வைஃபை ஆன் செய்தவுடன் டெல்லியில் நடக்கும் ஒரு விருந்து அழைப்பிதழ் இன்பாக்சில் வந்து விழுந்தது. அதை படித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“சென்னை பல்லாவரத்தில் அரசு திட்டப் பணிகளை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, “நான் கொண்டாட்டமான சமயத்தில்தான் இங்கே வந்திருக்கிறேன். இன்னும் சில நாட்களில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. புதிய ஆற்றல், புதிய நம்பிக்கைகள், புதிய விருப்பங்கள், புதிய தொடக்கங்களுக்கான நேரம் இது” என்று கூறினார்.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவிலும் சில விவகாரங்களில் புதிய தொடக்கங்கள் நிகழ்வதற்கான அறிகுறிகள் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள் நிர்வாகிகள். அதில் முக்கியமான ஒன்று தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஏற்பாடு செய்திருக்கும் விருந்து.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றதில் இருந்தே மத்திய இணை அமைச்சராக மோடியின் கேபினட்டில் இருக்கும் எல்.முருகனுக்கு தமிழக பாஜகவில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. கமலாலயத்துக்குள் அவர் தேவையில்லாமல் வரக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு செல்வதையே குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு முருகனுக்கு கமலாலயத்தில் ஓர் அறையை ஒதுக்கியது தேசிய தலைமை. அப்போதில் இருந்து முருகனின் செயல்பாடுகள் கட்சி அளவில் கொஞ்சம் வீரியமாக இருந்தன.
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமம் பகுதியில் சக்தி கேந்திரா எனப்படும் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார் எல்.முருகன். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சொல்லாமலேயே துணைத் தலைவர் கரு. நாகராஜனிடம் தகவல் சொல்லிவிட்டு மாவட்ட தலைவரான காளிதாஸ் மூலம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார் முருகன்.
இந்த காளிதாஸ் இப்போதைய தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தீவிர ஆதரவாளர். இந்த நிகழ்ச்சியில்தான் தமிழ்நாட்டில் பாஜக ஒன்பது தொகுதிகளை குறிவைத்திருக்கிறது என்றும், அதிமுக-பாஜக கூட்டணி வலுவாக இருப்பதாக அமித் ஷாவே கூறியிருக்கிறார் என்றும் செய்தியாளர்களிடம் பேசினார் முருகன்.
இதற்குப் பிறகு பல்வேறு மாவட்ட தலைவர்களை முருகனே தொடர்புகொண்டு நிர்வாகிகள் கூட்டம் ஏற்பாடு செய்யுமாறும் தான் வருவதாகவும் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்தான் ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகையின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலேயே இல்லாத நிலையில் எல்.முருகன் தான் பிரதமரை வரவேற்றது முதல் வழியனுப்பியது வரை உடன் இருந்தார்.
இத்தகைய அரசியல் சூழலில் டெல்லியில் முருகன் நடத்தும் விருந்துதான் இப்போது தமிழக பாஜகவுக்குள் விவாதமாகியுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடு வருடா வருடம் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதியை முன்னிட்டு டெல்லியில் தன் இல்லத்தில் விருந்து ஒன்றை நடத்துவார். அதில் பாஜக முக்கிய பிரமுகர்கள், கூட்டணிக் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பிற கட்சிப் பிரமுகர்களை அழைப்பார். பிரதமர் மோடி முதல் பல்வேறு கட்சி பிரமுகர்களும் அந்த விருந்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.
அதே ஃபார்முலாவை இப்போது பின்பற்றத் தொடங்கியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். டெல்லி காமராஜர் லேன், எண் 1 இல் அமைந்துள்ள தனது பங்களாவில் தமிழ்ப் புத்தாண்டுத் திருவிழாவை ஏப்ரல் 13 ஆம் தேதி அதாவது பங்குனி 30 ஆம் தேதி நடத்துகிறார் முருகன். இந்த விழாவில் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி சில கலை நிகழ்ச்சிகளும், விருந்தும் நடைபெறுகின்றன. பிரதமர் மோடியின் அனுமதியோடுதான் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளார் முருகன்.
தமிழ்நாட்டில் இருந்து சென்று பணியாற்றும் ஆளுநர்களையும், முக்கிய பாஜக பிரமுகர்களையும் அதிமுக பிரமுகர்களையும் எம்பிக்களையும் இந்த விருந்துக்கு அழைத்து வருகிறார் முருகன்.
தமிழக பாஜகவில் நிர்வாகிகள் கூட்டம், மோடி வருகையின்போது கிடைத்த முக்கியத்துவம், டெல்லியில் தமிழ் புத்தாண்டு விருந்து என்று எல்.முருகனுக்கு மோடி கொடுக்கும் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக பாஜகவில் கூறுகிறார்கள். அண்ணாமலையை மையமாக வைத்து சலசலப்புகளும் சர்ச்சைகளும் எழுந்துகொண்டிருக்கும் நிலையில் முருகனுக்கு டெல்லி கொடுக்கும் இந்த முக்கியத்துவம் தமிழக பாஜகவில் விவாதமாக ஆகியுள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள்!
கொரோனா – தயார் நிலையில் தமிழகம்: மா.சுப்பிரமணியன்