,607 பேர் மட்டுமே எஸ்டி பிரிவிலிருந்து ஆசிரியர் பணியில் உள்ளனர். 78,159 இடங்கள் மறுக்கப்பட்டு பின்னடைவாக உள்ளன.

ஆசிரியர் அல்லாத பணியிடங்களிலும் இதே போன்று இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக 12,08,446 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உள்ளன. அதில் எஸ்சி வகுப்பினர் 181876 பேர் உள்ளனர்; எஸ்டி வகுப்பினர் 56,569 பேர் உள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் 4 ஆம் நிலை பதவிகளிலேயே உள்ளனர்.

ஒன்றிய அரசின் பங்கு

உயர்கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் மாநில அரசுகளால்தான் நடத்தப்படுகின்றன. மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, ஐஐஎம், போன்ற நிறுவனங்கள்தான் ஒன்றிய அரசால் நடத்தப்படுபவை. அவற்றிலும் ஆயிரக் கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன.

இது தொடர்பாக 12.12.2022 அன்று நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பியபோது அதற்குப் பதில் அளித்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் “ பின்னடைவு காலிப் பணியிடங்களையெல்லாம் உடனடியாக நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், இதற்காகக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு மாதந்தோறும் அது ஆய்வு செய்கிறது என்றும்; 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘ மத்திய கல்வி நிறுவனங்கள் ( ஆசிரியர் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தவொரு பணியிடமும் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படவில்லை என்றும் பதிலளித்திருந்தார்கள்.

அதுமட்டுமின்றி, மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி பிரிவினருக்கென ரிசர்வ் செய்யப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231ம்; 620இணைப் பேராசிரியர் பதவிகளில் 401 ம்; 1357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276 ம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

எஸ்டி பிரிவினருக்கு அதுபோலவே 123 பேராசிரியர் ,232 இணைப்பேராசிரியர் மற்றும் 188 உதவிப்பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளன.

ஓபிசி பிரிவினருக்கு 367 பேராசிரியர் பதவிகளில் 311 பதவிகளும்; 752 இணைப்பேராசிரியர் பதவிகளில் 576 ம்; 2332 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 672 ம் நிரப்பப்படவில்லை.

ஐஐடிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 11170 ஆசிரியர் பதவிகளில் 4502 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.

ஐஐஎம்-களில் எஸ்சி பிரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 97 பதவிகளில் 53 இடங்களும் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 40 பதவிகளில் 34 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை. “எனவும் அமைச்சர் தெரிவித்தார். அந்தப் பணியிடங்களையெல்லாம் நிரப்புமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒன்றிய கல்வி அமைச்சருக்குக் கோரிக்கை கடிதம் அளித்து வலியுறுத்தினோம்.

தமிழ்நாட்டிலும் நீதி கிடைக்கவில்லை

இந்தியாவிலேயே உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இது பெருமைக்குரியதுதான். ஆனால், 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட மறைமுக சனாதனக் கொள்கைகளின் காரணமாக எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குத் தமிழ்நாட்டிலும் இட ஒதுக்கீடு சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் எஸ்சி பிரிவினருக்கு 1,35,79 இடங்கள் குறைவாக வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின்படி 18% இடங்கள் எஸ்சி பிரிவினருக்கு வழங்க வேண்டும். இங்கு உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் என மொத்தம் 2,08,736 பேர் ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். அதில் 1,47,003 பேர் (70.42%) ஓபிசி சாதிகளைச் சேர்ந்தவர்கள்; 23,993 பேர் (11.49%) எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள்; 553 பேர் (0.26%) எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள். எஸ்சி வகுப்பினருக்கு 18% இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டிருந்தால் 37,572 பேர் ஆசிரியர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் 23,993 பேர் மட்டுமே கல்லூரி ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர்.

அதாவது, 13,579 ஆசிரியர் பணியிடங்கள் மறுக்கப்பட்டு பின்னடைவு காலிப் பணியிடங்களாக ( backlog vacancies) உள்ளன. அதுபோலவே எஸ்டி பிரிவினருக்கு 1% இட ஒதுக்கீட்டின்படி 2087 பேர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெறும் 553 பேர் மட்டுமே இதுவரை ஆசிரியர் பணியைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு 1534 இடங்கள் மறுக்கப்பட்டுப் பின்னடைவாக உள்ளன.

ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 154708 இடங்களில் எஸ் சி பிரிவினர் 25,569 உள்ளனர். ஆனால் 18% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அவர்களுக்கு 27,847 இடங்கள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது 2278 இடங்கள் மறுக்கப்பட்டு பின்னடைவாக உள்ளன. இவற்றைத் தற்போதுள்ள திமுக அரசு நேர்செய்து சமூகநீதியைக் காக்க வேண்டும்.

இந்திய அளவில் உயர்கல்வித்துறைப் பணிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் இப்படி புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில்தான் இட ஒதுக்கீட்டை ரத்துசெய்து பொதுப் பிரிவினரைக் கொண்டு நிரப்பலாம் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சர் அவ்வாறு செய்யமாட்டோம் என ‘ட்வீட்’ செய்திருக்கிறாரே தவிர யுஜிசி தரப்பிலிருந்து அந்த வழிகாட்டு விதிகளைத் திரும்பப் பெற்றதாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

மக்களின் எதிர்ப்பைத் தணிப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு கையாளும் வழக்கமான பொய்ச் செய்திப் பரப்பலே இது. இந்த மோசடியில் நாம் ஏமாந்துவிடக் கூடாது. யுஜிசி தனது வழிகாட்டு விதிகளைத் திரும்பப் பெறும்வரை நாம் ஓயக்கூடாது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்டுரையாளர் குறிப்பு:

Denial of SC ST reservation in higher education by Ravikumar

முனைவர் டி.ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

ஜடேஜா, கே.எல்.ராகுல் அவுட்: குட்டி சிங்கத்திற்கு வாய்ப்பளித்த பிசிசிஐ

ராணுவத்தினரிடம் குறைந்து வரும் ஃபிட்னஸ் : அதிரடி கொள்கை அறிவிப்பு!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதி வெளியானது!

தங்கலானால் தள்ளிப்போகும் கங்குவா?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *