மேடையில் ஸ்டாலினுக்கு உதயநிதி வைத்த டிமாண்ட்!

Published On:

| By christopher

தமிழரின் அடையாளத்தை அழிக்க நினைத்தால், இன்னும் 2000 ஆண்டுகள் ஆனாலும் பாஜக காலடி எடுத்து வைக்க முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநில அளவிலான 2வது  திமுக இளைஞரணி மாநாடு`மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில் சேலத்தில் இன்று (ஜனவரி 21) நடைபெற்று வருகிறது.

இதில் அமைச்சரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!

அவர் பேசுகையில், “பத்தாண்டு கால பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டக்கூடிய படையாக சேலத்தில் வீரத்தோடு திமுகவின் இளைஞர் படை திரண்டுள்ளது.

பிறந்தநாள், அமைச்சரான நாள் போன்று இந்த ஜனவரி 21ஆம் தேதியும் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நாள்.  திமுகவின் இளைஞரணி மாநாட்டை ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்கிறது. 2024ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெற்றி மாநாடாக இது அமைந்துள்ளது.

மாநில உரிமைகளை பறிப்பதையே ஒன்றிய அரசு முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க-வின் உதவியுடனும், தவழ்ந்து தவழ்ந்து முதல்வரான பழனிசாமியின் துணையோடும்தான் நம் உரிமைகளை ஒன்றிய அரசு பறித்தது.

கல்வி, சுகாதாரம் என எல்லா துறைகளிலும் மாநில அரசின் உரிமைகளை சட்டத்துக்கு புறம்பாக ஒன்றிய அரசு பறித்து நம்மை வஞ்சித்துள்ளது.

ஒரு பைசா கூட தரவில்லை!

முக்கியமாக வரி வருவாய். நாம் மத்திய அரசு அரசுக்கு 1 ஒரு ரூபாய் அனுப்பினால், நமக்கு அவர்கள் திருப்பி கொடுப்பது வெறும் 29 பைசா.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாடு வரியாக கட்டியிருக்கிறது. ஆனால், அவர்கள் திருப்பி கொடுத்தது வெறும் ரூ.2 லட்சம் கோடிதான்.

இதனால் மாநில அரசு மக்களுக்கான திட்டங்களை செய்ய முடியாத சூழலை ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது.

அதற்கு சிறந்த உதாரணம். சமீபத்தில் நடந்த மழைவெள்ள பாதிப்பு.

தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள பாதிப்புக்கான நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. நிர்மலா சீதாராமன் கேட்ட மரியாதையை அவர்கள் கேட்டது போலவே நான் கொடுத்துவிட்டேன். ஆனால் நாங்கள் கேட்ட நிதியில் ஒரு பைசா கூட அவர்கள் தரவில்லை.

நம்முடைய கல்வி, மொழி, நிதி, வேலைவாய்ப்பு உரிமைகள் பறிப்பு, அதிகார குறைப்பு, பண்பாட்டு ரீதியான தாக்குதல் என நம்மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதலை ஒன்றிய அரசு நடத்தி வருகிறது.

புதிய கல்விக் கொள்கை என்று கூறி ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கொண்டு வருகிறார்கள்.

நீட் மிகப்பெரிய உயிர்க் கொல்லி நோயாக மாறியிருக்கிறது. அனிதா முதல் ஜெகதீஸ்வரன் என 11 குழந்தைகள் இதுவரை இறந்திருக்கிறார்கள். இப்போது மருத்துவம் மட்டும் இல்லாமல், எல்லா பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு வரப்போகிறது என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்காமல், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பாஜக அரசு வழங்குகிறது.

திமுககாரன் வீட்டு கைக்குழந்தை கூட பயப்படாது!

மொழி நம்முடைய உரிமை மட்டுமல்ல, தமிழ் நம்முடைய உயிர். தமிழ் மொழியை அழிக்க நினைத்தால், எங்கள் உயிரை கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

2,000 வருடங்களாக தமிழ்நாட்டில் கால் வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், இன்னும் 2000 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் வெற்றிபெற முடியாது. உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற முடியாது.

தமிழரின் அடையாளத்தை அழிக்க நினைத்தால், நீங்கள்தான் அழிந்து போவீர்கள். நீட் எதிர்ப்பிற்கு டெல்லியிலும் போராட்டம் நடத்த திமுக இளைஞரணி தயாராக உள்ளது.

அதேபோல மத்திய அரசை கேள்வி கேட்டால் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ வரும் என மிரட்டுகின்றனர். மிரட்ட முடியும் என்று நினைக்கிறார்கள்.

நாங்கள் ED-க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். மத்திய அரசின் மிரட்டல்களுக்கு திமுககாரன் மட்டுமல்ல; திமுககாரன் வீட்டு கைக்குழந்தை கூட பயப்படாது.

இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதே லட்சியம்!

இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி என அனைத்தையும் கழகத் தொண்டர்களாகிய நாம்தான் காப்பாற்ற வேண்டும். 10 ஆண்டுகால பாசிச பாஜக ஆட்சியை விரட்ட தயாராகி விட்டோம்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி என 40 இடங்களிலும் நம்முடைய இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.

நம் முதல்வர் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்து இந்திய பிரதமராக வரவேண்டும்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற இருக்கிறது. பாசிஸ்ட்டுகளின் காலம் முடிவுக்கு வரவிருக்கிறது.

இந்த நேரத்தில் நான் முக்கிய கோரிக்கையை வைக்கிறேன்.

திமுக இளைஞரணிக்கு நான் செயலாளராக இருந்தாலும், நீங்கள் (ஸ்டாலின்) தான் நிரந்தர தலைவர். அந்த வகையில், வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் இளைஞரணியைச் சேர்ந்த தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

அதன்மூலம் இந்தியா முழுவதும் காவி சாயம் பூச நினைக்கின்ற பாசிஸ்ட்டுகளை நாம் வீழ்த்த முடியும்.

தொடர்ந்து பெரியார், அண்ணா, கலைஞர், கழக தலைவர் என திராவிட இயக்க ஆசிரியர்களின் சுயமரியாதைமிக்க கொள்கை வழியில் பயணித்து சமூகநீதி,மாநில சுயாட்சி உரிமை காப்போம்” என்று  உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”பாஜக உள்ளேயே யுத்தம் ஆரம்பித்துவிட்டது” : ஆ.ராசா

கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் : சேலம் மாநாட்டில் ஸ்டாலின் மெசேஜ்

GOAT பர்ஸ்ட் சிங்கிள் எப்போது?… வெளியான புதிய தகவல்!

 

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel