சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின தொழிலாளியின் பாதங்களை இன்று (ஜூலை 6) கழுவி, மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான்.
சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அந்த வீடியோவில் ஒரு நபர் அமர்ந்திருக்க அவர் மீது இன்னொரு நபர் சிகரெட் புகைத்துக் கொண்டே சிறுநீர் கழிக்கிறார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் பாதிக்கப்பட்ட நபர் பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான தொழிலாளி தஷ்மத் ராவத் என்பதும் மனிதாபிமானமற்ற அந்தச் இழி செயலைச் செய்தவர் பிரவேஷ் சுக்லா என்பதும் இவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த இழி செயலை கண்டித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதனிடையே மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல் நாத், “சித்தி மாவட்டத்தில் பழங்குடியின இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ பரவி வருகிறது. ஒரு பண்பட்ட சமூகத்தில் பழங்குடியின இளைஞர் மீதான இத்தகைய கொடூரமான செயலை நிறைவேற்ற இடமில்லை.
இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த மத்தியப் பிரதேச மாநிலத்தையும் தலைகுனியச் செய்துள்ளது.
இந்தக் கொடுமையைச் செய்தவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி மக்கள் மீதான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 5) அதிகாலை அந்த இழி செயலை செய்த பிரவேஷ் சுக்லா என்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசி சட்டப் பிரிவுகள் 294 (பிறருக்கு தொல்லை தரும் வகையில்,
பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல்), 504 (அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு அவமானப்படுத்துதல்) ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டியதாக பிரவேஷ் சுக்லாவின் வீட்டை, மாவட்ட நிர்வாகம் புல்டோசர் வைத்து இடித்து தள்ளியது.
இந்நிலையில், சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின தொழிலாளியின் கால்களை மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் கழுவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை 6) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பொதுமக்களே கடவுள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
யாருடைய அட்டூழியங்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் மரியாதையும் எனது மரியாதை”என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.2.24 லட்சம் பறிமுதல்!
குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் கிச்சா சுதீப்