ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்ற ஒன்றை உருவாக்கி அருவருக்கத்தக்க ஜனநாயக படுகொலையை அரங்கேற்றிருக்கிறது ஆளும் தி.மு.க. என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்ற நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளதாக கூறி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ வேட்பாளராகப் போட்டியிட்ட தென்னரசுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயக படுகொலையை ஈரோடு இடைத்தேர்தல் களத்திலும் தி.மு.க அரங்கேற்றியது. திருமங்கலம் ஃபார்முலா என்கிற பெயரில் வாக்குகளை விலை பேசியதைப் போல, ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்ற ஒன்றை உருவாக்கி ஆடு, மாடுகளை அடைப்பது போல் வாக்காளர்களை அடைத்து வைத்து அருவருக்கத்தக்க ஜனநாயக படுகொலையை அரங்கேற்றிருக்கிறது ஆளும் தி.மு.க.
தி.மு.க-வின் மக்கள் அடைப்பு முகாம்கள் ஈரோடு கிழக்குத் தொகுதி முழுவதும் பரவலாக முளைத்திருந்தன. அந்த இடத்துக்கு வர மறுத்த அப்பாவி மக்கள் தி.மு.க-வினரால் மிரட்டப்பட்டார்கள்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு, மக்களை அடைத்து வைத்தல், கட்டற்ற முறையில் பணம், மது, பரிசுப் பொருள்கள் விநியோகித்தல், மக்களை மிரட்டி அச்சமூட்டுதல், கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களை கோயில் முன்னால் நிறுத்தி எலுமிச்சை பழத்தின்மீது சத்தியம் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தி வாக்குக் கொள்ளை நடத்தல் என்று தி.மு.க நடத்திய வரலாறு காணாத அட்டூழியங்களை அ.தி.மு.க வெளிக்கொண்டு வந்தும் புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஜனநாயக முறைப்படி இந்த இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தால் கழகம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும். ஆனால் தி.மு.க-வினர் பணநாயகத்தின் மூலமாக காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறவைத்திருக்கின்றனர்.
எல்லா அராஜக அத்துமீறல்களையும் அரங்கேற்றி, அருவருக்கத்தக்க ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி அற்ப வெற்றியை வசப்படுத்தி இருக்கிறது ஆளும் தி.மு.க-வின் வெற்றி ஜனநாயகத்தின் தோல்வி. தமிழ்நாட்டில் அரசியல் அரசின் தோல்வி.
அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாகும் என்கிறது தமிழ். அறத்தையே அழித்தொழிக்கும் அரசியல் பிழைகளை நிகழ்த்தியிருக்கும் தி.மு.க-வின் நாள்கள் எண்ணப்படுகின்றன.அராஜகங்களும், பாசிச நடைமுறைகளும் என்றென்றும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்காது. விரைவில் வீழும்.
ஒரு குடும்பம் மட்டும் அசுர வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகார துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள், வன்முறை, சட்டம் ஒழுங்கை சீர்கெடுப்பது, வெற்று வாக்குறுதிகளை அளிப்பது, விளம்பரங்கள் செய்வது முதலான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தி.மு.க-வினரின் முகத்திரையைக் கிழித்து அ.தி.மு.க-வின் மக்களாட்சி மீண்டும் வளர்வதற்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து களப்பணியாற்றிட, கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் வீர சபதம் ஏற்போம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
எடப்பாடியை தூக்கி எறிந்தால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும்: பண்ருட்டி ராமச்சந்திரன்
நாடாளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக: ஈரோடு கிழக்கு குறித்து சசிகலா