டெல்லி பயணம், அமித் ஷாவுடன் சந்திப்பு… அண்ணாமலை பேட்டி!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (மார்ச் 23) டெல்லி சென்றுவிட்டு இன்று தமிழ்நாடு திரும்பியுள்ளார். தென்காசியில் நடக்கும் பாஜக நிகழ்வுக்கு செல்வதற்காக இன்று (மார்ச் 24) மதுரைக்கு வந்த அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரது டெல்லி விசிட் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அண்ணாமலை,
“நான் டெல்லி சென்று வருவது அடிக்கடி நடப்பதுதான். புதிது கிடையாது. பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை சந்தித்தேன்.
கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு, முன்று முறை கர்நாடக தேர்தலுக்காக வேறு விஷயங்களுக்காக சந்தித்தோம். நேற்று உள்துறை அமைச்சரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தோம்.,
பாஜகவை பொறுத்தவரை அகில இந்திய தலைமையில் இருந்து தமிழ்நாட்டில் கடைக் கோடி தொண்டன் வரை இருக்கும் நினைப்பு எப்படி கட்சியை வலிமைப்படுத்துவது, தமிழ்நாடு மக்களின் அன்பை எப்படி பெறுவது, எப்படி ஆளுங்கட்சியாக கொண்டுவருவது என்பதில் ரொம்ப தெளிவாக இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்து 22 மாதம் ஆகியிருக்கிறது. ஈரோடு தேர்தல் நடந்திருக்கிறது… பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான ஃபீட் பேக்குகளை எடுத்துச் சொல்லும் ஒரு வழக்கமான சந்திப்புதான் இது. அது தொடர்பாகத்தான் நட்டா, அமித் ஷா அமைப்புப் பொதுச் செயலாளர் சந்தோஷுடன் பேசினேன்.
பாஜகவில் எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பின் தன்மையை முழுமையாக உணர்ந்திருக்கிறோம், கூட்டணியை பொறுத்தவரை கட்சியின் பார்லிமெண்டரி போர்டு இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் மூத்த தலைவர்கள் கலந்துகொள்ளும் அந்த பார்லிமெண்டரி குழுவில்தான் நாட்டின் தன்மை, விசாலமான பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டணி பற்றிய முடிவை எடுப்பார்கள். அதில் குழப்பம் இல்லை.
பாஜகவுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த கட்சியோடும் எந்த தலைவரோடும் கோபம் கிடையாது. அதிமுக 72 இல் தொடங்கப்பட்டது. அந்தக் கட்சியில் இருந்து முதல்வராக இருந்திருக்கிறார்கள். அவர்கள் பெரிய கட்சி. அவர்கள் வளர வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை.
அதேபோல பாஜக வளரவேண்டும் என்று நாங்கள் நினைப்பதும் தவறு இல்லை. அதில் சில உரசல்கள் வருவது சகஜகம்தான். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரச்சினைகள் இல்லை. குறிப்பாக பாஜக வேகமாக வளரவேண்டும் என்று நோக்கத்தில் இருக்கிறோம்” என்றவரிடம்,
“தமிழ்நாட்டில் நடைபயணம் எப்போது?” என்ற கேள்வி கேட்டனர் செய்தியாளர்கள்.
“கர்நாடகாவில் தேர்தல் இணைப் பொறுப்பாளராக நான் இருப்பதால் தமிழ்நாட்டில் எனது சுற்றுப் பயணத்தை கர்நாடக தேர்தலைப் பொறுத்துதான் முடிவு செய்யவேண்டும்” என்றார் அண்ணாமலை.
சட்டமன்றத்தில் நேற்று நடந்த எடப்பாடி- பன்னீர் தரப்பு மோதல் பற்றி கேட்டபோது, “அதிமுக உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடவில்லை. அது அவர்கள் பொறுப்பு” என்று பதிலளித்தார் அண்ணாமலை.
–வேந்தன்
ராகுல் எம்.பி. பதவிக்கு ஆபத்தா? சட்டம் என்ன சொல்கிறது?
டி.எம்.எஸ் சாலையைத் திறந்து வைத்தார் முதல்வர்