“ஆட்சி மாறும் போது டெல்லி மசோதா திரும்ப பெறப்படும்” – கெஜ்ரிவால்

Published On:

| By Selvam

delhi ordinance bill delhi cm arvind kejriwal

மத்தியில் ஆட்சி அதிகாரம் மாறும் போது டெல்லி மசோதா திரும்ப பெறப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம், பதவி உயர்வு போன்றவற்றை நியமிக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு வழங்கி மத்திய அரசு சட்டம் இயற்றியது.

இந்த சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதத்தின் போது இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி எம். பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதாவிற்கு 131 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 101 பேர் எதிராகவும் வாக்களித்ததால் மசோதா நேற்று நிறைவேறியது.

இந்தநிலையில் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதாவை நிறைவேற்றி பா. ஜ. க தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “டெல்லி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிடுவது ஏன்? ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கை டெல்லியில் தடுக்க பா. ஜ. க முயற்சிக்கிறது.

ஆனால் டெல்லி மக்கள் ஒருபோதும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெரும். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்த கூட்டணி கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள்.

மத்தியில் ஆட்சி அதிகாரம் மாறும் போது டெல்லி மசோதா திரும்ப பெறப்படும். இது டெல்லி மக்களை அடிமைப்படுத்தும் மசோதா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை பிரதமர் மோடி பறித்துள்ளார். அதிகாரத்தை பா. ஜ. க அரசு தவறாக பயன்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

மெட்ரோ: மாதவரம் பால் பண்ணை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

WI vs IND T20: தொடர் தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைவு: ஸ்டாலின் வருத்தம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.