மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று அறிவித்தார். இந்த நடவடிக்கையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மீதான மத்திய அரசின் தடையை எதிர்த்து மொத்தம் 58 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மத்திய அரசின் பரிசீலிக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், நீதிமன்றம் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் வாதிட்டனர்.
எந்தவித உறுதியான நிவாரணமும் வழங்க முடியாத ஒரு விஷயத்தை, நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்று மத்திய அரசு பதில் வாதத்தை முன்வைத்தது.
நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜனவரி 2ஆம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது. அதன்படி இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
அதில் மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். “ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசித்த பிறகே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தவறு என்று சொல்ல முடியாது. இப்படியொரு முடிவை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுகளை மாற்றிக்கொள்ள 52 நாட்கள் அவகாசம் வழங்கியது போதாது என்று கூற முடியாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கலை.ரா
Comments are closed.