தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்யாவை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று(ஜனவரி 6)நேரில் சந்தித்து சில கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா மருந்துகளை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினோம்.
மேலும் கொரோனாவுக்கு மூக்கு வழியே தடுப்பு மருந்து என்பது தனியார் மருத்துவமனைகளில் மட்டும் ரூ. 800 கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருப்பதாக அறிந்தோம்.
எனவே ஏற்கனவே பூஸ்ட்டர்கள் எப்படி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறதோ, அப்படியே இதையும் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் ரூ. 800 கோடி நிலுவையில் இருக்கிறது. அதையும் தரும்படி கேட்டிருக்கிறோம். அந்த நிதியை விடுவிக்க உத்தரவிட்டுள்ளனர்.
எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருபவர்களில் 15 சதவீதம் பேர் மத்திய அரசால் நிரப்பப்படுகிறார்கள். கடந்த ஆண்டு 10க்கும் மேற்பட்டஇடங்கள் நிரப்பப்படாமல் போனது.
அதேபோன்று இந்த ஆண்டும் 6 இடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே அந்த இடங்களை மாநில அரசுக்குத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்திருக்கின்றனர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து நிறுவவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்” என்றார்.
அப்போது நீட்டுக்கு இந்த ஆண்டு தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“நீட் விலக்கிற்கான எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆட்சி அமைந்த நாளில் இருந்து இன்று வரை அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். உறுதியாக நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், சட்டமன்றத்தில் அதிமுக தீர்மானம் கொண்டு வந்தால் பல கேள்விகள் விஜயபாஸ்கரிடம் தான் கேட்கவேண்டும்.
எந்த அடிப்படையில் அவர்கள் செவிலியர்களை பணியில் அமர்த்தினார்கள் என்பதை தெளிவுப்படுத்தவேண்டும் என்றார்.
கலை.ரா
இணைய சேவை முடங்கினாலும் இனி ’வாட்ஸ் அப்’ பயன்படுத்தலாம்!
பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி: உச்ச நீதிமன்றம் கொடுத்த பதில்!