சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப் பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க சென்ற சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “செந்தில் பாலாஜியை பார்த்து உடல் நலத்தை விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்த போது அவரை பார்ப்பதற்கான அனுமதி எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் மருத்துவர்களை சந்தித்து பேசிய போது அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தொடர் சிகிச்சையும் செந்தில் பாலாஜிக்கு தேவைப் படுகிறது.
எவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமோ அவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு முடிவுக்கு வந்த பிறகு தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளக்கூடிய சிகிச்சைகள் குறித்து அவருடைய குடும்பமும் , தமிழக அரசும் நல்ல ஒரு முடிவை எடுத்து அவருக்கு விரைவான சிகிச்சை அளிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும்” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சில மாதங்கள் சிறை: செந்தில்பாலாஜியின் சட்ட நிலை!
சமரசம் செய்யாமல் களத்தில் இறங்கிய எஸ்.ஜே.சூர்யா
செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி!