அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோ…தெலுங்கானா முதலமைச்சருக்கு சம்மன் அனுப்பிய டெல்லி காவல்துறை!

Published On:

| By vivekanandhan

அமித்ஷா பேசிய வீடியோவை தவறாக எடிட் செய்து பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அளித்துள்ளது.

ஏப்ரல் 23 ஆம் தேதி தெலுங்கானாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பாஜக ஆட்சியில் அமர்ந்தவுடன் முஸ்லீம்களுக்கு அம்மாநிலத்தில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ஒழிப்போம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும் அப்போது அவர் இட ஒதுக்கீடு என்பது எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி மக்களின் உரிமை, அது அவர்களுக்கே கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் அந்த வீடியோ ட்விட்டரில் சில பக்கங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மக்களின் இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜகவின் நோக்கம் என்று அமித்ஷா பேசுவதாக வெட்டி ஒட்டப்பட்டு ஓடியது.

அமித்ஷாவின் இந்த வீடியோ பரவியது குறித்து டெல்லி, அசாம் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையினர் தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும் அசாம் காவல்துறை அம்மாநிலத்தின் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரை கைதும் செய்துள்ளது.

தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் காங்கிரசின் நான்கு முக்கியப் பொறுப்பாளர்களுக்கு டெல்லி காவல்துறை CRPC பிரிவு 91-ன் கீழ் சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லி காவல்துறை அதிகாரிகள் ஹைதராபாத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு நேரடியாகச் சென்று, காங்கிரசின் சமூக வலைதள பொறுப்பாளரிடம் சம்மனை கையளித்துள்ளனர்.

அமித்ஷாவின் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதியப்பட்டிருந்ததாகவும், தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இருப்பதால் அவர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்று சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ரேவந்த் ரெட்டி, இதுநாள் வரையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவற்றை பயன்படுத்தி வந்த பாஜக, இப்போது டெல்லி காவல்துறையை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். ”தெலுங்கானா காங்கிரஸ் அலுவலகத்திற்கு நோட்டீசுடன் சென்ற டெல்லி காவல்துறையினர் சோசியல் மீடியா போஸ்ட்டுக்காக என்னை கைது செய்ய வேண்டுமென கூறியுள்ளனர்” என்றும் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார்.

கர்நாடகாவிலிருந்து ரேவந்த் ரெட்டி தெலுங்கானா திரும்பிய பிறகு, டெல்லி காவல்துறையின் சம்மனுக்கு பதில் அளிப்பார் என்று தெலுங்கானா முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்கக் கட்டிடத்திற்காக ரூ.1 கோடி அளித்த நெப்போலியன்

Gold Rate: மக்களே உஷார்… வெயிலும் ஏறுது, தங்கம் விலையும் ஏறுது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment