தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் பாஜக நிர்வாகி பிரசாந்த் குமார் உம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்புத் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்றும், கொல்லப்படுவது போன்றும் போலி வீடியோக்கள் வைரலாகின.
இதுதொடர்பாக தமிழக போலீசாரும், பீகார் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் வதந்தி பரப்பியதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பிரசாந்த் உம்ராவை கைது செய்யத் திருச்செந்தூர் டி.எஸ்.பி வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தச்சூழலில் அவர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
ஆனால், தமிழகத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 10 நாட்களுக்குள் அதாவது மார்ச் 20ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும். அங்கு மனுதாரர் நிவாரணத்தைக் கேட்கலாம் என டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்மித் சிங் தெரிவித்தார்.
இதனால் பிரசாந்த் உம்ரா முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு இன்று (மார்ச் 14) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், “மனுதாரர் பதிவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். அவரது செயலால் இந்தியா முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி, இந்த வீடியோக்களை பார்க்கும் போது தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது என்று கருத்து கூறியதுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்து உத்தரவிட்டார்.
இந்த மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன் வழக்கு விசாரணையை வரும் மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பிரியா
மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்: முதல்வர் அறிவிப்பு!
பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்!